கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல

  • விக்டோரியா கில்
  • பிபிசி அறிவியல் செய்தியாளர்
கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

நமது வாழ்நாளிலேயே இன்னொரு தீவிர கொள்ளை நோய்த் தொற்று வரும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வனவிலங்குகளிடம் இரு்து மனிதர்களுக்கு தொற்றிக் கொண்டு, வேகமாக உலகம் முழுக்க பரவக் கூடிய நோய்களின் ``சரியான சூறாவளி'' ஒன்றை நாம் உருவாக்கியுள்ளோம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

உலகில் இயற்கையின் மீது மனிதர்களின் ஆக்கிரமிப்பு இந்த வேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

புதிய நோய்கள் எங்கு, எப்படி உருவாகின்றன என்பது குறித்து உலக அளவில் சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டுள்ள ஆய்வில் இந்த எண்ணம் உருவாகியுள்ளது.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக எந்த வனவிலங்குகள் இருக்கும் என்பதை ஊகிக்கக் கூடிய அளவுக்கு, போக்குகளை கண்டறியும் நடைமுறை ஒன்றை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த அணுகுமுறையை பிரிட்டனில் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர். ஆனால் எதிர்கால நோய்த் தொற்றுகளுக்கு நல்ல முறையில் நம்மை தயார்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது.

`நாம் ஐந்து ஆபத்துகளில் தப்பியுள்ளோம்'

மாயா வார்டெஹ் உருவாக்கியுள்ள இந்தத் தகவல் தொகுப்பின் பார்வையில், ஒவ்வொரு கோடும் ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் உருவான ஒரு நோயைக் குறிக்கிறது.

பட மூலாதாரம், MAYA WARDEH

படக்குறிப்பு,

இனங்களுக்கு இடையே பரவும் நோய்களின் பட விளக்கம்

``கடந்த 20 ஆண்டுகளில், நாம் ஆறு குறிப்பிடத்தக்க ஆபத்துகளை சந்தித்திருக்கிறோம் - சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான் இன்புளூயன்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் - ஆகியவற்றை சந்தித்துள்ளோம்'' என்று லிவர்பூல் பல்கலைக்கழகப் பேராசிரியர் மாத்யூ பேலிஸ் பிபிசி செய்திப் பிரிவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ``நாம் ஐந்து ஆபத்துகளில் தப்பிவிட்டோம். ஆனால் ஆறாவது ஆபத்து நம்மை பிடித்துக் கொண்டுவிட்டது'' என்கிறார் அவர்.

``மேலும் நாம் எதிர்கொள்ளும் கடைசி நோய்த் தொற்றாக இது இருக்கப் போவதில்லை. எனவே வனவிலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை நாம் கூர்ந்து கவனித்தாக வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.

இப்படி கூர்ந்து கவனிப்பதன் ஒரு பகுதியாக, அவரும், அவருடன் பணிபுரியும் மற்றவர்களும், அறியப்பட்டுள்ள அனைத்து வனவிலங்கு நோய்கள் பற்றிய விரிவான தகவல் தொகுப்புகளை ஆய்வு செய்யக் கூடிய வகையில், போக்குகளை கண்டறியும் ஒரு நடைமுறையை உருவாக்கியுள்ளனர்.

அறிவியலில் அறியப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள், வைரஸ்களில், அவை தொற்றும் இனங்களின் வகைகள் மற்றும் எண்ணிக்கையைக் கண்டறியும் குறிப்புகளை இந்த நடைமுறை உருவாக்கும். மனிதர்களுக்கு எந்த இனம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதைக் காட்டுவதற்கு, அந்தக் குறிப்புகள் பயன்படுத்தப்படும்.

நோயை உருவாக்கும் கிருமியை முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என குறியீடு செய்யப்பட்டால், நோய்த் தாக்குதல் எதுவும் ஏற்படுவதற்கு முன்னதாகவே தடுப்பு நடவடிக்கைகள் அல்லது சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை தாங்கள் மேற்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மெர்ஸ் என்ற கொரோனா வைரஸ் தாக்குதல் ஒட்டகங்களிடம் இருந்திருக்கலாம்.

``எந்த நோய்கள், கொள்ளை நோய்களாக மாறும் என்பதைக் கண்டறிவதற்கான மற்றொரு புதிய நடவடிக்கையாக இது இருக்கும். ஆனால், இந்த முதலாவது நடவடிக்கையுடன் நாங்கள் முன்னேறத் தொடங்குகிறோம்'' என்று பேராசிரியர் பேலிஸ் கூறினார்.

முடக்கநிலை கற்றுத் தந்த பாடங்கள்

வனங்களை அழிப்பது மற்றும் வனவிலங்குகள் வாழும் பகுதிகளை நாம் ஆக்கிரமித்துக் கொண்டது போன்ற நம்முடைய போக்குகளால் தான் விலங்குகளிடம் இருந்து அடிக்கடி மனிதர்களுக்கு நோய்கள் பரவின என்பதை பல விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர்.

``விவசாயம் அல்லது தோட்டப் பயிர் செய்வதற்காக மலைச்சரிவுகளை ஆக்கிரமிப்பு செய்து, பல்லுயிர்ப் பெருக்க வாய்புகளை பாதிக்கச் செய்த காரணத்தால் தான், பல தொற்றுகள் உருவாவதற்கான ஆபத்து அதிகரித்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன'' என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர் கத்தே ஜோன்ஸ் கூறியுள்ளார்.

மனிதர்களிடம் இருந்தும் நோய்கள் பரவலாம்: செல்லப் பிராணிகள் வணிக இடங்களில் இருந்து மீட்கப்பட்ட குரங்குகளுக்கு சுவாசத் தொற்றுகள் பாதிக்காமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்தது.

``எல்லா நோய்களுக்கும் இப்படி நடக்கும் என்று சொல்லிவிட முடியாது'' என்று அந்தப் பெண் பேராசிரியர் கூறுகிறார். ``மனித இடையூறுகளை அதிக அளவில் தாங்கிக் கொள்ளக் கூடிய சுண்டெலி இனங்கள், நோய்க் கிருமிகளை வளரச் செய்து, தொற்றச் செய்யக் கூடியவையாக உள்ளன என்று தெரிய வந்துள்ளது'' என்கிறார் அவர்.

``எனவே பல்லுயிர்ப் பெருக்க சூழல் கெடுவதால், வன விலங்குகள் - மனிதர்கள் தொடர்பை அதிகரிக்கச் செய்கிறது. அதனால் சில வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள் மக்களுக்குப் பரவும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், VICTORIA GILL

படக்குறிப்பு,

காடுகளிலிருந்து மனிதர்களுக்கு நோய் பரவுகிறது

வனவிலங்குகளுடன் மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக சில நோய்த் தொற்றுகள் பரவியுள்ளன என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளன.

மலேசியாவில் 1999ல் முதலில் நிபா வைரஸ் பரவியபோது, பழம் தின்னும் வௌவால்கள் மூலம் அது ஏற்பட்டது. வனத்தின் அருகில் அமைக்கப் பட்டிருந்த பெரிய அளவிலான பன்றிகள் பண்ணையில் பரவி, பின்னர் மக்களுக்குப் பரவியது. காட்டு பழம் தின்னும் வௌவால்கள், பழ மரங்களில் இருந்து உணவை எடுத்துக் கொள்கின்றன. அந்த மரங்களில் இருந்து விழுந்த, வௌவால்கள் கடித்த பழங்களை பன்றிகள் சாப்பிட்டன. வவ்வால்களின் எச்சில் பட்டிருக்கும் நிலையில் அந்தப் பழங்கள் நோயை பரவச் செய்தன.

தொற்று பரவிய பன்றிகளுடன் நெருக்கமாக இருந்து வேலை பார்த்த 250க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த வைரஸ் பரவியது. அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர். கொரோனா வைரஸ் தாக்குதலில் மரண விகிதம் இன்னும் முடிவாகவில்லை. நிபா வைரஸ் தாக்குதலைப் பொருத்த வரையில், நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 40 - 75 சதவீதம் பேர் மரணம் அடைந்தனர்.

நோய்த் தாக்குதல் ஆபத்து அதிகமாக உள்ள பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் கென்யாவில் நைரோபியில் உள்ள சர்வதேச கால்நடைகள் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் எரிக் பெவ்ரே கூறியுள்ளார்.

பண்ணைகள் அல்லது மனித செயல்பாடுகள் மற்றும் வனவிலங்குகள் வாழ்விடங்களுக்கு இடைப்பட்ட `இடைமுகப் பகுதிகள்,' புதிய நோய்கள் உருவாக வாய்ப்புள்ள ஹாட்ஸ்பாட்களாக உள்ளன.

வனங்களின் எல்லையில் உள்ள பண்ணைகள், விற்பனைக்காக விலங்குகள் கொண்டு வரப்படும் சந்தைகள் எல்லாமே மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையிலான எல்லைகள் குறையும் வாய்ப்பை உருவாக்குகின்றன. அங்கு தான் நோய்கள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளது.

``இந்த இடைமுக இடங்களில் நாம் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். அசாதாரணமாக ஏதாவது தென்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் தயாராக இருக்க வேண்டும்.'' குறிப்பிட்ட ஓர் இடத்தில் திடீரென நோய்த் தொற்று ஏற்படுவது போன்ற சூழ்நிலைகளைக் கவனிக்க வேம்டும்.

``மனிதர்களிடம் அநேகமாக ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு முறைகள் வரை புதிய நோய்கள் உருவாகும்'' என்று பேராசிரியர் பெவ்ரே கூறுகிறார். ``இது ஆசியா அல்லது ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் இது நடக்கலாம்'' என்கிறார் அவர்.

புதிய நோய்கள் குறித்த இப்போதைய கண்காணித்து அறிதலின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்று மாத்யூ பேலிஸ் கூறியுள்ளார். ``நோய்த் தொற்றுகள் உருவாதலைக் கண்டறிய ஏறத்தாழ சரியான ஒரு நடைமுறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்'' என்று பிபிசி செய்திக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இதை பேராசிரியர் பெவ்ரே ஒப்புக்கொள்கிறார். ``இதுபோன்ற நிகழ்வுகள் மறுபடி மறுபடி நடக்க வாய்ப்புகள் உள்ளன'' என்கிறார் அவர்.

``இயற்கையுடன் நமது குறுக்கீடுகள் முழுக்க இவை நிகழ்ந்து வருகின்றன. அதை நாம் எப்படி புரிந்து கொண்டு, எதிர்வினை ஆற்றப் போகிறோம் என்பது தான் இப்போது முக்கிய விஷயமாக உள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

இயற்கையின் மீது நாம் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை நம்மில் பலரும் அறிந்து கொள்ளும் பாடங்கள், இப்போதைய நெருக்கடியின் மூலம் கிடைத்துள்ளன என்று பேராசிரியர் பெவ்ரே கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மழைக் காடுகள் வழியே அமைக்கப்பட்ட சாலை

மழைக் காடுகள் வழியே அமைக்கப்பட்ட சாலை

``நாம் பயன்படுத்தும் அனைத்து விஷயங்களையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். உண்ணும் உணவு, நமது ஸ்மார்ட் போன்களில் உள்ள பொருட்கள், நாம் நிறைய பயன்படுத்தும்போது, யாரோ சிலர் அவற்றை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்பி பணமாக ஆக்குகிறார்கள்.''

``எனவே இயற்கை வளங்களில் இருந்து எந்த அளவுக்கு நாம் பயன்படுத்துகிறோம், அவை நம் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கண்டறிந்து உணர்ந்து கொள்ளும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது'' என்று பெவ்ரே கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: