கொரோனா வைரஸ் எனும் கொலையாளி: பிடிப்பது எப்படி? விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்?

நோய்த் தொற்று பரவல் குறித்து புலனாய்வு செய்வது என்பது, கொலையாளியை துப்பறியும் நிபுணர் கண்டுபிடிப்பதைப் போன்றது கிடையாது.

பட மூலாதாரம், Getty Images

நோய்த் தொற்று பரவல் குறித்து புலனாய்வு செய்வது என்பது, கொலையாளியை துப்பறியும் நிபுணர் கண்டுபிடிப்பதைப் போன்றது கிடையாது.

கொலையாளியைக் கண்டுபிடிப்பது என்பது, சாட்சியங்கள் காணாமல் போவதற்குள், குற்றம் நடந்த இடத்துக்கு விரைந்து செல்வதாக இருக்கும்; சாட்சிகளை விசாரிக்கவேண்டும் - பிறகு தான் கொலையாளியைத் தேடும் படலம் தொடங்கும். அவர் அடுத்த கொலையை செய்வதற்கு முன்னதாகக் கண்டுபிடித்து, தடுக்கவேண்டும்.

ஆனால் சர்வதேச அளவில் தீவிரமான முயற்சிகள் எடுத்த நிலையிலும், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, தினமும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டே இருக்கிறது.

ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சிகள் தொடரும் நிலையில், நமது விஞ்ஞானிகள் இதுவரை என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்?

எச்சரிக்கை ஒலி

எந்த வைரஸாக இருந்தாலும், அது தொடங்கிய இடத்தைக் கண்டறிதல் முக்கியமானது. நமது ஆரோக்கியத்தில் அது என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும், எவ்வளவு வேகமாக அது பரவும் என்பதை ஊகிப்பதற்கு அது அவசியம். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரஸ் எல்லோரையும் திகைக்க வைத்துள்ளது. புத்தாண்டை வரவேற்க உலகமே தயாராகிக் கொண்டிருந்த நிலையில், வுஹான் மத்திய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தார் டாக்டர் லீ வென்லியாங். இந்த மருத்துவமனையில் நுரையீரல் தொற்றால் ஏற்படும் நிமோனியா பாதித்த ஏழு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

டிசம்பர் 30 ஆம் தேதி WeChat அந்தரங்க குழுவில் சக மருத்துவர்களுக்கு அனுப்பிய செய்தியில், தன்னுடைய மோசமான அச்சத்தைத் தெரிவித்திருந்தார் டாக்டர் லீ வென்லியாங். சார்ஸ் வைரஸ் தொற்றின் புதிய அலை ஒன்றை பார்க்கிறோமா என்ற சந்தேகம் அவருக்கு.

சார்ஸ் என்பதும் இன்னொரு வகை கொரோனா வைரஸ்தான்.

பட மூலாதாரம், WEIBO

படக்குறிப்பு,

லீ வென்லியாங்

இதுவும் 2003ல் சீனாவில் உருவாகி, 26 நாடுகளுக்குப் பரவி, 8,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்றியது.

இருந்தபோதிலும், டாக்டர் லீ கண்டறிந்தது, சார்ஸ் நோயின் இரண்டாவது அலை அல்ல. சார்ஸ்-கோவ்-2 என்று பிறகு பெயரிடப்பட்ட வைரஸால் தோன்றும் கோவிட்-19 நோயின் முதல் அலை என்பது தெரிய வந்தது.

இந்த வைரஸ் பெருந்தொற்றாகப் பரவ வாய்ப்பு உள்ளதாக, தன்னுடன் பணிபுரிபவர்களுக்குத் தகவல் அனுப்பி 3 நாட்கள் கழித்து, டாக்டர் லீ மற்றும் 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ``வதந்திகளைப் பரப்பியதாகக்'' கூறி அவர்கள் கைது செய்யப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன. மீண்டும் பணிக்குத் திரும்பிய வேகத்தில் டாக்டர் லீ-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 34 வயதான அவர் பிப்ரவரி 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு ஒரு மகனும், கர்ப்பிணி மனைவியும் உள்ளனர்.

குற்றம் நடந்த இடம்

2019 டிசம்பர் மாதத்தின் கடைசி வாரங்கள் முழுக்க, டாக்டர் லீ மட்டுமில்லாமல் நிறைய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள், தீவிர நோய்த் தொற்று அபாயம் இருப்பதாக எச்சரிக்கத் தொடங்கினர். இதன் தொடர்புகளை முதலில் உணர்ந்தது சுகாதாரப் பணியாளர்கள்தான். ஹூவனான் கடல் உணவுச் சந்தையில் இருந்தே பெரும்பாலான நோயாளிகள் வந்திருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர்.

நகரின் புதிய பகுதியில் அமைந்துள்ள ஹூவனான் கடல் உணவுச் சந்தை, சிறிய கடைகள் நிரம்பியதாக உள்ளது. அங்கு உயிருள்ள கோழிகள், பறவைகள், மீன்கள், பல்லி இனங்கள் மற்றும் காட்டு விலங்குகள் வரை எல்லாமே அங்கு கிடைக்கும்.

புதிரான வைரஸ் தாக்குதல் அதிகம் பேருக்குப் பரவிய நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வுஹான் சுகாதார ஆணையம் தனது முதலாவது அதிகாரபூர்வ அறிக்கையை பெய்ஜிங்கிற்கு அனுப்பியது. மறுநாள் அந்த சந்தைப் பகுதி தனிமைப்படுத்தப் பட்டது.

அந்த கடல் உணவுச் சந்தையில் இருந்துதான் பெரும்பகுதி நோய்த் தொற்று பரவியது என்று இப்போது, விஞ்ஞானிகள் ஒருமித்த கருத்துடன் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் அங்குதான் இந்த வைரஸ் முதலில் தோன்றியதா என்பது இப்போது நிச்சயமாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், VW Pics

அந்தச் சந்தையில் மனிதர்களிடம் இருந்தும், உயிருடன் உள்ள விலங்குகளிடம் இருந்தும் எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பரிசோதித்ததில், கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருந்தாலும், வுஹானில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்களைப் பொருத்த வரையில், அந்தச் சந்தையில் வைரஸ் தாக்குதல் கண்டறியப் படுவதற்கு ஏறத்தாழ நான்கு வாரங்களுக்கு முன்பாகவே மனிதர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உருவாகியிருந்தது. வுஹானை சேர்ந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு 2019 டிசம்பர் 1 ஆம் தேதியே அறிகுறிகள் தென்பட்டுள்ளன. ஹூவனான் கடல் உணவுச் சந்தையில்தான் தொற்று ஏற்பட்டதா என்பதற்கு உறுதியான சான்றுகள் கிடைக்கவில்லை.

ஜனவரி மாதத்தில், வுஹானில் நிறைய மருத்துவமனைகளில் நோய்த் தாக்குதலுடன் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்தபோது சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட யாருமே, இவ்வளவு வேகத்தில் இது பரவும் என்று யூகிக்கவில்லை. சீனா மட்டுமின்றி ஆசிய கண்டம் முழுக்கவே அது வேகமாகப் பரவியது.

கோவிட்-19 பாதிப்பால் முதலாவது நோயாளி இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 11ம் தேதியில் இருந்து 9 நாட்களுக்குள், சீனாவில் இருந்து ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு நோய் பரவிவிட்டது.

கொலையாளியைத் தேடுவதற்கான ஓட்டம் அப்படித்தான் தொடங்கியது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகம் இவ்வளவு முன்னேற்றங்கள் கண்டுள்ள போதிலும், இந்த வைரஸ் என்னும் குற்றவாளியை விரட்டுவதில் நாம் ஓரடி பின்னால்தான் இருக்கிறோம்.

ஆறு மாதத்தில் கோவிட்-19 நோய் 188 நாடுகளுக்குப் பரவி, சுமார் 72 லட்சம் பேருக்கு தொற்றியுள்ளது.

கொலையாளியை அடையாளம் காணுதல்

``எப்போதுமே நமது முதலாவது கேள்வி, அது என்ன என்பதாக இருக்கும்'' என்று நோய்த் தடுப்புத் துறை பேராசிரியர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கூறுகிறார். ஆன்டர்சனின் ஆய்வகம் தொற்றும் தன்மையுள்ள நோய்களின் மரபியலை ஆய்வு செய்கிறது. வைரஸ்கள் எப்படி விலங்கிடம் இருந்து மனிதர்களிடம் தாவி, பெருமளவில் பரவுகின்றன என்று அவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதத்தில், மருத்துவமனையில் முதல் நிலையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில், மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட புதிரான வைரஸ், வுஹான் நச்சுயிரியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

அதன் மரபணுத் தொகுதியைக் கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சி செய்தனர் - அதன் முழுமையான மரபணு குறியீடுகளைக் கண்டறிய முற்பட்டனர். அது என்ன என்பதையும், எவ்வளவு வேகமாக அது பரவும் என்பதையும் தெரிந்து கொள்ள அது அவசியமானதாக உள்ளது.

மரபணுத் தொகுதி என்பது எழுத்துகளால் குறிக்கப்படும் மிக நீண்ட தொடர். உதாரணமாக, மனிதனின் மரபணுத் தொகுதி 3 பில்லியன் குறிப்புகளைக் கொண்ட தொடர். சாதாரண ப்ளூ வைரஸ் 15,000க்கும் மேற்பட்ட குறிப்புகளைக் கொண்டிருக்கும். மில்லியன் கணக்கில் தன்னைத் தானே பெருக்கிக் கொள்வதற்கு வைரஸ்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் இந்த சங்கிலிக்குள் உட்பொதிந்திருக்கும். அதனால் நோய் மற்றும் தொற்று பரவும்.

ஒரு வைரஸின் மரபணுத் தொகுதியைப் பிரித்து கண்டுபிடிப்பதற்கு பல மாதங்கள் ஆகலாம். அது நிறைவு பெற ஆண்டுக் கணக்கில் கூட ஆகலாம். இருந்தாலும், அபாரமான வேகத்தில், ஜனவரி 10 ஆம் தேதி, வுஹான் நச்சுயிரியல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் யோங்-ஜென் ஜாங் தலைமையிலான விஞ்ஞானிகள், கோவிட்-19-ன் முதலாவது மரபியல் தொகுதி தொடரை வெளியிட்டனர். அது தான் முதலாவது அறிக்கை. இந்தப் புதிருக்கு விடை காண்பதற்கு, அதுதான் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

``முதலாவது மரபியல் தொகுதி தொடரை நாங்கள் பார்த்தவுடன், அது ஒரு வகையான கொரோனா வைரஸ் என்பதை அறிந்து கொண்டோம். அது சார்சின் 80 சதவீத அம்சங்களைக் கொண்டிருப்பதை அறிந்தோம்'' என்று பேராசிரியர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

கொரோனா என்பது மிகப்பெரிய வைரஸ் குடும்பம். பன்றிகள், ஒட்டகங்கள், வௌவால்கள், பூனைகள் போன்ற பிராணிகள் மற்றும் விலங்குகளிடம் இந்த குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வைரஸ்கள் காணப்படுகின்றன. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவிய ஏழாவது கொரோனா வைரஸ்தான் தற்போது கோவிட் -19 நோயை ஏற்படுத்திவரும் சார்ஸ் கோவ்-2 எனப்படும் நாவல் கொரோனா வைரஸ் என்று கருதப்படுகிறது.

``இதை நாம் எப்படி பரிசோதித்து கண்டறிவது என்பது நம்முடைய இரண்டாவது கேள்வி - பரிசோதனை செய்யவும் அந்த வைரஸ் எப்படி பரவும் என்பதையும் கண்டறியவும் அது வழிவகுக்கும்'' என்கிறார் பேராசிரியர் ஆன்டர்சன்.

``அதற்கு எதிரான தடுப்பு மருந்தை நாம் எப்படி உருவாக்கப் போகிறோம் என்பது மூன்றாவது கேள்வி. வைரஸ் பற்றிய மரபியல் என்ற அடிப்படை வரைபடத்தை வைத்துதான் இதற்கெல்லாம் விடை காண முடியும்'' என்கிறார் அவர்.

இந்த வைரஸ், வௌவால்களிடம் இருந்து தோன்றியது என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக அவர் கூறுகிறார்.

``இவை வௌவால்களிடம் இருந்துதான் தோன்றியுள்ளன. இது முழுக்க இயற்கையான வைரஸ் என நாம் அறிகிறோம். ஏனெனில் இதுபோன்ற பல வைரஸ்கள் வௌவால்களிடம் உள்ளன'' என்று அவர் விளக்குகிறார். ``அது எப்படி மனிதனுக்குப் பரவியது என்பது தான் நமக்கு இன்னும் தெரியவில்லை'' என்று அவர் கூறியுள்ளார்.

வௌவால்களிடம் காணப்படும் வேறொரு கொரோனா வைரஸ் குறித்து ஆன்டர்சன் குழுவினர் ஆய்வு செய்தனர். அது கோவிட்-19-ன் 96 சதவீத அம்சங்களில் ஒத்திருக்கிறது என கண்டறியப்பட்டது. எறும்புத் தின்னியைப் போன்ற பெரிய உருவம் கொண்ட ஆசியாவில் அதிகம் விற்கப்படும் பாலூட்டிகளில் காணப்படும் கொரோனா போன்ற வேறொரு வைரஸ் குறித்து ஆய்வு செய்தபோது, அதிலும் ஏராளமான ஒற்றுமைகள் கண்டறியப்பட்டன.

வௌவால்களிடம் இருந்து இந்த வைரஸ், எறும்புத் தின்னி போன்ற வேறு ஏதாவது விலங்கிற்குப் பரவி, அங்கு அது கூடுதல் புரதம் சேர்த்துக் கொண்டு, பிறகு மனிதனுக்குப் பரவியதா? விஞ்ஞானிகளின் தேடல் இன்னும் தொடர்கிறது.

காணொளிக் குறிப்பு,

கொரோனா வைரஸ்: I/A3i என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா?

சீனாவில், கோவிட்-19 குறித்த முதலாவது மரபணுத் தொகுதி வரிசைத் தொடரை உலகிடம் பகிர்ந்து கொண்ட இரண்டு நாட்கள் கழித்து, பேராசிரியர் ஜாங்கின் ஆய்வகத்தை அதிகாரிகள் மூடிவிட்டனர். ஆய்வகத்தின் ஆராய்ச்சி உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு அதிகாரப்பூர்வமான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அந்தக் குழுவினர் உலகிற்கு அளித்த தகவல்கள் ஏற்கெனவே வேரூன்றிவிட்டன.

``முதலாவது வரிசைத் தொடர் இல்லாமல், இந்தப் பணிகளில் எதையுமே நாங்கள் தொடங்கியிருக்க முடியாது'' என்று ஆன்டர்சன் கூறியுள்ளார். ``முக்கியமான தகவலை, நம்ப முடியாத வேகத்தில் கண்டறிந்து வெளிப்படுத்திய இந்த விஞ்ஞானிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின் தொடர்தல், தடமறிதல், தனிமைப்படுத்துதல்

நோய்த் தொற்று தீவிரமாகிவிட்ட நிலையில், அதன் தொடக்கத்தைக் கண்டறியும் முயற்சி, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மாறிவிட்டது.

இரண்டு வழிகளில் இதை விஞ்ஞானிகள் பின்தொடரத் தொடங்கினர்: களநிலையில், `தொடர்பு தடமறிபவர்கள்' எனப்படும் அலுவலர்கள், நோய்த் தாக்கம் உள்ளதாக சந்தேதிக்கப்படுபவர்களை பின்தொடர்தல் மூலம் கண்டறிந்து தனிமைப்படுத்த தொடங்கினர்; அது உலகெங்கும் எவ்வளவு வேமாகப் பரவியது என்பதைப் புரிந்து கொள்வதற்காக, வைரஸின் மரபியல், அதன் மரபணு குறியீடு ஆகியவற்றின் தடத்தைக் கண்டறிய நிபுணர்கள் முயற்சித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

தொடர்பு தடமறிபவர்கள்

கோவிட்-19 பாதிப்பை கையாள்வதில் மிகவும் வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாக, 51 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தென்கொரியா இருக்கிறது.

தொடர்புகளை தடமறிபவர்கள் என்ற ஒரு சிறிய குழுவினரை களமிறக்கியது தான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. கோவிட்-19 நோய் பாதித்தவர்களின் தொடர்புகளை அடையாளம் கண்டு, மிக சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர். யாரை சுயமாக தனிமைப்படுத்தலில் வைக்க வேண்டும் அல்லது சில நேர்வுகளில் முழு கட்டடம் அல்லது மருத்துவமனை, பராமரிப்பு இல்லம் அல்லது அலுவலகம் போன்ற நிறுவனங்கள் முழுவதையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

ஜனவரி முழுவதிலும், பிப்ரவரி ஆரம்பத்திலும் சில பேருக்கு மட்டுமே நோயின் பாதிப்பு இருந்த நிலையில், பெருமளவிலான நோய் பரவல் தடுக்கப்பட்டுவிட்டது என்று தென் கொரியர்கள் நினைத்தனர். ஆனால், பிப்ரவரியின் பிற்பகுதியில், குறிப்பிட்ட ஒரு நகரத்தில் திடீரென ஆயிரக்கணக்கான பேருக்கு, சில நாட்கள் இடைவெளியில் கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டது.

டேகு நகரில் நோய் பரவியதற்கு, ஒரு தனிநபர்தான் காரணம், தென் கொரியாவின் சூப்பர் நோய் பரப்பாளராக அவர் இருந்துள்ளார் - இப்போது அவப்பெயருக்கு உரியவராக அந்த நபர் இருக்கிறார். அவர் நோயாளி எண் 31 என அறியப்படுகிறார்.

நோயாளி 31க்கு பிப்ரவரி 17 ஆம் தேதி நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. அவருடன் அண்மையில் தொடர்பில் இருந்த அனைவரும், தடமறியும் நபர்கள் உதவியோடு கண்டறியப்பட்டனர். 10 நாட்கள் இடைவெளியில் அவருடன் 1,000க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகு பெருமளவில் நோய் பரவாமல் தடுக்கப்பட்டது.

டேகு நகரின் தொற்று நோய் சிகிச்சை குழுவின் துணை அதிகாரி என்ற முறையில் பேராசிரியர் கிம் ஜோங் - யியோன் அந்த நகரின் தொடர்பு தடமறிபவர்களுக்கு அதிகாரியாக உள்ளார். அவர்கள் பெரும்பாலும் முன்னாள் அரசு ஊழியர்களாகவும், ஜூனியர் டாக்டர்களாகவும் உள்ளனர். மக்கள் அலட்சியமாக இருந்தால்தான், தாங்கள் கடுமையான வழிமுறைகளை கடைபிடிப்பதாக அவர் கூறினார். கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மற்றும் ஐபோன் நகர்தலை ஆய்வு செய்தல் அல்லது ஜிபிஎஸ் தகவல்களை ஆய்வு செய்தல் ஆகியவை அதில் அடங்கும்.

பட மூலாதாரம், Anthony Kwan

``தாம் ஷின்சியோஞ்சி திருச்சபையை சேர்ந்தவர் என நோயாளி 31 என்ற அந்தப் பெண் முதலில் கூறவில்லை. தொடர்பு தடமறியும் நபர்கள்தான் அதைக் கண்டுபிடித்தனர்'' என்று பேராசிரியர் கிம் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் இயேசுவின் ஷின்சியோஞ்சி திருச்சபை கோட்பாடுகளை பின்பற்றும் 300,000 பேரும், அதன் நிறுவனர் லீ மன்-ஹீ தான் இரண்டாவதாகப் பிறந்து வந்துள்ள இயேசு கிறிஸ்து என்று நம்புகின்றனர். பைபிளை அவர் மாற்றலாம் என நம்புகி்றனர். தென் கொரியாவில் உள்ள மைய நீரோட்ட திருச்சபைகள் பலவும் இதை தனிப் பிரிவாகக் கருதுகின்றன. இளைஞர்களை தீவிரமாக சேர்த்துவரும் அதன் போக்கை மற்ற தேவாலயங்கள் விமர்சித்து வருகின்றன.

ஆனால் ஷின்சியோஞ்சி திருச்சபையுடன் தமக்கு தொடர்பு இருப்பதை மறைத்ததற்காக மட்டும் நோயாளி 31 அவப்பெயரை ஈட்டவில்லை. தொடர்பு தடமறிபவர்கள் கண்டறிந்தபடி, மருத்துவப் பரிசோதனைக்கு 10 நாட்கள் முன்னதாக - அறிகுறிகள் தென்பட்ட நிலையிலும் - அவர் டேகு நகரம் முழுக்க சுற்றித் திரிந்ததில் 1000க்கும் மேற்பட்டோருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதை அவர்கள் கண்டறிந்தனர். பிப்ரவரி 6 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கிய பிறகு, நோயாளி 31 என்ற அவர், பிப்ரவரி 7 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு 128 பேருடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, தன்னுடைய பொருட்களை எடுத்து வருவதற்காக, தற்காலிகமாக வெளியேறி வீட்டுக்குச் சென்ற அவர், இரண்டரை மணி நேரத்தில் திரும்பி வந்தார். அந்த வாரத்தின் பிற்பகுதியில், பல முறை அவர் வெளியே சென்றுள்ளார். ஒரு முறை ஒரு நண்பருடன் மதிய உணவுக்கு வெளியில் சென்றுள்ளார். 2 முறை இரண்டு மணி நேர தேவாலய பிரார்த்தனைக்கு சென்றுள்ளார். அங்கு 1,000 பேர் கூடியிருந்தனர்.

ஷின்சியோஞ்சி திருச்சபையின் ரகசியமான செயல்பாடுகள் காரணமாக, அந்த வாரத்தில் தேவாலயத்துக்கு வேறு யாரெல்லாம் வந்தார்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது என்று பேராசிரியர் கிம் தெரிவித்தார்.

``கடைசியில் நாங்கள் அந்த திருச்சபையின் 9,000 உறுப்பினர்களின் பட்டியலையும் எடுத்துவிட்டோம். முதலில் எல்லோரையும் நாங்கள் தொடர்பு கொண்டு, ஏதும் அறிகுறி தென்படுகிறதா என விசாரித்தோம். அறிகுறி இருப்பதாக சுமார் 1,200 பேர் கூறினர். ஆனால் சிலர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள, சுய தனிமைப்படுத்தல் செய்து கொள்ள மறுத்துவிட்டனர்'' என்று அவர் குறிப்பிட்டார்.

திருச்சபையின் ரகசியமான செயல்பாடுகளில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ள நூற்றுக்கணக்கானோர் தயங்கிய நிலையில், தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று கிம் கூறினார்.

``திருச்சபையின் அந்த உறுப்பினர்களை, டேகு நகரின் மற்ற மக்களிடம் இருந்து எவ்வளவு சீக்கிரமாக தனிமைப்படுத்தப் போகிறோம் என்பதுதான் முக்கியமானதாக இருந்தது. எனவே திருச்சபை உறுப்பினர்கள் அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அரசு நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது'' என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

புதிய நோயாளிகள் பற்றி தீவிரமாக தகவல்கள் சேகரித்தது, தீவிர பரிசோதனைகளையும் மேற்கொண்டதில், வைரஸ் பரவுதல் வேகமாகத் தடுக்கப்பட்டது. ஏப்ரல் தொடக்கத்தில், டேகு நகரில் புதிதாக யாருக்கும் கோவிட்-19 நோய்த் தாக்குதல் ஏற்படவில்லை.

இருந்தபோதிலும், உலகின் மற்ற பகுதிகளில், தடுக்க முடியாமல் இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக் கொண்டே உள்ளது. விஞ்ஞானிகளைப் பொருத்த வரையில், வைரஸை பின்தொடர்வது முக்கியம். எல்லைகளில் மட்டுமின்றி, கண்டங்களிலும் இதைப் பின்தொடர வேண்டும். இந்தப் பிரச்சினைக்கான தீர்வு மரபணுத் தொகுதி விஷயத்திலும், அது அதிகரித்து பரவும் போது விட்டுச் செல்லும் மரபணு குறியீடுகளிலும் தான் இருக்கிறது.

ஆதாரத்தை ஆய்வு செய்தல்

முதல் சில கோவிட்-19 நோயாளிகளின் மூக்குச் சளியைத் தடவி எடுத்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டது இந்த வைரஸின் மரபணுத் தொகுதியை - அதாவது இந்த வைரஸ்கள் தங்களைத் தாங்களே பெருக்கிக் கொண்டு பரவத் தேவையான 30,000 மரபணு குறிப்புகளைக் கண்டறிய உதவியுள்ளது.

ஜனவரி மாதம் பேராசிரியர் யோங்-ஜென் ஜாங்கின் குழுவினர் இந்த வைரசின் மரபணுத் தொகுப்பை கண்டுபிடித்ததில் இருந்து, மூக்கில் இருந்து எடுத்த சளியைக் கொண்டு பல பத்தாயிரம் பரிசோதனைகளை உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். தாங்கள் கண்டறிந்த விஷயங்களை GISAID -ல் பதிவேற்றம் செய்கின்றனர். எல்லோரும் அணுகும் தகவல் தளங்களில் ஒன்றாக இது உள்ளது.

அது பரவும்போது ஆயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் இந்த வைரசின் மரபணுத் தொகுதி மீண்டும் மீண்டும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது, மரபணு குறியீட்டில் ஏற்பட்ட பிறழ்வுகளை விஞ்ஞானிகள் தடம் பற்றி அறிந்தனர். இவற்றின் சங்கிலித் தொடரில் சிறிய மாறுதல்களைக் கண்டறிய முடிகிறது. வைரஸ் விட்டுச் சென்ற குறிப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து, வரிசைத் தொடராக பல்கிப் பெருகுதலை பின்தொடர்ந்து கவனித்ததில், எல்லைகளைத் தாண்டி இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதைக் கண்டறிய முடிந்துள்ளது.

உதாரணமாக, நியூயார்க் நகரில் ஒரு நோயாளியிடம் எடுக்கப்பட்ட மாதிரியில் மூன்று ஒற்றை பிறழ்வு இருந்தால், வுஹானில் எடுத்த பல மாதிரிகளில் அவற்றின் மரபியலில் அதே மூன்று பிறழ்வுகள் இருக்கும். இவை அனைத்துமே ஒரே இடத்தில் இருந்து பரவியிருக்கும் என்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நிகழ்வுகளின் கால வரிசையை ஆய்வு செய்தால், வுஹானில் இருந்து நியூயார்க் நகருக்கு இந்த வைரஸ், எப்போது எப்படி சென்றது என்பதை நிபுணர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

உலகெங்கும் இருந்து 37,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து அவற்றின் மரபணுத் தொகுதியை தொடராக்கி பார்த்தபோது, கோவிட்-19 நோயின், அழிவை ஏற்படுத்தும் தொற்றும் தன்மை முழுமையாக வெளிப்பட்டுள்ளது.

கொள்ளை நோயியல் வல்லுநர் டாக்டர் எம்மா ஹோட்கிராப்ட், Nextstrain-ல் பணியாற்றுகிறார். GISAID-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட பல பத்தாயிரம் தகவல்களில் உள்ள தகவல்களை விஞ்ஞானிகள் மற்றும் குறியீடு கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவும் நிலையில், மரபியல் பெருக்கத்தைப் பற்றி இப்போதைய தகவலை அறிய எல்லோரும் அணுகும் வரைபடத்தை உருவாக்க இந்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

``மரபணுத் தொகுதியைப் பின்தொடர்வதன் மூலம், ஆட்களிடம் பேசுவதையும் தாண்டி உள்ளார்ந்த விஷயங்கள் எங்களுக்குக் கிடைக்கின்றன. தங்களுக்கு எப்போது, எங்கே நோய் தொற்றியது என்பது நோயாளிகளுக்கே தெரியாமல் இருக்கலாம். ஆனால் மரபியல் தகவல்கள் மிகவும் நம்பகமானவை'' என்று டாக்டர் ஹோட்கிராப்ட் கூறுகிறார்.

குறிப்பாக, ஈரான் போன்ற தகவல்களை வெளியிடாத நாடுகள் விஷயத்தில் இது உதவிகரமாக இருக்கும்.

புதிரான தொடர்புகள்

ஜனவரியின் பிற்பகுதியில் டாக்டர் ஹோட்கிராப்ட் மற்றும் Nextstain குழுவினர் ஒரே மாதிரியான மரபணுத் தொகுதியைக் கொண்ட ஏராளமான மாதிரிகளை கவனித்தனர். ஒரே மாதிரியான பிறழ்வுகளை அவை கொண்டிருந்தன. ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, சீனா மற்றும் நெதர்லாந்து என எட்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டிருந்தன.

ஆதாரங்களின் பின் வரலாறுகளை உரிய நேரத்தில் தடமறிந்து பார்த்தபோது, பிரச்சினைக்குரிய இந்த மாதிரிகளின் தொகுப்பு எங்கிருந்து உருவானது என்பதை அந்தக் குழுவினரால் முதலில் கண்டறிய முடியவில்லை.

``தொடர்புகளை அவர்கள் ஒருங்கிணைத்துப் பார்த்தனர். அது ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் அவர்களுக்குள் பொதுவான அம்சம் எதுவும் இல்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் எடுத்த நிறைய மாதிரிகளுக்கு உரியவர்கள் ஈரானுக்கு பயணம் மேற்கொண்ட பின்னணியைக் கொண்டவர்களாக இருந்ததை பிறகு நாங்கள் கண்டறிந்தோம்'' என்று ஹோட்கிராப்ட் தெரிவித்தார்.

``இது மிகவும் சக்திவாய்ந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் ஈரானில் இருந்து எந்த மாதிரியும் எங்களிடம் இல்லை. ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு மூலமாக, இந்த மாதிரிகளுக்கு உரியவர்களுக்கு ஈரானிலோ அல்லது ஈரானுக்கு அண்மையில் சென்று வந்தவர்கள் மூலமோ நோய்த் தொற்று பரவியிருக்கும் என்று, அதீத நம்பிக்கையுடன் எங்களால் கூற முடிந்தது'' என்று அவர் தெரிவித்தார்.

மரபியலை தடமறிதல் அவ்வளவு சக்தி வாய்ந்த விஷயம். ஏனெனில் வைரஸ் தொடர்ச்சியற்ற முறையில் பல்கிப் பெருகும். எனவே, குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில் வைரஸ் எப்படி பரவுகிறது என்பதைப் புரிந்து கொள்ள, ஒரு சில மாதிரிகள் மட்டும் விஞ்ஞானிகளுக்குப் போதுமானது.

ஈரானில் இருந்து கிடைத்த இந்த மாதிரிகளைப் பார்த்தால், ஒரு குடும்பத்திற்கான கிளைகளின் வரைபடத்தில் ஒரே நிலையில் இருக்கும் இது போன்ற பாதிப்பைக் கொண்டு, ஈரானில் இருந்து தான் இந்த பரவுதல் வந்திருக்க வேண்டும் என்று Nextstrain குழுவினர் முடிவுக்கு வந்தனர். ஆனால் ஈரானில் ஒட்டுமொத்த நோய்த் தொற்றும் ஒரே நிலையில் பரவியிருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருந்தன.

ஈரானில் குவோம் என்ற புனித நகரில் இருந்து தான் பிரதானமாக நோய் பரவல் ஏற்பட்டிருக்கும் என்று தொடர்பு தடமறிபவர்கள் கூறினர். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், குவோம் நகரில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் ஈரானின் எல்லா மாகாணங்களுக்கும் பரவியதாகவும் குறிப்பிட்டனர்.

தொடர்பு தடமறிதல் மற்றும் தொலைநிலை மரபியல் தடமறிதல் மூலமாக, கோவிட்-19 நோய், உலகெங்கும் எந்த அளவுக்கு வேகமாக, தீவிரமாகப் பரவுகிறது என்பதை விஞ்ஞானிகளால் கூற முடிந்தது. இருந்தபோதிலும், கடந்த ஆறு மாதங்களில் இவ்வளவு விஷயங்களைக் கண்டறிந்துள்ள போதிலும், நிபுணர்கள் ஓரடி பின்தங்கி தான் உள்ளனர் - இந்த வைரஸ் அடுத்ததாக எப்போது, எங்கே தாக்கும் என்பதை அவர்களால் ஊகிக்க முடியவில்லை.

கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதைப் பொருத்த வரையில், ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது: தாறுமாறான மற்றும் தனிப்பட்ட முறையில் மக்கள் மத்தியில் பரவி மரணங்களை ஏற்படுத்துகிறது, ஆனால் பல சமயங்களில் லேசான அறிகுறிகளைக் காட்டுகிறது அல்லது அறிகுறிகளே காட்டுவதில்லை.

எந்த அறிகுறியும் காட்டாமல் தனிநபர்களிடம் கோவிட்-19 அமைதியாக பரவுதல் குறித்து ஆய்வு செய்வது சிரமமானது. இருந்தாலும், இந்தப் புதிரில் ஒரு முக்கியமான விஷயத்தை அளிப்பதாக வடக்கு இத்தாலியில் உள்ள சிறிய கிராமம் அமைந்துள்ளது.

கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தல்

இத்தாலியில் கோவிட்-19 பாதிப்பால் ஏற்பட்ட முதலாவது மரணம், பரபரப்பான நகரங்களில் நிகழவில்லை. ஆனால்,வென்ட்டோ பகுதியில் தொலைதூரத்தில் உள்ள வோ என்ற சிறிய கிராமத்தில்தான் முதலாவது கோவிட்-19 மரணம் நிகழ்ந்தது. சுமார் 3,000 பேர் வாழும் வோ கிராமம், இயுகானியன் மலையின் அடிவாரத்தில் உள்ளது. வெனிஸ் நகரில் இருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த இடம் ஒரு தேசியப் பூங்கா ஆகும்.

பிப்ரவரி 21 ஆம் தேதி, கோவிட்-19ல் முதலாவது மரணம் பற்றிய தகவல் அறிவிக்கப்பட்டவுடன், அந்த கிராமத்தை சீலிட அதிகாரிகள் முடிவு செய்தனர். அறிகுறிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைவருக்கும் திரும்பத் திரும்ப சளி பரிசோதனை செய்யத் தொடங்கினர். முடக்கநிலை காலத்தில் ஆயிரக்கணக்கான பேருக்கு திரும்பத் திரும்ப பரிசோதனை செய்தது, அறிவியல்பூர்வமாக, ஒரு தனித்துவமான வாய்ப்பை அளித்தது.

அந்தப் பகுதியை சேர்ந்த நுண்ணுயிரியல் வல்லுநர், இணைப் பேராசிரியர் என்ரிக்கோ லாவெஜ்ஜோ என்பவர் இந்த பரிசோதனைகளை முன்னின்று நடத்தினார். தங்கள் ஆய்வில் கண்டறிந்த மிக முக்கியமான விஷயங்களை அவர் விவரித்துள்ளார். இந்த வைரஸ் ``அமைதியாகப் பரவும்'' தன்மை கொண்டதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நோய்த் தாக்குதல் இருப்பதாக கண்டறியப்பட்ட ஏராளமானவர்களுக்கு, லேசான அறிகுறிகள் தான் இருந்தன அல்லது எந்த அறிகுறியுமே இல்லை.

``வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, பிறருக்கு தங்களால் நோய் பரவும் என்ற விஷயமே தெரிந்திருக்கவில்லை. இதுபோன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் இது பெரிய பிரச்சினையாக உள்ளது'' என்று பேராசிரியர் லாவெஜ்ஜோ கூறியுள்ளார்.

``அதிக அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டில் இருப்பார்கள். ஆனால், அறிகுறிகள் இல்லாதவர்கள் சாதாரணமாக இருப்பார்கள். வெளியில் செல்வார்கள், பிறரை சந்திப்பார்கள், பிறருடன் தொடர்பு கொள்வார்கள் - தங்களால் வைரஸ் பரவும் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது'' என்று அவர் தெரிவித்தார்.

அறிகுறிகள் இல்லாதவர்களால் ஏற்படும் பெரிய அளவிலான பிரச்சினைகளை விளக்கிய முதலாவது குழுக்களில் லாவெஜ்ஜோவின் குழுவும் ஒன்று. இது 70 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று மற்ற ஆய்வுகள், பிறகு தெரிவித்தன.

3,000 மக்கள் தொகை கொண்ட அந்த இத்தாலிய கிராமத்தில், 10 வயதுக்கும் குறைவான ஒரு குழந்தைக்குக் கூட நோய்த் தொற்று இல்லை என்பது, ஆச்சர்யமான மற்றொரு தகவலாக இருந்தது.

``குழந்தைகளுக்கு நோய் தொற்றாது என்று நாங்கள் கூறவில்லை. இது மற்ற ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஆனால், குறைந்தது ஒரு டஜனுக்கும் மேற்பட்ட குழந்தைகள், நோய்த் தாக்குதல் உள்ளவர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை. இதை மேலும் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று பேராசிரியர் லாவெஜ்ஜோ கூறியுள்ளார்.

கட்டுப்படுத்த முடியாமல் கோவிட்-19 பரவுவதற்கு முக்கியமான காரணம், மற்ற கொரோனா வைரஸ்களுடன் ஒப்பிடும்போது, இது தங்களை அறியாமல் மற்றவர்களுக்கு பரவச் செய்யும் மக்கள் மூலமாக செல்கிறது என்பதுதான்.

ஆனால் லேசான இருமல் முதல், மரணத்தை ஏற்படுத்தும் அளவிலான சுவாச கோளாறுகள் வரையிலான மாறுபட்ட அறிகுறிகளை ஏன் கோவிட்-19 காட்டுகிறது? பேராசிரியர் லாவெஜ்ஜோ கண்டறிந்த விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால், குழந்தைகளுக்கு ஏன் பாதிப்பு குறைவாக உள்ளது?

ஆபத்தான கூட்டு சேர்க்கை

மனித செல்களின் மேற்பரப்பில் உள்ள ACE-2 ஏற்பிகள் (receptors) வழியே உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொள்வது மட்டுமே, இந்த வைரஸ் மனித உடலுக்குள் நுழையும் ஒரே வழிமுறை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

2003ல் சார்ஸ் நோய்த் தாக்குதல் ஏற்பட்ட போது ACE-2 ஏற்பிகள் குறித்து பேராசிரியர் மைக்கேல் பர்ஜானின் ஆய்வகம்தான் முதலில் கண்டுபிடித்தது.

இருந்தபோதிலும், ACE-2 ஏற்பிகள், மூக்கின் உள்புறம், நுரையீரல், உணவுக் குழாய் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் மூளை என உடலின் அனைத்துப் பகுதிகளிலும், காணப்படுகின்றன என்று மைக்கேல் விளக்கியுள்ளார்.

ACE-2 ஏற்பிகள் எங்கும் பரவியிருக்கும் காரணத்தால் தான் கோவிட்-19 தாக்குதல் பரவலான அறிகுறிகளைக் காட்டுகிறது. மூக்கில் தொற்று ஏற்பட்டால், வாசனை அறியும் திறன் இழப்பு முதல், நுரையீரல் அழற்சி வரை ஏற்பட்டு, அதிக இருமல் ஏற்படும்.

பொதுவாக பெரும்பாலான வைரஸ்கள் பரவுதலில் அல்லது தீவிர நோயை உருவாக்குவதில் தீவிரமாக செயல்படும். கோவிட்-19 ஐ பொருத்தவரை பரவுதல், பாதிப்பை ஏற்படுத்துதல் என இரண்டிலுமே தீவிரமாக இருப்பதால் அபாயகரமானதாக உள்ளது.

உடலின் மேல் பகுதியில் காற்றின் பாதையில், மூக்கு மற்றும் நுரையீரலின் மேல் பகுதியில், தொற்று ஏற்படுவதால், அழற்சி உருவாகி இருமல் மற்றும் தும்மல்களை ஏற்படுத்துகிறது. அதனால் நோய் தீவிரமாகப் பரவுகிறது. இதற்கிடையில், காற்றுப் பாதையின் கீழ்ப்பகுதியில் தொற்று ஏற்பட்டால், மோசமான பாதிப்புகளை, மரணத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு, சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளிடம் இருந்து பெரியவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

நோய் பாதித்தவர்களில் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே குழந்தைகளாக உள்ளனர். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது, குழந்தைகளுக்கு நுரையீரல் கீழ்ப் பகுதியில் ACE-2 ஏற்பிகள் குறைவாகவே உள்ளன என்பதற்கு விஞ்ஞானிகளிடம் ஆதாரங்கள் உள்ளதாக பேராசிரியர் பர்ஜான் கூறுகிறார்.

``அதாவது குழந்தைகளுக்கு உடல் நலம் குறைவதற்கான வாய்ப்பு குறைவு. குறைந்தபட்சம் பெரியவர்களைப் போன்று நிமோனியா வருவதற்கான வாய்ப்புகள் குறைவே'' என்கிறார் பர்ஜான்.

இருந்தபோதிலும், குழந்தைகளின் நுரையீரலின் மேல் பகுதியில் இந்த ஏற்பிகள் அதிக அளவில் இருக்கின்றன என்கிறார் அவர்.

``வைரஸ் அடுத்த நபருக்குப் பரவுவதற்கு மூச்சுப் பாதையின் மேல் பகுதி முக்கியம் என்பதால், இதனால் வேறு நபர்களுக்கு நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது'' என்று அவர் கூறியுள்ளார்.

வைரஸ் பல்கிப் பெருகி, பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான செயல்பாட்டை தடுப்பதில், ஆறு மாதமாக வெற்றி காண முடியாத நிலையில், தடுப்பு மருந்து மட்டுமே, இந்த வைரஸ் மீண்டும் தாக்காமல் தடுப்பதற்கான உண்மையான வழியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான போட்டி

கோவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தினை முதலில் கண்டுபிடிப்பதற்கு 124 வெவ்வேறு குழுக்கள் இப்போது போட்டியில் இருக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் முடங்கிப்போன பிரேசிலில் நடைபெறும் பரிசோதனைகளில் ஒரு பரிசோதனை முறையை சாவோ பாலோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஜோர்ஜ் கலில் முன்னெடுத்துச் செய்கிறார். ஆனால் நாடு முழுக்க பெரும்பாலான பெரிய நகரங்களில். அந்தப் பகுதி நிர்வாகங்கள் முடக்கநிலை அறிவித்துள்ள போதிலும், அதிபர் சயீர் போல்சனாரோ முடக்கநிலை எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொள்கிறார்.

செப்டம்பருக்குள் தடுப்பு மருந்து தயாராகிவிடும், அதற்கடுத்த 12 முதல் 18 மாதங்களில் உற்பத்தி செய்து விநியோகம் நடைபெறும் என்று சில குழுக்கள் கூறுவது பற்றி கலில் சந்தேகம் தெரிவிக்கிறார். தீவிரமாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர, யார் முதலில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல என்று அவர் கூறுகிறார்.

``நம்மால் முடிந்த வரையில் வேகமாகச் செய்ய வேண்டும். ஆனால், முதலில் கண்டுபிடிப்பவர் வெற்றியாளராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இது கார் பந்தயம் கிடையாது. சிறந்த தடுப்பு மருந்தை உருவாக்குபவரே வெற்றியாளர். பெருமளவு மக்களுக்கு பயன்தரக் கூடியதை - 90 சதவீதம் பேருக்கு பயன் தருவதாக அமைந்து, அறிகுறிகள் மற்றும் பரவுதலைத் தடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பவரே வெற்றியாளர்'' என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

வயது முதிர்ந்தவர்களுக்கும், ஏற்கெனவே உடல் நலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு தரக் கூடிய தடுப்பு மருந்து தான் உலகின் தேவை, அதுதான் நோய்ப் பரவலுக்கு உண்மையான முடிவை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பிரிவுகளில் உள்ளவர்களுக்குதான் நோய் எதிர்ப்பான்கள் உருவாவது சிரமமாக இருக்கும். அந்த எதிர்ப்பான்கள்தான் தடுப்பு மருந்து அல்லது நோய்த் தாக்குதலுக்கு உடலே உருவாக்கும் இயற்கையான எதிர்வினை. எனவே, மிகவும் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ளவர்கள் உள்பட, பெரும் பகுதியினருக்கு பயன் தருவதாக தடுப்பு மருந்து அமையாமல் போனால், கோவிட்-19 தொடர்ந்து பரவிக் கொண்டு தான் இருக்கும் என்று கலில் கூறுகிறார்.

எதிர்காலத்தில் மீண்டும் இந்த நோய் தாக்குதல் வராமல் தடுக்க வேண்டுமானால், எல்லா நாடுகளுக்கும் இந்தத் தடுப்பு மருந்து கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

``பணமும், அரசியலும்தான் இதில் பிரச்சினை. இங்கே சாவோ பாலோ நகரில், தங்கள் அழகான வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் தனி நபர்கள் இருக்கிறார்கள். ஏழைகள் ஒரே அறையில் 8, 9 அல்லது 10 பேர் வாழும் நிலையும் இருக்கிறது. அவர்கள் எப்படி தனிமைப்படுத்திக் கொள்ள முடியும்'' என்று அவர் கேட்கிறார்.

``எல்லோருக்குமாக இந்த வைரஸ் பாதிப்பு முடிவுக்கு வரவேண்டுமானால், நமக்கு மிக நல்ல தடுப்பூசி மருந்து தேவை. வேறு வழியேதும் கிடையாது'' என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: