"கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் ஆபத்தில்லை" - உலக சுகாதார நிறுவனம்

"கொரோனா தொற்று இருக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் ஆபத்தில்லை"

பட மூலாதாரம், staticnak1983 / Getty

கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என்றும் அதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதாகவும், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதே சிறந்த வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

"கொரோனா வைரஸ் தொற்றால் குழந்தைகளைவிட பெரியவர்களுக்கு ஆபத்து அதிகம் என்பது தெரியும். ஆனால், கொரோனா அல்லாமல் மற்ற நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குழந்தைகளுக்கு இருக்கிறது. அப்படி வேறு ஏதும் நோய் ஏற்படாமல் இருக்க தாய்ப்பால் கொடுப்பது மிக அவசியம்" என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது நடத்தப்பட்ட ஆய்வுகளில், வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்க தாய்ப்பால் உதவும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

"தாய்ப்பாலில் இருந்து வைரஸ் பரவுவதற்கான தடயங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை" என்று உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ விவகாரங்களுக்கான ஆலோசகர் மருத்துவர் அன்ஷூ பேனர்ஜி கூறியுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று: பிரசவத்தில் சிக்கல் வருமா?

அபர்ணா ராமமூர்த்தி

பிபிசி தமிழ்

கொரோனா வைரஸ் பாதிப்பால், பல கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மாதாந்திர செக் அப், ஸ்கேன், உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கொரோனா தொற்று அதற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Sasiistock

அதோடு, கொரோனா காலகலலத்தில் வெளியே சென்றால், அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் உள்ளது.

சென்னை அரசு மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 191 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருவதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. அந்த வகையில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 70 பேரும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 68 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 29 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 பேரும் என மொத்தம் 191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பலர் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதனை தனிப்பட்ட வகையில் பிபிசி தமிழால் உறுதி செய்ய முடியவில்லை.

எனினும் மாநில அரசின் தரவுகள்படி, கர்ப்பிணி பெண்கள் ஒருசிலர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்,

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக கர்ப்பிணி பெண்கள் இருக்கிறார்களா? அரசு இதுகுறித்து என்ன செய்ய வேண்டும்? கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அத்தொற்று நிச்சயம் இருக்குமா ஆகியவை குறித்து மகப்பேறு மருத்துவர் ஷாந்தி ரவீந்திரநாத் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இருந்து.

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: முதியவர்கள், நாள்பட்ட வியாதி உடையவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கர்ப்பிணிப் பெண்களும் அதிகம் பாதிக்கக்கூடிய விளிம்பில் இருக்கிறார்களா?

பதில்: நம் சமூகம் பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சமூகம், ஏனெனில் தாய், சேய், என இரு உயிர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில், சொல்லப்போனால் ஏப்ரல் மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) ஓர் அறிவிப்பானையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தை பிறக்கும் 5ல் இருந்து 10 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது அதிகம் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால், மே 18ஆம் தேதி ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிவிப்பானையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு நீக்கப்பட்டது.

கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்தபோதே பல கர்ப்பிணிப் பெண்கள் அதனை மேற்கொள்ள தயக்கம் காட்டினார்கள். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், நீண்ட நேரம் காத்திருப்பு, பரிசோதனை செய்யப்போய் தங்களுக்கு கொரோனா தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள்.

கொரோனா ஊரடங்கு என்பதால் போக்குவரத்து இடையூரும் இருந்தது. ஆனால், நிச்சயம் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்ததால் அவர்களுக்கு அந்த பரிசோதனையை மேற்கொள்ள எங்களுக்கும் எளிதாக இருந்தது.

அதன் பிறகு கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை நீக்கிவிட்டது. தற்போது நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

அதன் பின் தமிழக அரசு, வேண்டுமென்றால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறியது. கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரும் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யலாம் என்று கூறியது. இதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஊடகங்களுக்கு அமைச்சர் பேட்டி கொடுக்கும் போது இவ்வாறு கூறினார்.

கேள்வி: கர்ப்பிணிப் பெண்களுக்கு போதிய பரிசோதனை செய்யப்படவில்லை என்றால் எந்த மாதிரியான சிக்கல்கள் ஏற்படும்?

பதில்: நாம் இந்த நோய் குறித்து இப்போதுதான் அறிந்து கொண்டு வருகிறோம். மேலும் இத்தொற்று எல்லா நாடுகளிலும் ஒரே போன்று இல்லை. ஒவ்வொரு சமூகம், மக்கள் தொகை, வாழ்க்கை முறை, தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு வேறுபட்டிருக்கிறது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் இங்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொரு மாநிலத்தின் சுகாதார அமைப்பும் வேறுபட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

மற்ற நாடுகளில், மற்ற மாநிலங்களில் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றால், தமிழகத்திலும் அதே போல இருக்கும் என்று கூறிவிட முடியாது. நமக்கென்று தனி வியூகம் தேவைப்படுகிறது. நமக்கான தனி ஆய்வு தேவைப்படுகிறது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது சாத்தியமற்ற ஒன்றாக இருக்கலாம் ஆனால், கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

கர்பமாக இருக்கிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஆதாரம்: ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி வெளியீடு

  • கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கொரோனா தொற்றால் அதிக அபாயம் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
  • ஆனாலும், கர்ப்பிணிப் பெண்கள் பாதுபாப்பாக இருக்குமாறு மருத்தவ ஆய்வாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அவர்கள் குழந்தைக்கும் கொரோனா தொற்று வருதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.
  • தாய்ப்பால் வழியே குழந்தைகளுக்கு தாய் வழியாக கொரோனா தொற்று பரவும் என்பதற்கான ஆதாரமும் இல்லை. எனினும், கைகளை சுத்தம் செய்வது, மாஸ்க் அணிவது போன்ற நடைமுறைகளை தாய்மார்கள் பின்பற்ற வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் கொரோனா தொற்றால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா அது குறித்த தரவுகள் ஏதேனும் தனியே இருக்கிறதா?

பதில்: இல்லை. தனியே எந்த தரவுகளும் இல்லை.

ஆரம்பத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகம் பரிசோதனை செய்யப்பட்டபோது, பல கர்ப்பிணிப்பெண்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது தெரியவந்தது.

அப்போது முதலில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. அதனை தொடர்ந்து திருவலிக்கேனியில் உள்ள மருத்துவமனையில், கொரோனாவால் கர்ப்பிணிப்பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாய் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையும் உயிரிழந்தது.

அதே போல வேலூர் அரசு மருத்துவமனையில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் இதே போல உயிரிழந்தார்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சுமார் 140 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அனைத்து செய்தித்தாள்களிலும் செய்தி வெளியானது.

ஆனால், இதற்கான தரவுகளை எடுப்பதில் அதிக சிரமம் இருக்கிறது. குழந்தை பிறப்பு சிக்கலால் ஏற்பட்ட மரணமா அல்லது கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணமா என்பதை நாம் உறுதியாக பார்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

கேள்வி: கர்ப்பிணிப் பெண்கள் மீது கொரோனா தொற்று ஏற்படுத்தும் தாக்கம் எந்த மாதிரியாக இருக்கிறது?

பதில்: கொரோனா வைரஸின் தாக்கம் பொதுவாகவே மாறிக் கொண்டு வருகிறது. இதனை கர்ப்பிணிப் பெண்களுடன் தொடர்புப்படுத்தி பார்த்தோம் என்றால், கர்ப்பம் தரித்து முதல் 3 மாதங்களுக்குள் இருக்கும் பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.

ஆனால், இது வெறும் அவதானிப்புதான். இதற்கான எந்த ஆய்வு முடிகளும் இல்லை. வெறும் அவதானிப்பை நாம் அறிவியல்பூர்வமானதாக எடுத்துக்கொள்ள முடியாது.

அதேபோல கடைசி 3 மாதங்களில் அல்லது குழந்தை பிறப்புக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டால், நஞ்சுக்கொடியில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுவும் வெறும் அவதானிப்புதான். இந்த அவதானிப்பு உண்மைதானா என்பதை தெரிந்து கொள்ள ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்ய வேண்டுமென்றால், போதிய பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை ஐ.சி.எம்.ஆர் திரும்பப் பெற்றது அப்போது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.

கேள்வி: கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், கட்டாயம் அவர்களின் குழந்தைகளுக்கும் அந்த தொற்று இருக்குமா?

பதில்: உதாரணமாக 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றால், அந்த 100 குழந்தைகளுக்கு கொரோனா இருக்கிறதா என்றால் இல்லை.

இதற்கு தெளிவான பதிலை அளிக்க அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி ஓர் ஆய்வு இதுவரை செய்யப்படவில்லை. இதற்குதான் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

உதாரணமாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டால், அதில் 1000 பேர் கர்ப்பிணிப் பெண்கள் என வைத்துக் கொள்வோம். 1000 பேரில் 800 பேருக்கு குழந்தை பிறக்கிறது.

அந்த 800 பேரில் ஒரு குறிப்பிட்டவர்களின் குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்கலாம். சில குழந்தைகளுக்கு தொற்று இல்லாமல் இருக்கலாம். அப்படி முதலில் கொரோனா இல்லாமல் பிறந்த குழந்தைக்கு இரண்டு நாட்கள் கழித்து கொரோனா இருப்பது தெரிய வரலாம். இப்படி ஏதேனும் தகவல் வேண்டும்.

இந்தியா இன்னும் கொரோனா தொற்றின் உச்சத்தை அடையவில்லை. நாம் என்ன செய்ய வேண்டும், எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆய்வு முடிவுகள் ஏதும் இல்லாமல் இந்த கேள்விக்கு பதில் அளித்தால், அது தேவையற்ற பதற்றத்தையே உண்டாக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: