கொரோனா வைரஸ்: சமூகப் பரவல் மற்றும் ஹெர்ட் இம்யூனிட்டி என்றால் என்ன?

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 77 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொருத்த வரையில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் சமூக பரவல் மற்றும் ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் ஆகியன பற்றிய கேள்விகள் முன் வரத் தொடங்கின. ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் என்னும் நிலையை இந்தியா இன்னும் எட்டவில்லை என்கிறது.

சமூகப் பரவல் என்றால் என்ன?

நோய்த்தொற்று ஏற்பட்ட நபரிடம் தொடர்புகொள்ளாமல் அல்லது நோய்த் தொற்று பரவும் நாடுகளுக்குச் செல்லாமல் இருக்கும் ஒரு நபருக்கு தொற்று ஏற்படுவது சமூக பரவல் எனப்படும்.

இது நோய் பரவலில் மூன்றாம் நிலை ஆகும். இந்நிலையில் நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் சமூகப் பரவல் ஏற்படுகிறதா?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் நான்கு கட்டமாகப் பரவலாம்.

தொற்றின் முதலாம் கட்டம் என்பது, பிற நாடுகளுக்குப் பயணித்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு திரும்புவது. இந்தியா இந்த நிலையைக் கடந்து விட்டது. அவ்வாறு பயணித்து வந்தவர்கள் உள்ளூரில் நோய் பரவக் காரணம் ஆனார்கள்.

இரண்டாம் கட்டத்தில் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டதால் தொற்று ஏற்படும். அவ்வாறு தொற்று உள்ளவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களாக இருக்கலாம் அல்லது வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவராக இருக்கலாம்

மூன்றாம் கட்டம் சமூகப் பரவல் ஆகும். இந்த கட்டத்தில் நோய்த்தொற்று எங்கே இருந்து பரவுகிறது என்பதை கண்டறிவது மிகவும் கடினமானதாகும்.

நான்காம் கட்டத்தில் வைரஸ் உள்ளூரிலேயே, பெருந்தொற்று போல பரவும்.

சமூக நோய் எதிர்ப்பு கூட்டு திறன் என்றால் என்ன?

சமூகத்தில் ஒரு நோய் அதிக நபர்களுக்கு பரவும்போது, மனிதர்களிடமுள்ள நோய் எதிர்ப்பு திறன் அந்த நோய் மேலும் பரவாமல் இருக்க உதவும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்து நோய் எதிர்ப்புத் திறனை தங்களுக்குள் கொண்டிருப்பார்கள். அதாவது அவர்களுக்கு இயற்கையாகவே நோயை எதிர்க்கும் எதிர்ப்புத் திறன் உருவாகியிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images

சமூக நோய் எதிர்ப்புக் கூட்டுத் திறன் எவ்வாறு இருக்கும்?

அதிக மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புத் திறன் கொண்டிருந்தால் மேலும் நோய் பரவுவது தடுக்கப்படும். இதன் மூலம் நோயால் பாதிக்கப்படாமல் இருப்பவர்களுக்கும் நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

அமெரிக்க இதய அமைப்பின் தலைமை மருத்துவர் எட்டார்டோ சான்சேஸ் தன்னுடைய இணையப் பக்கதில் இதை விளக்க முயற்சித்துள்ளார்:

மனிதர்கள் சமூகமாக வாழும் போது அவர்களில் அதிகப்படியானவர்கள் நோய் விளைவிக்கும் வைரஸ்களுக்கு எதிர்ப்புத் திறனை கொண்டிருந்தால், அந்த சமூகத்தில் நோய் தாக்கப்படாதவர்களை வைரஸ் தாக்குவது என்பது கடினமானதாகும்.

இதனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நோய் பரவுதல் நின்றுவிடும். இந்த முறை நடைமுறையாக மாற சிறிது காலம் எடுக்கும். அதே சமயம் எளிதாக தொற்று பரவக்கூடிய மக்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கும்போது இந்த சமூக நோய் எதிர்ப்புக் கூட்டுத் திறன் அதிகரிக்கும் என எழுதியுள்ளார்.

கோவிட்-19க்கு சமூக நோய் எதிர்ப்புக் கூட்டுத் திறன் உருவாக 60 சதவீத மக்கள் பாதிக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் வைரஸுடன் போராடி நோய் எதிர்ப்புத் திறனை வளர்த்திருக்க வேண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கூற்றின்படி 80 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் இருந்தால் மட்டுமே சமூக நோய் எதிர்ப்புக் கூட்டுத் திறன் நிலையை எட்ட முடியும்.

நோயின் தொற்றும் தன்மையை பொருத்து 70 முதல் 90 சதவீத மக்கள் நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருந்தால் சமூக நோய் எதிர்ப்புக் கூட்டுத் திறன் நிலையை அடையலாம்.

தட்டம்மை, பக்கவாதம், சின்னம்மை போன்ற பரவக் கூடிய நோய்கள் ஒரு காலத்தில் வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது தடுப்பு மருந்தின் உதவியால் சமூக நோய் எதிர்ப்புக் கூட்டுத் திறன் நிலையை எட்டி அந்த நோய்கள் அரிதாகி விட்டன.

ஆனால் தடுப்பு மருந்து தயாரிக்கப்படாத பரவக் கூடிய நோய்களுக்கு பெரியவர்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு திறன் இருந்தாலும் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பவர்களுக்கு தொற்று பரவும்.

மேலே கூறப்பட்ட பரவக்கூடிய நோய்கள் ஏற்பட்ட காலத்தில் தடுப்பு மருந்து தயாரிப்பதற்கு முன் இவ்வாறு பரவியதை பார்க்கலாம்.

கோவிட்-19க்கு காரணமான சார்ஸ் கோவ்-2 மற்ற கொரோனா வைரஸ் போன்றதானால், இதிலிருந்து குணமடைந்தவர்களின் நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டு சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை நோய் பரவாமல் தடுக்கலாம். ஆனால் வாழ்க்கை முழுவதும் இதைச் செய்ய முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: