டெக்ஸாமெத்தாசோன்: கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிர் காக்கும் முக்கிய கண்டுபிடிப்பு

  • மைக்கேல் ராபர்ட்ஸ்,
  • சுகாதாரப் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் ஆன்லைன்
கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

டெக்ஸாமெத்தாசோன் என்ற ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மருந்து ஒன்று கொரோனா வைரஸ் தொற்றி தீவிர பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளின் உயிர் காக்கப் பயன்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மிக குறைந்த விலையில் பரவலாக கிடைக்க வாய்ப்புள்ள இந்த மருந்து கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவல்லது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மிக குறைந்த அளவு தரக்கூடிய ஸ்டீராய்ட் மருந்தான டெக்ஸாமெத்தாசோன், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் என்று பிரிட்டன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு ஒன்று இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறது.

வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை மூன்றில் ஒரு பங்கு இது குறைக்கிறது என்றும், ஆக்சிஜன் செலுத்தப்படும் நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை ஐந்தில் ஒரு மடங்கு குறைக்கிறது என்றும் இந்த ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என்கிறது இந்த ஆய்வுக் குழு.

ஏராளமான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த மருந்து பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

கொரோனா தொற்று ஏற்படும் ஒவ்வொரு 20 பேரிலும் 19 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்படாமலே குணமாகிவிடுகின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறவர்களில் பெரும்பாலானவர்களும் குணமடைகின்றனர். வெகு சிலருக்கே ஆக்சிஜன் செலுத்துவதும், இயந்திர வெண்டிலேட்டர் உதவியும் தேவையாக இருக்கிறது. இந்த தீவிர இடர்பாடு உடைய வெகு சில நோயாளிகளுக்கு டெக்ஸாமெத்தாசோன் உதவி செய்வது தெரியவந்துள்ளது.

பலவகை உடல் பிரச்சனைகளால் ஏற்படுகிற அழற்சிகளைக் குணப்படுத்த இந்த மருந்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனித உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும்போது, அந்தப் போராட்டம் அளவு கடந்து செல்லுமானால், அதுவே உடலுக்கு சேதம் ஏற்படுத்துவதாக மாறிவிடும். இந்த சேதாரத்தைத் தடுப்பதற்கு இந்த மருந்து உதவி செய்வதாகத் தெரிகிறது.

நோய்க்கு எதிராக உடல் ஆற்றும் மிதமிஞ்சிய எதிர்வினைக்குப் பெயர் 'சைட்டோகைன் புயல்' (Cytokine Storm). இந்த மிதமிஞ்சிய எதிர்வினை மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழு நடத்திய இந்த ஆய்வில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2,000 பேருக்கு டெக்ஸாமெத்தாசோன் தரப்பட்டது. இந்த மருந்து தரப்படாத 4,000 நோயாளிகளோடு இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.

வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த கோவிட்-19 நோயாளிகளுக்கு இந்த மருந்தை தந்தபோது அவர்கள் இறக்கும் வாய்ப்பை இது 40 முதல் 28 சதவீதம் வரை குறைத்தது. ஆக்சிஜன் தேவைப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்தினை தந்தபோது அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பை இது 25 முதல் 20 சதவீதம் வரை குறைத்தது.

"இதுவரை கோவிட் நோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்ட மருந்து இது ஒன்றே. இது பெரிய அளவில் இறப்பைக் குறைக்கிறது. இது பெரிய முன்னேற்றம்" என்று கூறியுள்ளார் இந்தக் குழுவின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் பீட்டர் ஹார்பி.

வென்டிலேட்டரில் சிகிச்சை பெறும் 8 நோயாளிகளில் ஒருவரை இந்த மருந்தின் உதவியோடு காப்பாற்றலாம் என்று இந்தக் குழுவின் தலைமை ஆய்வாளர் பேராசிரியர் மார்ட்டின் லான்ட்ரே கூறியுள்ளார்.

ஆக்சிஜன் செலுத்தப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்தைத் தருவதால் 20-25 நோயாளிகளில் ஒருவர் உயிரைக் காக்கலாம்.

"இது மிகத் தெளிவான ஆதாயம். 10 நாள்கள் வரையில் டெக்ஸாமெத்தாசோன் தரும் இந்த சிகிச்சைக்கு ஒரு நோயாளிக்கு 5 பவுண்டுகள் செலவு பிடிக்கும். இது உலக அளவில் கிடைக்கும் மருந்தும்கூட".

பட மூலாதாரம், Getty Images

மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கோவிட்-19 நோயாளிகளுக்கு தாமதிக்காமல் இந்த மருந்தினை பொருத்தமான நேரத்தில் தரலாம். ஆனால், மக்கள் மருந்துக்கடைக்கு சென்று வாங்கிவந்து இந்த மருந்தைப் பயன்படுத்தக்கூடாது என்கிறார் லான்ட்ரே.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்தினால் ஆதாயம் ஏதுமில்லை. குறிப்பாக, சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு, சுவாசிப்பதற்கு மருத்துவமனை உதவி தேவைப்படுகிறவர்களைத் தவிர பிற நோயாளிகளுக்கு இந்த மருந்தினால் பயனில்லை.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்படும் மருந்துகளைப் பரிசோதித்துப் பார்த்து அவற்றில் எவை உண்மையில் உதவிகரமாக, ஆக்கபூர்வமாக இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் 'ரெக்கவரி ட்ரையல்' என்ற ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ரெக்கவரி ட்ரையல் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் கூட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த மருந்தால் மரணமும், இதயக் கோளாறும் அதிகரிப்பதாக எழுந்த கவலையை அடுத்து இது கைவிடப்பட்டது.

'ரெம்டிசிவிர்' என்ற வைரஸ் கொல்லி மருந்தும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைவதற்கு எடுத்துக்கொள்ளும் காலத்தை இது குறைப்பது கண்டறியப்பட்டு, பிரிட்டன் தேசிய சுகாதார சேவை மூலம் இது பயன்படுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

"முடக்குவாதம், ஆஸ்துமாவுக்குப் பயன்படுத்திய மருந்து"

கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ள முதல் மருந்தான டெக்ஸாமெத்தாசோன் ஒன்றும் புதிய மருந்தல்ல. அது ஏற்கெனவே முடக்குவாதம், ஆஸ்துமா உள்ளிட்ட பல நிலைகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துதான் என்கிறார் பிபிசி சுகாதார செய்தியாளர் ஃபெர்குஸ் வால்ஷ்.

டெக்ஸாமெத்தாசோன் செய்தி குறித்து அவர் செய்துள்ள பகுப்பாய்வு:

வென்டிலேட்டரில் வைக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளில் பாதிப்பேர் இறந்துவிடுகின்றனர். இந்நிலையில், இத்தகைய நோயாளிகளின் இறப்பு விகிதத்தை இந்த மருந்து மூன்றில் ஒரு பங்கு குறைக்கும் என்பது பெரிய விஷயம்.

மிக மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ரத்தக் குழாய் மூலம் இந்த மருந்தை ஏற்றலாம். மற்றவர்களுக்கு மாத்திரையாகத் தரலாம்.

இது தவிர, கோவிட்-19 நோயாளிகளின் சிகிச்சையில் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ள ஒரே மருந்து ரெம்டிசிவிர் என்னும் வைரஸ் கொல்லி மருந்துதான். இது, நோயாளிகள் குணமடைவதற்கான காலத்தை 15 நாள்களில் இருந்து 11 நாள்களாக குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ரெம்டிசிவிர் உயிரிழப்புகளைக் குறைப்பதாக காட்டும் அளவுக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. அது தவிர, ரெம்டிசிவிர் புதிய மருந்து. அதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்கிறார் ஃபெர்குஸ் வால்ஷ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: