சோப் Vs ஹேண்ட் வாஷ்: கொரோனாவை கொல்லும் சக்தி எதற்கு அதிகம்?

சோப் Vs ஹேண்ட் வாஷ்: கொரோனாவை கொல்லும் சக்தி எதற்கு அதிகம்?

பட மூலாதாரம், Getty Images

மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, சோப் மற்றும் தண்ணீர் மூலம் கைகளை கழுவுவது ஆகியவை, கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பெருந்தொற்று உலகளாவிய அவசர நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டதில் இருந்து, வைரஸுக்கு எதிராக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பல சுகாதார அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

அதில் ஒன்று மீண்டும் மீண்டும் கூறப்படுவது, முறையாக கைகளை கழுவ வேண்டும் என்பது.

கைகளை சரியான முறையில் எப்படி கழுவ வேண்டும் என பல வல்லுநர்களும் பல முறை பேசியிருக்கிறார்கள்.

குறைந்தது 20 வினாடிகள் சோப்பை வைத்து வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவ வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

முறையாக கைகளை கழுவுவது எப்படி என உலக சுகாதார நிறுவனமும் வரைபடம் ஒன்றை வெளியிட்டது

Banner image reading 'more about coronavirus'
Banner

கொரோனா தொற்று தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. பல நாடுகளிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வால் ஊரடங்கு அமல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவை எதிர்த்து போராட கைகளை கழுவ வேண்டும் என்ற வழக்கத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளுக்கு வரும் ஆயிரம் பேரில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே சரியான முறையில் கைகளைக் கழுவுவதாக எத்தியோப்பிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

சாதாரண சோப் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரில் கைகழுவினாலே வைரஸ் தொற்று பரவலை குறைக்க முடியும் என்கிறார் பாஸ்டனில் உள்ள வட கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேதியியல் இணைப்பேராசிரியர் தோமஸ் கில்பர்ட்.

"இந்த வைரஸ்களின் மரபணு துகள்களை லிப்பிட் சவ்வுகள் (lipid membranes) என்று அழைக்கப்படும் சவ்வுகள் சுற்றியுள்ளன, இதனால்,அவற்றுக்கு எண்ணெய், க்ரீஸ் போன்ற அமைப்பு இருக்கும். இதனை சோப் மற்றும் தண்ணீரைக் கொண்டு அழிக்க முடியும்" என்கிறார் கில்பர்ட்.

Graphic representation of soap and the greasy lipid outer layer of coronavirus

பட மூலாதாரம், Science Photo Library

வெளியே இருக்கும் இந்த துகள்களை அழிப்பதால், வைரஸ் செல்கள் உடைந்துபோகும். மேலும் வைரஸை பெருக்க மனித செல்களை உபயோகிக்க உதவும் ஆர்என்ஏ-வும் கைகளை கழுவுவதில் அழிந்த போகும்.

"உங்கள் கைகளை ஈரமாக்கி, சோப் மற்றும் தண்ணீர் போட்டு அந்த நுரையால் கைகளை 20 விநாடிக்கும் குறையாமல் அனைத்து இடங்களிலும் படுமாறு கழுவ வேண்டும். இந்த நேரத்தில் லிப்பிட் சவ்வுக்கும், சோப்புக்கும் இடையே ஏற்படும் வேதியியல் எதிர்வினை போதுமானது. வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவும்போது, மிக விரைவாகவே வைரசை எதிர்த்து போராட உதவுகிறது" என்று தோமஸ் கில்பர்ட் கூறுகிறார்.

'சோப் கட்டாயம் வேண்டும்'

வெறும் தண்ணீருக்கு மட்டும் வைரஸை திறன் இழக்க வைக்கும் தன்மை இல்லை என்கிறார் பிரிட்டனின் கெண்ட் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு அறிவியல் பேராசிரியர் மார்டின் மைக்கெலிஸ்.

காணொளிக் குறிப்பு,

கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எவ்வாறு?

"உதாரணமாக சமைக்கும்போது உங்கள் கைகளில் எண்ணெய் பட்டால், அதனை வெறும் தண்ணீரை வைத்து மட்டும் கழுவினால் போகாது. சோப் வேண்டும். அதுபோலதான் வைரஸ் உங்கள் கைகளில் இருந்து நீங்க சோப் பயன்படுத்த வேண்டும்" என்கிறார் அவர்.

சேனிடைசர்கள் பயன்பாட்டால், கைக்கழுவுவதன் முக்கியத்துவம் குறைந்து வருகிறது.

சூப்பர் மார்கெட்கள் மற்றும் கடைகளுக்கு வெளியே சேனிடைசர்கள் வைப்பது தற்போது வழக்கமாகிவிட்டது.

நீங்கள் வீட்டிலேயே நாள் முழுக்க இருக்கிறீர்கள், உங்கள் வீட்டிற்கு யாரும் வரவில்லை என்றால், நீங்கள் எப்போதும் கைகளை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என தாமஸ் கில்பர்ட் கூறுகிறார்.

"உங்கள் காரிலோ அல்லது வாசலிலோ சேனிடைசர் வைக்கலாம். ஆனால், சோப் மற்றும் தண்ணீர் இல்லாத சூழலில் சேனிடைசர் பயன்படுத்தலாம். நான் சேனிடைசர்களுக்கு பதிலாக கைக் கழுவுவதையே வலியுறுத்துவேன்" என்கிறார் அவர்.

எப்போதெல்லாம் கைக்கழுவ வேண்டும்?

பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் மக்கள், ஒருசில மணி நேரங்களுக்கு ஒருமுறை கைகளை கழுவ வேண்டும் என்று பிரிட்டன் அரசின் அறிவியல் ஆலோசனைக்குழு பரிந்துரைத்தது. பெரும்பாலான மக்கள் அப்போது வீட்டிலேயே இருந்தனர்.

எப்போதெல்லாம் கைக்கழுவ வேண்டும்?

ஆனால், நாள் முழுக்க வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் கில்பர்ட். எனினும், கழிவறை பயன்படுத்திய பின்பு, சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளை கழுவுவது அவசியம்.

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது பிற வைரஸ்களால் பாதிக்கப்பட்டவரை நீங்கள் பார்த்துக் கொள்கிறீர்கள் என்றால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டியது அவசியம்.

சோப் Vs ஹேண்ட் வாஷ்

சிலர் சோப் அல்லாது வைரஸ் எதிர்ப்பு ஹேண்ட் வாஷ்கள் சிறந்தது என எண்ணி அதனை பயன்படுத்துகிறார்கள். ஆனால், அப்படியல்ல. சோப் மட்டுமே போதுமானது என்கிறார் மாரடின்.

"சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்கள், பாக்டீரியாக்களை எதிர்த்து போராடக்கூடியவையாக இருக்கிறது. பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டிருந்தால், அவற்றுக்கு வைரசை கொள்ளும் திறன் இருக்காது"

சோப்பை தவிற பிற பொருட்களை பயன்படுத்தும் போது அவை சுற்றுச்சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று அவர் தெரிவிக்கிறார்.

சோப் Vs ஹேண்ட் வாஷ்: கொரோனாவை கொல்லும் சக்தி எதற்கு அதிகம்?

பட மூலாதாரம், Getty Images

குடிக்கும் தன்மை கொண்ட நல்ல நீரில்தான் கைகளை கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை என கில்பர்ட் மற்றும் மார்டின் இருவரும் தெரிவிக்கின்றனர்.

சோப் போன்ற ஏதேனும் ஒன்று இருந்து நீங்கள் கைகளை கழுவினால் போதுமானது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கைகளை அவ்வப்போது கழுவுவது, கொரோனா வைரஸ் மட்டுமல்லாது பிற நோய்களையும் எதிர்த்து போராட உதவுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: