சென்னை ஐஐடியின் புதிய ஹெச்.ஐ.வி மருந்து: 'எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆயுளை நீட்டிக்கும்'

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
எய்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சிவப்பு ரிப்பன் எய்ட்ஸ் விழிப்புணர்வை அடையாளப்படுத்துகிறது.

எய்ட்ஸ் நோயாளியின் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் முதிர்வு அடைந்து பெருகுவதை தடுக்கும், மருந்தின் மெய்நிகர் மாதிரியை, (விர்ச்சுவல் மாடல்) உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து ஹெச்.ஐ.வி வைரஸ் வைரஸ் தொற்று உள்ளவர்களின் ஆயுளை நீட்டிக்கும் என்பது அவர்கள் கூற்று.

எனினும், இந்த மருந்து முழுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அதன் வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என நிபுணர்கள் மாற்றுக் கருத்தை முன்வைக்கின்றனர்.

ஹெச்.ஐ.வி நோயாளிகளின் வாழ்நாளை நீட்டிக்க ஆய்வு

16 ஆண்டு கால ஆய்வுக்கு பின்னர், மருந்தின் விர்ச்சுவல் மாதிரியை உருவாக்கியுள்ளதாக கூறும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், மருந்து செயல்பாட்டுக்கு வந்தால், ஹெச்.ஐ.வி நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிக்கப்படும் என்கிறார்கள்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், இதேபோல இதற்கு முன்னதாக வெளியான தடுப்பு மருந்துகள் பலவும், சில காலத்துக்குப் பின் செயல் இழந்துவிட்டன என்கின்றனர்.

இந்த மருந்து முதலில், நோய் தொற்று உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தபட்ட பின், அதன் செயல்திறனை பொருத்துதான் வெற்றியைத் தீர்மானிக்கமுடியும் என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், மருந்துகள் சில காலம் கழித்து ஏன் செயலிழந்து விடுகிறது என்பதும் ஐஐடி ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ஐ.வி வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சி பல நாடுகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. 1995 முதல், உலகளவில் சுமார் பத்து தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டாலும், அந்த மருந்துகள் ஒரு சில ஆண்டுகளில் செயலிழந்து விடுவது வாடிக்கையாகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிவியல் கட்டுரை

ஐஐடி சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் சஞ்சீப் சேனாபதி மற்றும் இரண்டு ஆய்வு மாணவர்கள் முகமது ஆசான், சின்மயி பிண்டி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவியல் கட்டுரை சமீபத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஹெச்.ஐ.வி வைரஸ் முதிர்வு அடைவதை தடுப்பது எப்படி என்றும் அதன்மூலம் நோயாளியின் ஆயுட்காலத்தை எவ்வாறு நீட்டிக்கலாம் எனவும் விளக்கும் கட்டுரை ஒன்றை மூன்று ஆய்வாளர்கள் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹெச்.ஐ.வி தொற்றோடு வாழும் 4 பேரில் ஒருவருக்கு தனக்கு இந்த தொற்று இருப்பது பற்றி தெரியாது.

இந்தக் கட்டுரையை அடுத்து, அவர்கள் வடிவமைத்துள்ள மருந்தின் மாதிரிக்கு செயல்வடிவம் கொடுக்க மருந்து நிறுவனங்கள் அணுகியுள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வின்போது ஏற்பட்ட அனுபவங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்ட பேராசிரியர் சஞ்சீப், '' இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அளித்த நிதி மூலம் இந்த ஆய்வு நடைபெற்றது. தொடக்க காலத்தில், பல நாடுகளில் வெளியான தடுப்பு மருந்து ஏன் செயல் இழக்கின்றன என ஆராய்ந்தோம். தடுப்பு மருந்துகள் ஒரு சில ஆண்டுகளில் ஏன் வேலைசெய்வதில்லை என்பதற்கு பல காரணிகளை கண்டறிந்தோம்.''

''வைரஸ் முதிர்ச்சி அடைவதை தடுப்பதில்தான் சிக்கல் இருக்கிறது என்பதை கண்டறிந்தோம். இதனை கவனித்து, வைரஸின் முதிர்ச்சியை தடுத்துவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் உடலில் அந்த வைரஸ் பெருகுவது குறையும் என்பதை உறுதி செய்தோம்,''என்கிறார்.

தற்போது கண்டறிந்துள்ள மாதிரி மருந்து வடிவம் செயல்பாட்டுக்கு வருவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன என்றும் கூறுகிறார் சஞ்சீப்.

''வைரஸ் உடலில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட நபர் விரைவில் இறப்பதை இந்த மருந்து தடை செய்யும். நோயாளியின் வாழ்நாள் அதிகரிப்பதற்கான சாத்தியங்களை இந்த மருந்து கொடுக்கும் என்பதை எங்கள் ஆய்வு முடிவாக வெளியிட்டுள்ளோம். புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தனியார் மருந்து நிறுவனமும், சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனையும் மருந்து தயாரிப்பில் ஈடுபட அவர்களின் பங்களிப்பை உறுதிசெய்துள்ளார்கள். விரைவில், இந்த மருந்தின் செயல் வடிவத்தை உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது,''என்கிறார் பேராசிரியர் சஞ்சீப்.

புதிய கண்டுபிடிப்பு என்று கூற முடியுமா?

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் மருத்துவ அதிகாரிகளிடம் பேசியபோது, விர்ச்சுவல் மாதிரி மட்டும்தான் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என்பதால், ஆராய்ச்சியாளர்களின் கூற்றை புதிய கண்டுபிடிப்பு என ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார்கள்.

பிபிசிதமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத மருத்துவ அதிகாரி ஒருவர், ''உயிர்க் கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது சவாலான காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. அதேவேளை, விர்ச்சுவல் மாதிரி ஒரு தீர்வு அல்ல என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.'

'அறிவியல் இதழில் கட்டுரை வெளியிட்டதும், அது இறுதியான கண்டுபிடிப்பு என சொல்லமுடியாது. ஆராய்ச்சியாளர்களின் முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். கவனமும் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்,'' என்கிறார் அந்த மருத்துவ அதிகாரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: