மூடு விழா காணும் எல்.ஜி போன்களின் சகாப்தம் - ஏன் இந்த முடிவு?

அலைபேசி தயாரிப்பு தொழிலில் இருந்து விலகுவதாக எல்.ஜி அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images

தங்களது நிறுவனத்துக்கு தொடர்ந்து இழப்பை கொடுத்து வரும் திறன்பேசி தயாரிப்பு தொழிலில் இருந்து விலகுவதாக எல்.ஜி எலக்ட்ரானிக்ஸ் இன்று (ஏப்ரல் 5, திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

கடந்த ஆறாண்டுகளில் மட்டும் சுமார் 450 கோடி டாலர்கள் இழப்பை சந்தித்துள்ள திறன்பேசி தயாரிப்பு தொழிலை அடுத்து என்ன செய்வதென்று ஆராய்ந்து வருவதாக தென் கொரியாவை சேர்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.

திறன்பேசியில் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராக்கள் உட்பட பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ள எல்.ஜி நிறுவனம், 2013ஆம் உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக உயர்ந்தது.

ஆனால், காலப்போக்கில் அலைபேசி சந்தை "நம்பமுடியாத அளவிற்கு போட்டி மிகுந்ததாக" மாறிவிட்டதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

திறன்பேசி தயாரிப்பு சந்தையில் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களாக சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகியவை விளங்கும் நிலையில், எல்.ஜி தனது வன்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த பிரச்னைகளால் சவாலை சந்தித்து வந்தது.

எல்.ஜி வருவாய் இழப்புகளுடன் போராடியதால், வணிகத்தின் ஒரு பகுதியை விற்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அது பலனளிக்கவில்லை.

வட அமெரிக்க சந்தையில் மூன்றாவது மிகப் பெரிய திறன்பேசி நிறுவனமாக எல்.ஜி தொடர்ந்து வந்தாலும், அது உலகின் மற்ற பிராந்தியங்களில் தனது வணிகத்தை இழந்துவிட்டது. அதேபோன்று, எல்.ஜி உள்நாட்டு சந்தையான தென் கொரியாவில் தொடர்ந்து கோலூச்சி வருகிறது.

"நம்பமுடியாத அளவிற்கு போட்டி மிகுந்த அலைபேசி துறையிலிருந்து வெளியேறும் எல்.ஜியின் முடிவு, மின்சார வாகனம் சார்ந்த பொருட்கள், தானியங்கி சாதனங்கள், ஸ்மார்ட் ஹோம்ஸ், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் வணிகத் தீர்வுகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் விடயங்களில் நிறுவனத்தின் வளங்களை பயன்படுத்த உதவும்" என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு எல்.ஜி நிறுவனம் 2.8 கோடி அலைபேசிகளை தயாரித்து சந்தைக்கு அனுப்பிய நிலையில், அதே காலகட்டத்தில் சாம்சங் நிறுவனம் 25.6 கோடி அலைபேசிகளை தயாரித்ததாக கவுன்டர்பாய்ன்ட் என்ற சந்தை ஆய்வு நிறுவனம் தரவு வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், LG

ஐந்து தொழில் பிரிவுகளை கொண்டுள்ள எல்.ஜி நிறுவனத்தில் திறன்பேசி தயாரிப்பு தொழிலே 7.4 சதவீதத்துடன் மிகவும் குறைந்த வருமானம் கொடுக்கும் பிரிவாக இருந்து வருகிறது. தற்போதைய உலக அலைபேசி தயாரிப்பு சந்தையின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே.

திறன்பேசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்காக எல்.ஜி நிறுவனம் தொடர்ந்து திறன்பேசிகளில் புதிய சிறப்பம்சங்களையும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் சேர்த்து வந்தது. உதாரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு T வடிவம் கொண்ட ஒன்றோடொன்று பிணைந்த இரண்டு திறன்பேசிகளை கொண்ட புதுவித தயாரிப்பான எல்.ஜி விங்கை வெளியிட்டிருந்தது.

ஆனாலும், அந்த நிறுவனத்தால் எதிர்பார்த்த அளவுக்கு சந்தையில் தாக்கத்தை செலுத்த முடியவில்லை.

மின்சார கார்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி

பட மூலாதாரம், LG

வீட்டு உபகரணங்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுடன் நுகர்வோர் மின்சாதனப் பொருட்கள் வணிகத்தில், எல்.ஜி நிறுவனம் இன்னமும் வலுவான பங்களிப்பை கொண்டுள்ளது. சாம்சங்கிற்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப் பெரிய தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பு நிறுவனமாக எல்.ஜி விளங்குகிறது.

மேக்னா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் இணைந்து வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் எல்.ஜி நிறுவனம் அறிவித்திருந்தது.

எல்.ஜியின் திறன்பேசி தயாரிப்பு தொழிலை விற்கும் முடிவு தொடருவதாகவும், எனினும் ஏற்கனவே விற்பனையான திறன்பேசிகளுக்கான வாடிக்கையாளர் சேவைகளும், புதிய மென்பொருள் பதிப்புகளும் தடையின்றி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"எல்.ஜி அலைபேசி தயாரிப்பில் உள்ள நிபுணத்துவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதோடு, 6ஜி போன்ற திறன்பேசி சார்ந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது, மற்ற வணிகங்களில் போட்டியை மேலும் வலுப்படுத்த உதவும்" என்று அந்த நிறுனத்தின் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

எல்.ஜியின் இந்த அறிவிப்பால் அதன் தென் கொரிய போட்டியாளரான சாம்சங் மற்றும் சீன நிறுவனங்களான ஒப்போ, விவோ மற்றும் ஜியோமி போன்றவை அதிக பலன் பெற வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: