ஹேக்கர்கள் கசியவிட்ட 53 கோடி ஃபேஸ்புக் பயனர் தகவல்கள்: உங்கள் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா?

ஹேக்கர்களால் கசியவிடப்பட்ட 53 கோடி ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் - உங்கள் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா?

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 53 கோடி ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணைய தரவுத்தளத்தில் கசிந்துள்ளன. பெரும்பாலும் பயனர்களின் அலைபேசி எண்கள் கசிந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இதில் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களும் கசிந்துள்ளனவா என்பதை ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தெரிந்துகொள்ளும் வசதியை இணையதளம் ஒன்று வழங்குகிறது.

Have I Been Pwned என்ற இணையதளத்தின் சேவையை பயன்படுத்தி ஒருவர் தனது அலைபேசி எண் அல்லது மின்னஞ்சலை கொண்ட இணைய சேவைகளின் கணக்கு விவரங்கள் ஏதாவது திருடப்பட்டு பொதுவெளியில் கசிந்துள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்கு உதவுகிறது.

எனினும், தற்போது பேசுபொருளாகி வரும் தரவு கசிவு சம்பந்தப்பட்ட தகவல்கள் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான பழைய தரவு திருட்டுடன் தொடர்புடையவை என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தாலும், இதுகுறித்த விசாரணையை தனியுரிமை கண்காணிப்பு குழுக்கள் முடுக்கிவிட்டுள்ளன.

தரவு கசிவு

இந்த தரவு கசிவை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே "கண்டறிந்து அதை சரிசெய்துவிட்டதாக" ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகிறது.

ஆனால், தற்போது கசிந்துள்ள தரவுகள் மிகப் பெரும் அளவில் இணைய ஹேக்கிங் குழு ஒன்றில் இலவசமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.

106 நாடுகளை சேர்ந்த 53.3 கோடி மக்களை இந்த தரவுத்தளம் உள்ளடக்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதில், 3 கோடி அமெரிக்கர்கள், பிரிட்டனை சேர்ந்த 1.1 கோடி ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் 70 லட்சம் ஆஸ்திரேலியர்களும் அடக்கம்.

பட மூலாதாரம், Getty Images

"பயனர்களின் ஃபேஸ்புக் சம்பந்தப்பட்ட அனைத்து தரவும் வெளியாகவில்லை. எனினும், 50 கோடிக்கும் அதிகமானவர்களின் அலைபேசி எண்கள் மற்றும் லட்சக்கணக்கானோரின் மின்னஞ்சல் முகவரிகள் கசிந்துள்ளன" என்று கூறுகிறார் HaveIBeenPwned இணையதளத்தின் நிறுவனரும் மின்னணு பாதுகாப்பு வல்லுநருமான டிராய் ஹண்ட்.

ஃபேஸ்புக் பயனர்களின் தரவு கசிவு தொடர்பான செய்தி வெளியானதும் தங்களது தளத்துக்கு "முன்னெப்போதுமில்லாத எண்ணிக்கையில்" மக்கள் வருகை தந்தனர். இதனால், இந்த கசிவுக்கென தனியே அலைபேசி எண்ணை கொண்டு ஒருவரின் தனிப்பட்ட தகவல் கசிந்துள்ளதா என்பதை பரிசோதிக்கும் தேடல் வசதியை அந்த இணையதளத்திலேயே ஏற்படுத்தியுள்ளதாக ஹண்ட் கூறுகிறார்.

இதற்கு முன்பு வரை, இந்த தளத்தில் ஒருவர் தனது மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டே அவரது ஏதாவது இணைய சேவையின் கணக்கு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு இணையத்தில் கசிந்துள்ளதா என்பதை பார்க்க முடியும்.

"எங்களது இணையதளம் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமின்றி அனைவரின் கேள்விக்கும் பதிலளிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன்" என்று பிபிசியிடம் பேசிய ஹண்ட் கூறினார்.

இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான மார்க் சக்கர்பெர்க்கின் சொந்த அலைபேசி எண்ணும் இந்த தரவு கசிவில் அடக்கம் என்று கூறப்படுகிறது.

"சமீபத்தில் வெளியான ஃபேஸ்புக் தரவு கசிவில், சக்கர்பெர்க்கின் கணக்கில் இந்த அலைபேசி எண்தான் குறிப்பிடப்பட்டிருந்தது" என்று அதுசார்ந்த தரவு கசிவின் ஸ்கிரீன் ஷாட்டுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மின்னணு பாதுகாப்பு வல்லுநர் டேவ் வால்க்கர்.

அந்த ஸ்கிரீன் ஷாட்டுடன் மார்க் சக்கர்பெர்க்கின் அலைபேசி எண் மட்டுமின்றி, அவர் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமில்லாத 'சிக்னல்' என்ற மற்றொரு முன்னணி செய்திப்பரிமாற்ற செயலியை பயன்படுத்துவதும் தெரிகிறது.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, 2011ஆம் ஆண்டு முதல் பயனர்கள் தங்களது அலைபேசி எண்களை குறிப்பிட வேண்டுமென ஃபேஸ்புக் கூறி வருகிறது.

இந்த விவகாரம் தொழில்நுட்ப உலகில் பூதாகரமாகி வரும் நிலையில், இந்த "பழைய தரவை" 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் "கண்டறிந்து, சரிசெய்துவிட்டோம்" என்பதை தவிர்த்து வேறெந்த விளக்கத்தையும் ஃபேஸ்புக் நிறுவனம் அளிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மார்க் சக்கர்பெர்க்

"இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் இன்னும் தெளிவாக கருத்துத் தெரிவிக்க வேண்டியுள்ளது. 2019 சம்பவத்தை மூல காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர், ஆனால் புழக்கத்தில் உள்ள தரவை விளக்க இது போதுமானதாக இல்லை. எனவே, இந்த தரவு கசிவு விவகாரத்தில் நிலவும் வெற்றிடம் பல்வேறு ஊகங்களால் நிரப்பப்பட்டு வருகிறது" என்று ஹண்ட் மேலும் கூறுகிறார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்குமாறு பிபிசி விடுத்த வேண்டுகோளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு தனியுரிமை கண்காணிப்புக் குழுக்கள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகளை தொடங்கியுள்ளன.

அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம், "சமீபத்தில் வெளியாகியுள்ள தரவுத்தொகுப்பு உண்மையில் 2019இல் குறிப்பிடப்பட்டதை போலவே இருக்கிறதா" என்பதை நிறுவ தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக கூறியுள்ளது.

அதேபோன்று பிலிப்பைன்ஸ், ஹாங்காங் உள்ளிட்டவற்றின் தனியுரிமை அமைப்புகளும் இதுகுறித்த ஆய்வுகளைத் தொடங்கியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: