"கொரோனாவால் மனச்சோர்வு, மறதி நோய் ஆபத்து" - எச்சரிக்கும் நிபுணர்கள்

  • ரேச்சல் ஷ்ரேயர்
  • சுகாதார செய்தியாளர், பிபிசி
"கொரோனாவால் மனச்சோர்வு, மறதிநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பு" - எச்சரிக்கும் ஆய்வு முடிவு

பட மூலாதாரம், Getty Images

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மனச்சோர்வு, மறதிநோய், மனநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உளவியல் அல்லது நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பே இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதும் இதில் அடக்கம்.

ஆனால், கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலோ அல்லது அவசர சிகிச்சை பிரிவுகளிலோ அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இதைவிட அதிகமான அபாயம் உள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் நேரடியாக மூளையில் தாக்கத்தை செலுத்துவதும், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலான மன அழுத்தம் இருப்பதும் இதற்கான ஒருங்கிணைந்த காரணங்களாக உள்ளன.

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து லட்சம் நோயாளிகளின் மின்னணு மருத்துவ தரவை ஆய்வு செய்தனர். அப்போது கீழுள்ள காரணங்கள் உள்பட பொதுவான 14 உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தனர்:

  • மூளை ரத்தக்கசிவு
  • பக்கவாதம்
  • பார்கின்சன்
  • குய்லின்-பார் நோய்க்குறி
  • மறதிநோய்
  • மனநோய்
  • மனநிலை கோளாறுகள்

இவற்றில் பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்னையாக உள்ளது. மேலும் இவை மிகவும் நோய்வாய்ப்பட்ட அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனுபவம் சார்ந்த மன அழுத்தத்தினாலேயே ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர்.

இதை தவிர்த்து பக்கவாதம் மற்றும் மறதிநோய் போன்றவற்றிற்கு உடலில் வைரஸ் ஏற்படுத்தும் நேரடி தாக்கமோ, பொதுவாக தொற்றுகளுக்கு எதிராக உடல் ஆற்றும் எதிர்வினையோ காரணமாக இருக்கலாம்.

எனினும், கோவிட்-19 நோய்த்தொற்றானது பார்கின்சன் அல்லது குய்லின்-பார் நோய்க்குறியின் அபாயத்தை அதிகரிக்கும் காரணியாக இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

காாரணமும் விளைவும்

இது முன்னோட்ட ஆராய்ச்சி ஆக மேற்கொள்ளப்பட்டதால், இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு இணை நோய்கள் ஏற்பட்டதற்கு கொரோனாதான் காரணமா என்பதை ஆராய்ச்சியாளர்களால் உறுதிபட தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கு பின்னர் பக்கவாதத்தாலோ, மனஅழுத்தத்தாலோ பாதிக்கப்பட்டதற்கு கொரோனா காரணமாக இல்லாமலும் இருக்கலாம்.

எனினும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்ட குழுவை காய்ச்சல் மற்றும் மற்ற சுவாசம் சார்ந்த பிரச்னைகள் கொண்ட நோயாளிகளின் குழுக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழுவினருக்கே மற்ற குழுவினரை விட மூளை சார்ந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது தெரிய வந்துள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் வயது, பாலினம், இனம் மற்றும் உடல்நிலை ஆகிய வகைப்பாட்டின் கீழ் பிரிக்கப்பட்டு அவர்களை முடிந்தவரை ஒப்பிடத்தக்கதாக மாற்றினர்.

மற்ற சுவாச நோய்த்தொற்றுகளைக் காட்டிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் அல்லது நரம்பியல் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு 16% அதிகம் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, கொரோனாவால் எந்தளவுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தாரோ அந்தளவுக்கு அவர்களுக்கு மனநலம் அல்லது மூளை சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அனைத்து நோயாளிகளிலும் 24% பேர் மனநிலை, பதற்றம் அல்லது மன நல கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நிலையில், இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் 25% ஆகவும், தீவிர சிகிச்சை தேவைப்பட்டவர்களில் 28% ஆகவும், நோய்வாய்ப்பட்ட நிலையில் உளத்தடுமாற்றத்தை (Delirium) எதிர்கொண்டவர்களில் 36% ஆகவும் அதிகரித்து காணப்பட்டது.

இதேபோன்று, பொதுவாக 2% கொரோனா நோயாளிகள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7% ஆகவும், உளத்தடுமாற்றத்தை எதிர்கொண்டவர்களில் 9% ஆகவும் அதிகரித்து காணப்பட்டன.

மேலும், அனைத்து கொரோனா நோயாளிகளுக்கு மத்தியில் 0.7 சதவீதத்தினருக்கு மறதிநோய் ஏற்பட்ட நிலையில், அது பெருந்தொற்றுடன் உளத்தடுமாற்றத்தையும் அனுபவித்தவர்களில் 5 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய அல்ஸைமர் ரிசர்ச் யூகே அமைப்பின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் டாக்டர் சாரா இமரிசியோ, "மறதிநோய் (டிமென்ஷியா) உள்ளவர்களுக்கு கடுமையான கோவிட்-19 நோய்ப்பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டின. இந்த நிலையில், இந்த ஆய்வு அதற்கு எதிர்திசையில் உள்ள சாத்தியங்களை ஆராய்கிறது" என்று கூறுகிறார்.

"கொரோனா பாதிப்பின் தன்மைக்கும், அதனால் ஏற்படும் மற்ற உடல்நல கோளாறுகளுக்கான காரணத்தையும் அறிவது இந்த ஆய்வின் நோக்கமாக இல்லை. ஆனால், அதை விஞ்ஞானிகள் அறிவது அவசியம்."

வைரஸ் மூளைக்குள் நுழைந்து நேரடி சேதத்தை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுகள் உள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பேராசிரியர் மசூத் ஹுசைன் விளக்கினார்.

இது பிற மறைமுக விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக ரத்த உறைதலை பாதிப்பதன் மூலம் பக்கவாதம் ஏற்படலாம். மேலும் நோய்த்தொற்றுக்கு எதிராக உடலில் ஏற்படும் பொதுவான அழற்சி, மூளையை பாதிக்கும்.

கொரோனாவுக்கு பிறகு இதுபோன்ற நோய்ப்பாதிப்புகளை சந்திப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோருக்கு அது முதல்முறை பிரச்னையாக இருந்தது.

ஆனால், இது முன்பே இருந்த ஒரு பிரச்னையின் தொடர்ச்சியான வெளிப்பாடாக இருந்தாலும், அதில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான வாய்ப்பை இது முற்றிலும் நிராகரிக்கவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் உளவியல் மற்றும் நரம்பியல் பிரிவின் பேராசிரியர் டேம் டில் வைக்ஸ், "கோவிட்-19 பாதிப்பு என்பது சுவாசம் சார்ந்த பிரச்னைகள் மட்டுமல்லாது, மனநல மற்றும் நரம்பியல் பிரச்னைகளுடனும் தொடர்புடையது என்ற எங்கள் சந்தேகங்களை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது" என்று கூறுகிறார்.

"நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தபடி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இந்த விளைவுகள் மிகவும் தீவிரமானவை என்றாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாதவர்களிடமும் கடுமையான விளைவுகள் தென்படுகின்றன என்பதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: