பருவநிலை மாற்றம்: விரைவில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் – எச்சரிக்கும் ஆய்வு

  • டேவிட் சுக்மன்
  • அறிவியல் ஆசிரியர்
அதிகரிக்கும் வெப்ப நிலை

பட மூலாதாரம், Reuters

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஏதேனும் ஒரு ஆண்டில், உலகின் வெப்பநிலை அதன் உச்ச வரம்பைத் தொடலாம்.

2025ஆம் ஆண்டுக்குள் ஏதேனும் ஒரு ஆண்டு காலத்தில் உலகின் வெப்ப நிலை, தொழிற்சாலைகளுக்கு முந்தைய காலகட்டத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்க 40 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக ஒரு பெரிய ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.

பருவநிலை மாற்றம் தொடர்பாக பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட இரண்டு வெப்ப நிலை இலக்குகளில் அது குறைவானது.

உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) பிரசுரித்த அறிக்கையில் இந்த முடிவுகள் வந்திருக்கின்றன.

பிரிட்டனின் வானிலை அலுவலகம் மற்றும் அமெரிக்கா, சீனா உட்பட 10 நாடுகளின் பருவநிலை ஆராய்ச்சியாளர்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டது.

கடந்த தசாப்த காலத்தில், ஏதேனும் ஒரு ஆண்டில், உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்கிற வரம்பைத் தொட 20 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டிருந்தது.

இப்போது இந்த புதிய மதிப்பீட்டில் இந்த வாய்ப்பு 40 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

மதிப்பிடப்பட்டிருக்கும் வெப்ப நிலை விவரங்களை 1850 - 1900 ஆண்டு வெப்ப நிலை விவரங்களுடன் ஒப்பிட்டால், வெப்ப நிலை அதிகரித்திருப்பதை தெளிவாகப் பார்க்க முடிகிறது என பிபிசியிடம் தெரிவித்தார் மூத்த வானிலை அலுவலக விஞ்ஞானி லியான் ஹெர்மான்சன்.

"நாம் 1.5 டிகிரி செல்சியஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பது தான் இதன் பொருள். இதுவரை நாம் அங்கு இல்லை. ஆனால் அதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார்

"அழுத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஆனால் அதற்கான நேரம் குறைந்து கொண்டே வருகிறது."

அடுத்த 5 ஆண்டுகளில், ஏதாவது ஒரு ஆண்டின் வெப்ப நிலை, தொழிற்சாலைகளுக்கு முந்தைய கால வெப்ப நிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்தால் கூட, அது தற்காலிகமானது தான் என குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதாவது அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகள் கொஞ்சம் வெப்ப நிலை குறைவாக இருக்கும். நிரந்தரமாக வெப்ப நிலை இந்த 1.5 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருப்பதற்கு அடுத்த சில தசாப்தங்கள் ஆகும்.

உலக சராசரி வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை விட அதிகரித்துவிடாமலும், 1.5 டிகிரி செல்சியஸை தாண்டாமலும் இருக்க முயற்சிப்பது தான் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Reuters

"வானிலை அலுவலகம் குறிப்பிடும் 1.5 டிகிரி செல்சியஸையும், பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடும் 1.5 டிகிரி செல்சியஸையும் குழப்பிக் கொள்ளக் கூடாது" என்கிறார் இம்பீரியல் காலேஜ் லண்டனின் க்ராந்தம் இன்ஸ்டிட்யூட் அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் ஜோரி ரோகெல்ஜ்.

"பாரிஸ் ஒப்பந்தம் உலக வெப்பமயமாதலைக் குறிக்கிறது. அது நம் பூமியின் அதிகரிக்கும் வெப்ப நிலையைக் குறிக்கிறது."

"ஒரே ஆண்டில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரிப்பது என்பது, பாரிஸ் ஒப்பந்த இலக்கை மீறிவிட்டதாகப் பொருளல்ல. இருப்பினும் இது வருத்தமளிக்கும் செய்தி தான்".

"இது நாள் வரை நாம் பருவநிலை மாற்றம் தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை இது நமக்குக் உணர்த்துகிறது. அதோடு புவி வெப்பமடைவதைத் தடுக்க, கார்பன் வெளியீட்டை உடனடியாக பூஜ்ஜியத்துக்கு கொண்டு வர வேண்டும் என நம்மிடம் கூறுகிறது."

கடந்த 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றக் குழுவின் முக்கிய அறிக்கையில், உலகின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்தால் என்ன மாதிரியான மோசமான எதிர்வினைகளை எல்லாம் நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என அதில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதாகக் கூறி இருக்கும் விஷயங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, உலகின் வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என மதிப்பீடுகள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

இந்த புதிய ஆராய்ச்சி வெறுமனே எண்கள் மற்றும் புள்ளியியலைத் தாண்டிய ஒன்று என உலக வானிலை அமைப்பின் பொது செயலாளர் பேராசிரியர் பெட்டெரி டாலஸ் கூறியுள்ளார்.

"நாம் பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் குறைந்தபட்ச அளவுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறோம் என்பதை, உச்சபட்ச அறிவியல் திறனோடு காட்டுகிறது" என விளக்குகிறார்.

"பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை குறைக்கவும், கார்பன் நியூட்ராலிட்டி நிலையை அடையவும் உலகம் தன் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பதற்கான அழைப்பு இது."

"ஒருவேளை புதிய மதிப்பீடுகள் உண்மையாகவே பலித்துவிட்டது என்றால், பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவை நாம் மிஞ்சி விட்டதாகப் பொருளல்ல" என பருவநிலை மாற்ற விஞ்ஞானி மற்றும் ரீடிங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் எட் ஹாகின்ஸ் கூறுகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டின் இரண்டு மாதங்களில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது என குறிப்பிடுகிறார்.

"பொதுவாக காலநிலை வெப்பமாகிறது என்றால், நிறைய மாதங்களில் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்யசிஸைக் கடக்கும், பிறகு சில மாதங்கள் தொடர்ந்து அதிகரிக்கும், பிறகு ஒரு முழு ஆண்டின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸை விட கூடுதலாக இருக்கும், அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வெப்ப நிலை கூடுதலாக இருக்கும், பிறகு நிரந்தரமாக வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருக்கும்" என்கிறார் பேராசிரியர் ஹாகின்ஸ்.

"1.5 டிகிரி செல்சியஸ் என்பது நாம் தவிர்க்க வேண்டிய மாய எண் ஒன்றும் அல்ல" எனவும் வலியுறுத்துகிறார்.

"இது திடீரென அதிகரிக்கும் விஷயமல்ல. இது மெல்ல அதிகரிக்கக் கூடியது. நாம் ஏற்கனவே இந்த ஏற்றப் பாதையில் தான் இருக்கிறோம். காலநிலை வெப்பமடைந்தால், அதனால் ஏற்படும் தாக்கங்கள் மிகவும் மோசமாக இருக்கும்.

வரும் நவம்பர் மாதம் க்ளாஸ்கோவில் பருவநிலை மாற்றம் குறித்த COP26 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. காலநிலை மாற்ற நெருக்கடிகளைக் குறித்து பல நாட்டுத் தலைவர்களுக்கு மத்தியில் இலக்கை அதிகரிப்பது தான் இந்த உச்சி மாநாட்டின் நோக்கம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :