கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இரண்டும் ஒரு டோஸ் போட்டால் என்னாகும்? - கொரோனா தடுப்பு மருந்து பற்றி ஐசிஎம்ஆர் ஆய்வு

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடங்கியது.

பட மூலாதாரம், PUNIT PARANJPE / getty images

கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கு உண்மையா்வே நல்ல முடிவுகள் கிடைக்கின்றன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் துறைசார் வல்லுநர்களால் ஆராயப்படவில்லை. அவ்வாறு வல்லுநர்கள் ஆராய்ந்து இந்த ஆய்வு முடிவுகளை அங்கீகரித்தால், இந்தியாவில் வெவ்வேறு தடுப்பு மருந்துகளின் இரண்டு டோஸ்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் 18 பேரிடம் செய்யப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் கிடைத்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.

இரண்டு டோஸ்களும் ஒரே தடுப்பூசி வழங்கப்படுவதற்கு பதிலாக, இவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் தலா ஒரு டோஸ் தவறுதலாக வழங்கப்பட்டது. ஆறு வார கால இடைவெளியில் இவர்களுக்கு இந்த இரு டோஸ் தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.

முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் கோவேக்சின் மருந்து வழங்கப்பட்டது பாதுகாப்பானது மட்டுமல்லாமல் அவர்களது உடலில் தடுப்பாற்றல் அதிகமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடங்கியது.

இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் எவை?

இந்தியாவில் அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ள கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் - வி மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

ஐந்தாவதாக அனுமதி வழங்கப்பட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினால் போதும்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனீகா மருந்து நிறுவனம் ஆகியவை தயாரித்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு எனும் பெயரில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவே இந்தியாவில் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசியில் சுமார் 90% ஆகும்.

இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்த கோவேக்சின் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகளும் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்துடன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்து மற்றும் ஒரு டோஸ் மட்டுமே செலுத்த வேண்டிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பு மருந்து ஆகியவற்றுக்கும் இந்திய அரசு அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய மருந்து நிறுவனமான சிப்லாவுக்கு, அமெரிக்காவின் மாடர்னா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்வதற்கான ஒப்புதலை இந்திய அரசு வழங்கியுள்ளது.

பயாலஜிகல் - இ நிறுவனத்துடன் ஜான்சன் அண்ட் ஜான்சன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் அதன் தடுப்பூசி தயாரித்து விநியோகம் செய்யப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :