உடல் பருமன், உணவு, வளர்சிதை மாற்றம் குறித்த ஆச்சர்ய கண்டுபிடிப்புகள் - 6,400 பேரிடம் நடத்திய ஆய்வில் கிடைத்தவை என்ன?

  • ஜேம்ஸ் கலேகர்
  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
குழந்தை மற்றும் வயதானவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குழந்தை மற்றும் வயதானவர்

உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ரசாயன மாற்றங்களே வளர்சிதை மாற்றம் எனப்படுகிறது.

நடுத்தர வயதில் வளர்சிதை மாற்றம் குறைவதாக குறை கூற முடியாது என, உடலில் இருக்கும் ஆற்றல் பயன்பாடு தொடர்பாக இதுவரை நடத்தப்படாத ஒரு பகுப்பாய்வில் தெரிய வந்திருக்கிறது.

29 நாடுகளில், 8 நாட்கள் முதல் 95 வயது வரையான பல வயது வரம்பினரைக் கொண்ட 6,400 பேரிடம் நடத்திய ஆய்வில், வளர்சிதை மாற்றம் வாழ்நாள் முழுவதும் "திடமாக" இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

வளர்சிதை மாற்றம் ஒரு (1) வயதில் உச்சத்தை அடைகிறது. 20 வயது முதல் 60 வயது வரை நிலையாக இருக்கிறது, அதற்குப் பிறகு தான் தவிர்க்க முடியாமல் குறைகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் உடலைப் பற்றிய வியத்தகு புதிய நுண்ணறிவுகளைத் தந்ததாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தசைகள் சிதைந்த நிலையில் இருக்கும் அல்லது அதிக தொப்பை கொழுப்பாக இருந்தாலும், பெரிய உடல் செயல்படுவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும்.

எனவே ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அளவீடுகளை மாற்றியமைத்து, உடல் அளவுக்கு தகுந்தாற் போல சரிசெய்து, மக்களின் வளர்சிதை மாற்றத்தை எடைக்கு எடை ஒப்பிட்டுப் பார்த்தனர்.

இந்த ஆய்வு 'சயின்ஸ்' என்கிற அறிவியல் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களின் வளர்சிதை மாற்றம் நான்கு நிலைகளைக் கொண்டது.

1. பிறந்த நாள் முதல் ஒரு வயது வரை, தாயின் அளவுக்கு இருக்கும் வளர்சிதை மாற்றம், வாழ்நாள் உச்சமாக 50 சதவீதம் அதிகரிக்கிறது. இது ஒரு வளர்ந்த மனிதனுக்கு இருப்பதை விட அதிகம்.

2. ஒரு மனிதன் 20 வயதை எட்டும் வரை மெல்ல வளர்சிதை மாற்றம் குறைகிறது. பருவமெய்தும் போதெல்லாம் எந்த வித மாற்றமும் இருப்பதில்லை.

3. மனிதர்களின் 20 வயது முதல் 60 வயது வரை வளர்சிதை மாற்றத்தில் எந்த வித மாற்றமும் இருப்பதில்லை.

4. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வளர்சிதை மாற்றம் குன்றத் தொடங்குகிறது. 90 வயதுக்கு மேல் ஒருவரின் வளர்சிதை மாற்றம், அவர்களின் இளமை காலத்தில் இருந்ததை விட 26 சதவீதம் குறைவாக இருக்கிறது.

பட மூலாதாரம், Science Photo Library

படக்குறிப்பு,

வளர்சிதை மாற்ற வரைபடம்

"இது இதுவரை நாம் பார்த்திராத ஒரு படம், அதில் நிறைய ஆச்சரியங்கள் உள்ளன" என ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜான் ஸ்பீக்மென் கூறினார்.

"எனக்கு மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வயது முதிர்ந்த காலம் முழுவதும் எந்த மாற்றமும் இல்லை - உங்களுக்கு தொப்பை விழுகிறது என்றால் இனி நீங்கள் வளர்சிதை மாற்றத்தை குறை கூற முடியாது." என்கிறார்.

ஊட்டச்சத்து குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஊட்டச்சத்து குறைபாடு கோப்புப் படம்

ஆய்வில் கண்டுபிடிக்கப்படாத மற்ற சில ஆச்சரியதகவல்களும் கிடைத்துள்ளன.

பருவமடைதலின் போதோ, கர்ப்ப காலத்தின் போதோ, மெனோபாஸ் என்றழைக்கப்படும் பெண்களின் மாதவிடாய் நிற்கும் காலத்திலோ வளர்சிதை மாற்றத்தில் எந்த மாறுபாடும் இருப்பதில்லை.

ஒரு குழந்தையின் முதல் சில ஆண்டுகளில் இருக்கும் அதிக வளர்சிதை மாற்றம், அக்குழந்தையின் வளர்ச்சியில் எவ்வளவு முக்கியமான தருணம் மற்றும் குழந்தை பருவத்தில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அவர்களது வாழ்நாள் முழுவதும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்துகிறது.

"மக்கள் வளர்சிதை மாற்றத்தைப் பற்றி பேசும்போது, ​​அவர்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியை நினைக்கிறார்கள் - ஆனால் அதை விட ஆழமானது அது. நாங்கள் உண்மையில் உங்கள் உடல், உங்கள் செல்கள், வேலை செய்வதைப் பார்க்கிறோம்" என டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹெர்மன் பான்ட்சர், பிபிசியிடம் கூறினார்.

"வளர்சிதை மாற்றம் ஒரு (1) வயதில் நம்பமுடியாத அளவுக்கு வேலை செய்கின்றன. வயதாகி வளர்சிதை மாற்றம் குறைந்து வருவதைக் காணும்போது, ​​உங்கள் செல்கள் வேலை செய்வதை நிறுத்துவதை நாங்கள் காண்கிறோம்." என்கிறார்.

இரட்டை மாற்றுருவாக்கப்பட்ட நீரைப் (Doubly Labeled Water) பயன்படுத்தி மக்களின் வளர்சிதை மாற்றம் அளவிடப்படுகிறது.

கனமான ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அணுக்களிலிருந்து அந்த நீர் தயாரிக்கப்படுகிறது. அது உடலை விட்டு வெளியேறும்போது அதைக் கண்காணிக்க முடியும்.

ஆனால் அந்த நீர் மிகவும் விலை உயர்ந்தது. எனவே 6,400 நபர்களின் மாதிரி தரவுகளைச் சேகரிக்க 29 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக வேலை செய்தனர்.

மருந்து அளவுகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

அனைத்து வயது வரம்பினர் இருக்கும் படம்

மாற்றம் காணும் வளர்சிதை மாற்றத்தை முழுமையாக புரிந்துகொள்வது மருத்துவத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

வளர்சிதை மாற்றம் மாறும்போது புற்றுநோய்கள் வித்தியாசமாக பரவுகிறதா மற்றும் பல்வேறு கட்டங்களில் மருந்தின் அளவை சரிசெய்ய முடியுமா என்பதை வெளிப்படுத்த உதவும் என்று கூறுகிறார் பேராசிரியர் பான்ட்ஸர்.

வளர்சிதை மாற்றத்தையே மாற்றியமைக்கும் மருந்துகளால், முதுமையினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுவதை ஒத்திப் போட முடியுமா என்பது பற்றி கூட விவாதம் நடந்து வருகிறது.

"இதுவரை இல்லாத இந்த ஆய்வு ஏற்கனவே மனித வளர்சிதை மாற்றத்தைக் குறித்த முக்கியமான புதிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தி இருக்கிறது" என்கின்றனர் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரோசலின் ஆண்டர்சன் மற்றும் திமோதி ரோட்ஸ்,

"வளர்சிதை மாற்றம் குறையும் போது, வயோதிகத்தினால் நோய்கள் ஏற்படுவது தற்செயலாக இருக்க முடியாது" என்கின்றனர்.

உடல் பருமன் பிரச்சனை பரவல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உடல் பருமன்

"சுவாரஸ்யமாக, வளரும் வயது மற்றும் நடுத்தர வயதுக்கு இடையிலான காலத்தில், மொத்த ஆற்றல் செலவழிக்கும் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் இந்த காலகட்டத்தில் தான் வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான பெரியவர்களின் எடை அதிகரிக்கிறது" என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் டாம் சாண்டர்ஸ்.

"இந்த கண்டுபிடிப்புகள் உடல் பருமன் பரவல் அதிகப்படியான உணவு ஆற்றலை உட்கொள்வதால் ஏற்படுகிறது, ஆற்றலைச் செலவழிப்பது குறைவதால் அல்ல." என்கிறார்.

"ஒருவர் பயன்படுத்திய மொத்த ஆற்றலை அளவிட மிகவும் கடினமாக உள்ளது" என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சோரன் ப்ரேஜ்,

"மரபுசார் எரிபொருட்களை எரிப்பதன் மூலம் வரையறுக்கப்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மட்டுமல்லாமல், நம் உடலில் போதுமான கலோரிகளை எரிக்காததால் ஏற்படும் ஆற்றல் நெருக்கடி பிரச்சனை தொடர்பாகவும் நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்." என்கிறார் சோரன் ப்ரேஜ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :