பருவநிலை மாற்றம்: தீவிர வெப்பநிலையால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் ஆபத்து - பிபிசி ஆய்வு

  • பெக்கி டேல் மற்றும் நாஸ்ஸோஸ் ஸ்டீலியானூ
  • தரவுகள் ஆய்வு செய்தியாளர்கள்
Image of a man trying to cool off in front of a fan

1980களில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பூமி 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் போது, அந்தந்த ஆண்டுகளில் மிகவும் அதிகமான வெப்பம் பதிவான நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது.

அந்த வெப்பநிலை முன்பை விட மேலதிக இடங்களில் உண்டாவதாகவும் அந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் 50 டிகிரி வெப்பநிலையை கடந்த நாட்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

1980 மற்றும் 2009க்கு இடையில், வெப்பநிலை சராசரியாக வருடத்தில் 14 நாட்கள் 50 டிகிரியை கடந்தது. அதுவே, 2010 மற்றும் 2019க்கு இடையில் வருடத்திற்கு 26 நாட்களாக உயர்ந்துள்ளது.

அதே காலகட்டத்தில், சராசரியாக வருடத்திற்கு இரண்டு வாரங்கள் கூடுதலாக 45 டிகிரி மற்றும் அதற்கு மேற்பட்ட வெப்பநிலை பதிவானது.

"புதைபடிம எரிபொருட்கள் (fossil fuels) எரியூட்டப்படுவதே இதற்கு 100 சதவீத காரணம்," என்கிறார் பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகளை ஆய்வு செய்யும் மூத்த அறிவியலாளர் டாக்டர் ஃப்ரைடரிக் ஓட்டோ.

உலகம் முழுவதுமாக வெப்பமடையும்போது, தீவிர வெப்பநிலை மேலும், மேலும் தீவிரமடைகிறது.

அதிக வெப்பம் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் ஆபத்தானது. மேலும் அது கட்டடங்கள், சாலைகள் மற்றும் மின் அமைப்புகளுக்கும் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

உலகில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் 50 டிகிரி செல்சியஸை கடந்த வெப்பநிலை அதிகமாக காணப்படுகிறது.

கோடை காலத்தில் இத்தாலியில் 48.8 டிகிரி செல்சியஸ், கனடாவில் 49.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான பிறகு, புதைபடிம எரிபொருள் உமிழ்வைக் குறைக்காவிட்டால் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை நாட்கள் வேறு இடங்களிலும் பதிவாகும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

"நாம் விரைவாகச் செயல்பட வேண்டும். எவ்வளவு விரைவாக நம் உமிழ்வைக் குறைக்கிறோமோ, அது பூமிக்கு நல்லது," என்கிறார் பருவநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிஹான் லி.

"தொடர்ச்சியான உமிழ்வு, நடவடிக்கை எடுக்காத நிலை போன்றவற்றால், இந்த தீவிர வெப்ப நிகழ்வுகள் மிகவும் கடுமையான மற்றும் அடிக்கடி மாறும் தன்மையுடன் இருப்பதுடன், அது அவசரகால நடவடிக்கை மற்றும் மீட்பு முயற்சிகளில் பெருத்த சவால் மிக்கதாகவும் மாறலாம்," என்கிறார் டாக்டர் லி.

1980 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளுக்குள் நிலவிய அதிகபட்ச வெப்பநிலை, 0.5 டிகிரி அதிகரித்ததை பிபிசியின் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

ஆனால் இந்த வெப்பநிலை அதிகரிப்பு, உலகம் முழுவதும் சமமாக இருக்கவில்லை. கிழக்கு ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகியவற்றில் அதிகபட்ச வெப்பநிலை 1 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. அதே சமயம், ஆர்டிக் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதை கருத்தில் கொண்டே வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா உச்சிமாநாட்டில், பூமியின் வெப்பநிலை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த புதிய உமிழ்வுகளின் வெளியேற்றத்தைக் குறைக்க உலக தலைவர்கள் ஈடுபாடு காட்ட கேட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று அறிவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தீவிர வெப்பத்தின் தாக்கங்கள்

பிபிசி பகுப்பாய்வு ஓர் ஆவணப்பட தொடரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதில், "50 டிகிரி வெப்பநிலையில் வாழ்க்கை" என்ற கருத்தாக்கத்துடன் உலகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் 50 டிகிரியை கடந்துள்ளன," என்பது ஆராயப்பட்டுள்ளது. 50 டிகிரிக்கும் குறைவாக இருந்தாலும், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உடல் ரீதியாக கடுமையான ஆபத்தை உருவாக்கலாம்.

2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி, தற்போதைய புவி வெப்பமடைதல் நிலை தொடர்ந்தால், உலகெங்கிலும் உள்ள 120 கோடி மக்கள் 2,100க்குள் வெப்ப அழுத்த நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும். இது இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குறைந்தது நான்கு மடங்கு அதிகம் ஆகும்.

கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் காட்டுத் தீயை அதிகமாக்குவதால், மக்கள் தங்களைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு மாறும்போது கடினமான இன்னல்களையும் எதிர்கொள்கின்றனர்.

ஷேக் காஸெம் அல் காபி, மத்திய இராக்கில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கோதுமை விவசாயி. இங்கு ஒவ்வோர் ஆண்டும் தீவிர வெப்பநிலை பதிவாகிறது.

இவரைச் சுற்றியுள்ள நிலம், ஒரு காலத்தில் அவரையும் அவரது அண்டை வீட்டாரின் தேவைகளுக்கும் போதுமானதாக இருந்தது, ஆனால் அது படிப்படியாக வறண்டு தரிசாக மாறியது.

"இந்த நிலம் அனைத்தும் பசுமையாக இருந்தது, ஆனால் அதெல்லாம் போய்விட்டது. இப்போது இது ஒரு பாலைவனம், வறட்சி."

இவரது கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து மக்களும் வேறு மாகாணங்களில் வேலை பார்க்க சென்று விட்டனர்.

"நான் என் சகோதரனை இழந்தேன், அன்பான நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய அண்டை வீட்டார் என எல்லோரையும் இழந்து விட்டேன்.. மகிழ்ச்சி, துக்கம் என அவர்கள் எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்து கொண்டனர், இப்போது யாரும் என்னுடன் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. நான் இந்த வெற்று நிலத்தையே வெறித்துப் பார்க்கிறேன்."

எனது பகுதி 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை கடந்துள்ளது. ஆனால், இதில் ஏன் எனத் தெரியவில்லை என்கிறார் அவர்

ஆராய்ச்சி முறை

வரலாற்றில் இல்லாத வகையில் பதிவாகும் வெப்பநிலை அளவீடு, பொதுவாக ஒரு தனிப்பட்ட வானிலை நிலையத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் பிபிசி மேற்கொண்ட பகுப்பாய்வு, ஒரு தனிப்பட்ட நிலையத்தில் அல்லாது மிகப்பெரிய பகுதிகளில் வெப்பநிலையை பதிவு செய்திருக்கிறது.

உதாரணமாக, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள டெத் வேலி தேசிய பூங்காதான், உலகிலேயே அதிக வெப்பம் பதிவாகும் இடமாக அறியப்படுகிறது. அந்த பூங்காவின் சில பகுதிகள் கோடை காலத்தில் வழக்கமாகவே 50 டிகிரியை கடக்கும். அதையொட்டி பிற பகுதிகளிலும் வெப்பநிலையை அளவிடும்போது அதன் ஒட்டுமொத்த பகுதியிலும் காணப்பட்ட வெப்பம் 50 டிகிரிக்கும் குறைவானதாக பதிவாகும்.

இந்த தரவு எங்கிருந்து வருகிறது?

கோப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்ற சேவையால் தயாரிக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட உலகளாவிய ERA5 தரவுத்தொகுப்பிலிருந்து பிபிசி அதிகபட்ச தினசரி வெப்பநிலையைப் பயன்படுத்தியுள்ளது. உலகளாவிய பருவநிலை போக்குகளை அறிய இந்த தரவு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

ERA5 நவீன வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளின் தரவுகளுடன் நிலையங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் போன்ற பல மூலங்களிலிருந்து வானிலை கணிப்புகளை ஒருங்கிணைக்கிறது.

இந்த செயல்முறை உலகின் பல பகுதிகளில் மோசமான நிலைய கவரேஜால் உருவாக்கப்பட்ட இடைவெளிகளை நிரப்புகிறது. இது பருவநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

பிபிசி செய்த பகுப்பாய்வு என்ன?

1980 முதல் 2020ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் பதிவான அதிகபட்ச வெப்பநிலையை கணக்கிட்டோம். அதில் வெப்பநிலை 50 டிகிரி எங்கெல்லாம் தாண்டியது என்பதைக் கண்டறிந்தோம்.

காலப்போக்கில் ஒவ்வோர் ஆண்டும் அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மற்றும் இடங்களின் எண்ணிக்கையை நாங்கள் கணக்கிட்டோம்.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றத்தையும் நாங்கள் கண்டுபிடித்தோம். 30 வருடங்களுக்கு முன் பதிவான வெப்பநிலையுடன் (1980-2009) ஒப்பிடும்போது மிகச் சமீபத்திய பத்து ஆண்டுகளில் (2010-2019) நிலம் மற்றும் நீரில் பதிவான சராசரி அதிகபட்ச வெப்பநிலை வேறுபாட்டை கண்டறிந்தோம்.

'இடம்' என்பதன் பொருள் என்ன?

ஒவ்வொரு இடமும் சுமார் 25 சதுர கிமீ அல்லது பூமத்திய ரேகையில் சுமார் 27-28 சதுர கி.மீ ஆகும். இந்த கட்டங்கள் பெரிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும் பல்வேறு வகை நிலப் பரப்புகளைக் கொண்டதாகவும் இருக்கலாம்.

கட்டங்கள் 0.25 டிகிரி அட்சரேகை 0.25 டிகிரி தீர்க்கரேகை சதுரங்கள் ஆகும்.

தரவுத்தொகுப்பு உதவியவர்கள்:

இந்த ஆராய்ச்சி முறை, புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டர் சிஹான் லி மற்றும் பெர்க்லி எர்த் மற்றும் தி பிரேக் த்ரூ இன்ஸ்டிடியூட்டின் டாக்டர் ஜெக் ஹாஸ்பாதரின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.

நடுத்தர அளவிலான வானிலை முன்னறிவிப்புகளுக்கான ஐரோப்பிய மையத்தின் வெளிப்புற ஆய்வு (ECMWF). வானிலை முன்னறிவிப்பு ஆய்வுத் தரவுகள், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எட் ஹாக்கின்ஸ் மற்றும் பேராசிரியர் ரிச்சர்ட் பெட்ஸ் மற்றும் டாக்டர் ஜான் சீசர் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்.

நாஸ்ஸோஸ் ஸ்டீலியானூ, பெக்கி டேல் ஆகியோரின் தரவு பகுப்பாய்வு மற்றும் பத்திரிகை. ப்ரினா ஷா, சனா ஜஸ்மி மற்றும் ஜாய் ரோக்சாஸ் ஆகியோரின் வடிவமைப்பு. கேட்ரியோனா மோரிசன், பெக்கி ரஷ் மற்றும் ஸ்காட் ஜார்விஸ்,. அலிசன் பெஞ்சமின் தரவு பொறியியல். நாமக் கோஷ்னாவ் மற்றும் ஸ்டெபானி ஸ்டாஃபோர்ட் ஆகியோரின் ஆய்வு. மோனிகா கார்ன்ஸியின் டாக்டர் ஓட்டோவுடனான நேர்காணல்.

பருவநிலை கோடுகளை காட்சிப்படுத்த உதவியவர்கள், பேராசிரியர் எட் ஹாக்கின்ஸ் மற்றும் ரீடிங் பல்கலைக்கழகம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :