வைபர் ரோவர்: நிலவில் பனிக்கட்டிகளா? மனித இனம் காணாத இடத்துக்குச் செல்ல தயாராகும் நாசாவின் புதிய ரோவர்
- பால் ரின்கன்
- அறிவியல் செய்தியாளர்

பட மூலாதாரம், NASA
வைபர் ரோவர் மாதிரிப் படம்
நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா என சோதனைகளை மேற்கொள்ள நாசா ஒரு இயந்திர ரோவரை அனுப்பவிருக்கிறது.
2023ஆம் ஆண்டு நோபில் க்ரேட்டர் என்கிற பகுதிக்கு அருகில் மேற்கு முனையில் அந்த ரோவர் தரையிறங்கவிருக்கிறது. இந்த நோபில் க்ரேட்டர் சுமார் 73 கிலோமீட்டர் அகன்ற, தாழ்வு நிலப்பகுதி. இது எப்போதும் நிழலிலேயே இருக்கிறது.
நிலவில் மனிதர்களின் தேடுதலுக்கு உதவும் விதத்தில் வைபர் ரோவர் திட்டம் இருக்கும். நிலவில் இருக்கும் பனிக்கட்டிகளை தோண்டி எடுத்து குடி நீர் மற்றும் ராக்கெட்டின் எரிபொருளுக்கு பயன்படுத்தலாம்.
இந்த தசாப்தத்தில், நிலவில் மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப விரும்புகிறது நாசா.
நாசாவின் ஆர்டெமிஸ் திட்டம் மூலம், முதலாவது பெண் மற்றும் முதலாவது வெள்ளை நிறத்தவர் அல்லாத ஒருவர், நிலவில் தடம் பதிக்கவிருக்கிறார். இந்த ஆராய்ச்சி, நீண்ட காலத்துக்கு மனிதர்கள் நிலவில் இருக்க வழிவகுக்கும்.
பட மூலாதாரம், NASA
நிலவின் மேற்பரப்பு
நிலவிலிருந்து தண்ணீர் - பனிக்கட்டிகளை எடுப்பது எத்தனை எளிதானது அல்லது சிரமமானது என்பதை புரிந்து கொள்ள 2023 ரோவர் திட்டம் உதவும் என்று, கலிஃபோர்னியாவில் இருக்கும் நாசாவின் ஏமிஸ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த வைபர் திட்ட மேலாளர் டேனியல் ஆண்ட்ரூவ்ஸ் கூறியுள்ளார்.
"நிலவில் ஆற்றல் மிகுதியாகவும், அது அணுகக் கூடிய விதத்திலும் இருந்தால், அது உண்மையிலேயே நிலவில் மனிதர்கள் தாக்குபிடித்து நிற்கும் தன்மையையே மாற்றிவிடும். மேலும் நிலவில் இருக்கும் ஆற்றலை நாம் எப்படி பெறுவது என்பதையும் புரிந்து கொள்ள உதவும்" என விளக்குகிறார்.
நிலவில் போலார் க்ரேட்டர்கள் எனப்படும் பகுதிகளில் பல பில்லியன் டன் லூனார் பனிக்கட்டிகள் உறைந்து கிடப்பதாகவும், அந்தப் பகுதிகள் சூரிய ஒளியையே பார்த்ததில்லை என்றும், அங்கு -223 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெப்பநிலை இருக்கலாம் என பல ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன. அப்பகுதி எப்போதுமே நிழலில் இருப்பதால், மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டிகள் பாதுகாக்கப்பட ஏதுவான சூழலும், குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையும் நிலவுகிறது.
நிலவில் பனி அடுக்கு படிமானங்கள் எங்கு இருக்கின்றன? அதில் என்னவெல்லாம் இருக்கின்றன? எத்தனை அடி ஆழத்தில் பனிக்கட்டிகள் இருக்கின்றன? போன்ற அடிப்படை கேள்விகளுக்கான விடையை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள வைபர் ரோவர் உதவும் என்கிறார் டேனியல் ஆண்ட்ரூவ்ஸ்.
"நிலவின் தென் துருவத்தில் நாம் தரையிறங்கிய பின் பார்க்க இருப்பதை போல, எதையும் இதுவரை நாம் பார்த்ததில்லை" என்கிறார் வைபர் திட்டத்தின் தலைமை திட்ட விஞ்ஞானி அந்தோனி கொலப்ரெடெ.
ஆனால், அறிமுகமில்லாத, பனி இருக்கும் இந்த பகுதியை ஆராயும் திட்டத்தை செயல்படுத்தவும் பல தடைகள் இருக்கின்றன. இரவில் மிகக் கடுமையான குளிர் மற்றும் பகலில் வெப்பம் நிலவும் பகுதியில் இயங்குவது போல ஒரு ரோவரை வடிவமைப்பதே மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
நிலவின் தென் துருவத்தின் கிடைமட்டத்தில், சூரியன் மிகவும் தாழ்வாக இருக்கும். அங்கு நீண்ட, பெரிய நிழல்கள் விழும். அடிக்கடி விழுந்து மறையும், அதிவேகமாக மாறும் வெளிச்சம் காரணமாக ரோவர் எதிரில் வரும் தடைகளை கடப்பதும், ரோவர் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதும் மிகவும் சிரமமாக இருக்கும்.
இந்த பிரச்சனையை எதிர்கொள்ள பொறியாளர்கள், நிலவின் மேற்பரப்பில் ரோவரின் பாதையை மிக கவனமாக திட்டமிட வேண்டும். அப்போது தான் இருளில் இருந்து மீளவும், சோலார் தகடுகள் சூரியனை நோக்கி இருக்கும் படிச் செய்து ரோவரின் மின்சார அளவை பராமரிக்கவும் முடியும்.
பட மூலாதாரம், BILL STAFFORD / NASA JSC
சோதனையில் ப்ரோடோடைப் ரோவர்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரோவர் நிரந்தரமாக நிழலிலேயே இருக்கும் பகுதிகளுக்குள்ளும் செல்ல வேண்டி இருக்கும். முகப்பு விளக்குகளோடு (ஹெட் லைட்) உருவாக்கப்படும் நாசாவின் முதல் ரோவர் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்விளக்கு வெளிச்சத்தின் உதவியோடு ரோவர் பனி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும்.
ஒரு அணி பூமியில் இருந்து கொண்டு ரோவரை நியர் ரியல் டைம் வேகத்தில் இயக்கும் என திட்டத்தின் துணை தலைமை விஞ்ஞானி டார்லென் லிம் கூறினார். "வைபர் அறிவியல் அணி சில முதன்மையான, நியர் ரியல் நேரத்தில் முக்கிய தருணங்களில் உள்ளீடுகளைக் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்" என விளக்குகிறார்.
அமெரிக்காவின் பிட்ஸ்பெர்கில் உள்ள ஆஸ்ட்ரோபாட்டிக் என்கிற தனியார் விண்வெளி நிறுவனம், ரோவரை நிலவில் தரையிறக்க ஒப்புக் கொண்டுள்ளது. அந்நிறுவனம் கடந்த ஜூன் 2020-ல் இந்த திட்டத்துக்கான 199.5 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நாசாவின் வணிக ரீதியிலான லூனார் பேலோட் சேவைகள் (சி எல் பி எஸ்) திட்டத்தின் கீழ் வென்றது.
ஆர்டெமிஸ் திட்டத்துக்கு உதவத் தான் சி எல் பி எஸ் சேவைகள் வடிவமைக்கப்பட்டன. ஆனால் இது நிலவுப் பொருளாதாரத்தைத் தொடங்க உதவும் என பலரும் நம்புகின்றனர். இத்திட்டத்தின் கீழ் வணிக ரீதியிலான நிறுவனங்கள், நிலவுக்குச் செல்லும் வழக்கமான போக்குவரத்துப் பணிகளைச் செய்து கொடுக்க போட்டியிடுகின்றன.
பட மூலாதாரம், NASA / MICHAEL DEMOCKER
ஓரியன் கேப்ஸ்யூல்
சரி மீண்டும் நிலவுக்கு வருவோம். நிலவில் இருக்கும் நீரை ரசாயண ரீதியில் ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனகாவும் இரண்டாக பிரிக்கலாம்.
விண்வெளி வாகனங்களுக்கான எரிபொருளை நிலவில் நிரப்பினால் விண்வெளி பயணத்தின் விலையை கணிசமாக குறைக்கலாம். நிலவின் மேற்பரப்பில் ராக்கெட் ப்ரொபெல்லன்ட்களை கிலோவுக்கு 500 டாலர் என தயாரிக்கலாம் என்று ஒரு சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது பூமியில் தயாரிக்கப்படும் ப்ரொபெல்லன்ட்களை விட சுமார் 20 மடங்கு விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் பயணத்துக்கான தயாரிப்பு பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் முதல் பயணத்துக்கான இணைப்புப் பணிகள் அனைத்தும் நடந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் பொறியாளர்கள் ஓரியன் விண்கப்பலை ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் ராக்கெட்டில் பொருத்த உள்ளனர்.
பிற செய்திகள்:
- PBKS vs RR: 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி, கையில் 8 விக்கெட்டுகள் இருந்தும் படுதோல்வி அடைந்த பஞ்சாப்
- ஐ.நா சபையில் பைடன்: இரான், வடகொரியா பற்றி பேசியது என்ன? 5 முக்கிய தகவல்கள்
- நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட்
- 3,000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்தியதாக சென்னை தம்பதி கைது - யார் அந்த டெல்லி புள்ளி?
- அ.தி.மு.க - பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி: 20 % இடங்கள்; 6 வாய்ப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்