வேகமாக அருகிவரும் சுறா மீனினம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 மார்ச், 2013 - 16:40 ஜிஎம்டி

உலகில் மனிதர்களால் வேட்டையாடப்படுவது அல்லது உணவுக்காக கொல்லப்படுவது உள்ளிட்ட பல காரணங்களால் வேகமாக அழிந்துவரும் உயிரினங்கள், குறிப்பாக அழிவின் விளிம்பில் நிற்கும் விலங்குகள் குறித்து ஆராய்வதற்கான சர்வதேச மாநாடு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை பாங்காக்கில் துவங்கியிருக்கிறது.

உலகின் 178 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த மாநாடு மார்ச் மாதம் 14 ஆம் தேதிவரை நடக்க இருக்கிறது. இதில் அழிவின் விளிம்பில் இருக்கும் பல்வேறு உயிரினங்கள் குறித்தும் அவற்றை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றுவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

இத்தகைய விலங்குகளின் மிக நீண்ட பட்டியலில், சுறா மீனும் இருக்கிறது. காரணம், சுறா மீன்கள் பிடிக்கப்படும் வேகத்திற்கும், சுறா மீனினங்கள் இனப்பெருக்கம் செய்யும் வேகத்திற்குமான இடைவெளி காரணமாக சுறாமீனினங்கள் வேகமாக அழிந்துவருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆண்டுக்கு பத்துகோடி சுறாக்கள் கொல்லப்படுகின்றன

இந்த விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஒரு ஆண்டுக்கு உலக அளவில், குறைந்தது பத்துகோடி சுறாமீன்கள் கொல்லப்படுவதாக கணக்கிட்டுள்ளனர். ஆனால் இதை ஈடுகட்டுமளவுக்கு ஆண்டுக்கு பத்துகோடி சுறாக்கள் புதிதாக உற்பத்தியாவதில்லை என்பதை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் டேமியன் சேப்மென், சுறாவேட்டையை இப்படியே தொடர்ந்தால் சுறா மீனினமே எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று எச்சரிக்கிறார்.

குறிப்பாக, சுறாக்களில் இருக்கும் சில குறிப்பிட்ட ரகங்களை குறிவைத்து வேட்டையாடுவதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் சேப்மென், சில குறிப்பிட்ட ரக சுறா இனங்கள் ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாகவும் எச்சரித்திருக்கிறார்.

வெட்டப்பட்ட சுறா துடுப்புக்கள்

வெட்டப்பட்ட சுறா துடுப்புக்கள்

சுறாவின் fins என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துடுப்புக்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகை சூப்புக்கு சீனாவில் பெரும் கிராக்கி நிலவுவதுதான் சுறாக்கள் இப்படி வேகமாக பிடிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. முன்பெல்லாம் சுறாக்கள் பிடிக்கப்பட்டு அவற்றின் துடுப்புக்கள் வெட்டி எடுக்கப்பட்டு மீதமுள்ள சுறாக்களின் உடல் கடலிலேயே தூக்கி வீசப்பட்டு வந்தது.

அழிவின் விளிம்பில் ஐந்து ரக சுறாக்கள்

இப்படி லட்சக்கணக்கான சுறாக்கள் கடலுக்குள் வீணாக வீசப்படுவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் பிரச்சனையாக உருவானதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த நடைமுறைக்கு தடை விதித்தன. ஆனாலும் இந்த பிரச்சனை தீரவில்லை என்கிறார் விஞ்ஞானி சேப்மென்.

கடலில் வீசிக்கொண்டிருந்த சுறாக்களை இப்போது கரைக்கு கொண்டுவந்து சுறாக்களின் துடுப்புக்களை வெட்டியெடுக்கும் பழக்கம் தொடர்ந்து நடப்பதாக கூறும் விஞ்ஞானி சேப்மென், இதை தடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை அரசுகள் முன்னெடுக்கவேண்டும் என்றும் அதற்கு பாங்காங்கில் நடக்கும் இந்த மாநாடு வழிகாட்டவேண்டும் என்றும் கருதுகிறார்.

குறிப்பாக அழிவின் விளிம்பில் இருப்பதாக விஞ்ஞானிகளால் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருக்கும் ஐந்து ரக சுறாக்களை பிடிப்பதற்கும், அவற்றின் துடுப்புக்களை வெட்டி எடுப்பதற்கும் உலக அளவில் தடைவிதிக்கப்படவேண்டும் என்பது விஞ்ஞானிகளின் முக்கிய கோரிக்கை.

2010 ஆம் ஆண்டு நடந்த இதேபோன்றதொரு மாநாட்டில் இதற்கு தேவைப்படும் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை உலக நாடுகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் என்று விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.