அமிலத் தன்மை கொண்டதாக மாறுகிறது ஆர்டிக் கடல்

கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஆர்ட்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று நார்வே நாட்டினர் நடத்தியுள்ள ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆர்ட்டிக் கடலின் பல பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் அமிலத்தன்மை காணப்பட்டதாக சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நார்வேஜிய ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களிடையே பெரிய மாறுதல் ஏற்படக் கூடும் என்று கூறும் அந்த ஆய்வு, ஆனால் அந்த மாறுதல்கள் எப்படி இருக்கும் என்பது தொடர்பில் தெளிவாக உறுதியாகக் கூற முடியவில்லை என்றும் மேலும் சொல்கிறது.

கரியமில வாயுவின் காரணமாக புவி வெப்பமடைகிறது என்பது பரவலாக அறியப்பட்ட ஒரு விஷயம் என்றாலும், அவற்றை கடல் காற்றிலிருந்து ஈர்த்துக் கொள்ளும்போது, கடல்நீர் அமிலத்தன்மை கொண்டதாக மாறுகிறது என்பது பெரிய அளவில் தெரியாமல் இருந்தது என்று பிபிசியின் சுற்றுச்சூழல் ஆய்வாளர் கூறுகிறார்.

குளிர்ந்த நீரில் கரியமில வாயு வேகமாக உள்வாங்கப்படும் என்பதால், குறிப்பாக ஆர்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத்தன்மை வாய்ந்ததாக மாறும் வாய்ப்பு உள்ளது.