மதிய தூக்கம் மழலையர் கற்றலை மேம்படுத்தும்

மூன்று வயதுமுதல் ஐந்துவயது வரையிலான மழலைக் குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித்தூக்கம் போடவைத்தால் அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

மதிய சாப்பாட்டுக்குப்பிறகான இப்படியான தூக்கம் குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூன்று வயது முதல் ஐந்துவயது வரையிலான குழந்தைகள் மதியம் ஒருமணிநேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் தங்களின் மழலைப்பருவ பாடங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இயற்கை விஞ்ஞானத்துக்கான தேசியக் கழகத்தின் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் 40 சிறார்களிடம் மேச்சசூசெட்ஸ் ஹம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் எட்டப்பட்டிருக்கிறது.

இப்படி மதியம் தூங்கி எழுந்த குழந்தைகளின் மூளைத்திறன் மேம்பாடு மதியம் தூங்கி எழுந்தபின்னர் அதிகரிப்பதுடன், மறுநாளும் இது நீடிப்பதாகவும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

குழந்தைகளின் நினைவாற்றலை ஸ்திரப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கும், ஆரம்பகால கற்றலுக்கும் இந்த மதிய தூக்கம் அவசியமாகிறது என்று இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மதிய உணவுக்குப் பிறகு தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் கண்களால் பார்த்து அதன்மூலம் கற்றவற்றை நினைவுகூர்வதில் சிறப்பாக செயற்பட்டதாகவும், மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட இவர்களின் நினைவாற்றல் மேம்பட்டு இருந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதே குழந்தைகளை மதிய நேரம் தூங்கவிடாதபோது அவர்களின் கற்றல் திறன் குறைவதையும் தாங்கள் கண்டறிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பரிசோதனையில் பங்கேற்ற 14 குழந்தைகள் தூங்கும்போது அவர்களின் மூளையின் கற்றலுக்கு பொறுப்பான பகுதிகள் வேகமாக செயற்படுவதையும் இந்த ஆய்வாளர்கள் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தனர்.

தங்களின் இந்த ஆய்வின் மூலம் மழலையர் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய நேர தூக்கம் அவசியம் என்பதை தாங்கள் மருத்துவரீதியில் உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார் இந்த ஆய்வுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் ரிபெக்கா ஸ்பென்ஸர்.

குழந்தைகளுக்கு வயதாக ஆக, இந்த மதியநேர தூக்கம் என்பது இயற்கையிலேயே இல்லாமல் போகும் என்று கூறும் அவர், மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை மதிய நேரத்தில் தூங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மதியநேர குட்டித்தூக்கம் மனிதர்களின் மூளைத்திறனை, விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்தும் என்பது ஏற்கெனவே ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட செய்தி என்றாலும், மழலையர் பள்ளி மாணாக்கர்களிடமும் இது நல்லபலனைத்தரும் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்திருப்பதாக கூறுகிறார், ராயல் கல்லூரியின் சிறார் ஆரோக்கியம் குறித்த சிறப்பு மருத்துவர் ராபர்ட் ஸ்காட் ஜுப்.

மழலை வயதில் குழந்தைகள், இயற்கையாகவே தம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து ஏராளமான தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இந்த தகவல்களையெல்லாம் அவர்களின் மூளை உள்வாங்கி பகுத்துப்பார்த்து சேமித்து வைத்துக்கொள்வதற்கு சராசரியாக ஒருநாளைக்கு 11 முதல் 13 மணிநேரம் அவர்கள் தூங்குவது அவசியம். எனவே இரவு நேரத் தூக்கத்தைப் போலவே, மதிய நேர தூக்கமும் இந்த மழலையர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாக கருதுகிறார் மருத்துவர் ராபர்ட்.

மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகள், களைப்படைந்தும், எரிச்சலுடனும், கவனம் செலுத்தி கற்க முடியாமலும் திணறுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

தங்களின் குழந்தையின் மழலைக்கற்றலை ஊக்குவிக்க நினைக்கும் பெற்றோர்கள், அவர்களை மதியநேரம் குறைந்தது ஒருமணிநேரமாவது தூங்கவிடுங்கள் என்பதே இந்த மருத்துவர்கள் செய்யும் பரிந்துரை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை