வலதுபக்கம் ஆட்டினால் மகிழ்ச்சி; இடதுபக்கம் ஆட்டினால் கோபம்: இது நாய்வால் பாஷை

நாய்வாலாட்டுவது அதன் உணர்வுகளை காட்டும் செயல்
Image caption நாய்வாலாட்டுவது அதன் உணர்வுகளை காட்டும் செயல்

நாய் வாலை ஆட்டுவது ஏன்? மனிதரைப் பார்த்து நாய் வாலை ஆட்டினால், அது நம்மை நட்புடன் எதிர்கொள்கிறது என்று அர்த்தம்.

ஆனால், நாய் வாலை ஆட்டுவது வெறுமனே நட்பைத் தெரிவிப்பதற்காக மாத்திரம் அல்லவாம்.

அது வாலை எப்படி ஆட்டுகிறது என்பதைப் பொறுத்தும் அதன் உணர்வுகள் வேறுபடுகின்றனவாம்.

குறிப்பாக இன்னுமொரு நாயைப் பார்த்து, ஒரு நாய் வாலை ஆட்டுவதன் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துமாம், அதாவது, வாலை வலது புறமாக ஆட்டினால், அது நட்பு என்றும் இன்னுமொரு நாயைப் பார்த்து அது இடது புறமாக ஆட்டினால், அது வெறுப்புடன் அதனை பார்க்கிறது என்றும் அர்த்தமாம்.

மனிதனின் மூளையை எடுத்துக்கொண்டால், அதன் வலது மற்றும் இடது பகுதிகள் வெவ்வேறான உணர்வுகளுக்கு பொறுப்பானவை என்று கூறுகிறார், ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தின் நரம்பியல்துறை பேராசிரியரான ஜோர்ஜியா வலூர்ட்டிஹரா.

இது குறித்து ஏனைய விலங்குகளில் சோதித்துப் பார்க்க அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள்.

மனிதரைப் போல நாய்களிலும் வலது பாக மூளை உடலின் இடது பகுதியையும், இடது பாதி மூளை உடலின் வலது புறத்தையும் கட்டுப்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

தமது சோதனைகளுக்காக திரைப்படமாக பதிவு செய்யப்பட்ட நாய்களை, ரோபோ நாய்களை அவர்கள் தமது சோதனைக்குரிய நாய்களுக்கு காண்பித்திருக்கிறார்கள்.

படத்தில் எந்தவிதமான உணர்வையும் காட்டாத நாய்களை பார்த்தவுடன், சோதனை நாய்கள் நல்ல ஆசுவாசமாக பிரச்சினை இன்றிக் காணப்பட்டனவாம்.

ஆனால், வாலை இடதுபுறமாக ஆட்டிய நாய்களைப் பார்த்தவுடன், இவற்றுக்கு இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்ததுடன், அவை பதற்றமடைய தொடங்கிவிட்டனவாம்.

ஆனால், உண்மையில் நாய்கள் வாலைக் கொண்டு அடுத்த நாயுடன் தொடர்பு கொள்ள நினைப்பதில்லையாம். ஆனால், அவை தமது உணர்ச்சியைக் காண்பிக்க தம்மையே அறியாமல் தன்னிச்சையாக இடது அல்லது வலது புறமாக வாலை அசைக்கின்றன என்கிறார் ஜோர்ஜியா வலூர்ட்டிஹரா.

ஒரு நாய் இன்னுமொரு நாயை புதிதாகப் பார்க்கும் போதைவிட அடிக்கடி பார்க்கத்தொடங்கிய பிறகு அதன் உணர்வுகள் மாறிவிடுமாம்.

ஆகவே நாயை வாலை ஆட்டுகிறது என்பதை விட எந்தப் பக்கமாக அதனை ஆட்டுகிறது என்பதுதான் முக்கியமாகும் என்கிறார் அவர்.

நாய் வாலை வலதுபுறமாக ஆட்டுகிறது என்றால் நம்மை அது நட்புடன் பார்க்கிறது என்று அர்த்தாம். ஆனால் இங்கு வலது புறம் என்பது நாய்க்கு வலதுபுறமாக என்று பொருளே அன்றி அதனை முன்பாக நின்று பார்க்கும் உங்களுக்கு வலது புறம் என்று பொருள் அல்ல. இந்த விடயத்தில், யாருக்கு வலது புறம் என்பதில் கவனம் இல்லாவிட்டால், நாயிடம் கடி படவேண்டி வரலாம்.

இந்த கண்டுபிடிப்புக்கள் மூலம் நாய்களை வளர்ப்பவர்கள், அவற்றை மேலும் அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அதுமாத்திரமன்றி தமக்கு எதிரிகளான மிருகங்களைப் பார்க்கும் போது, தலையைக் நாய்கள் கூட ஓரளவு இடது புறமாக திருப்புமாம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை