'எலிகளிலிருந்து பரவும் ப்ளேக் எதிர்காலத்தில் மீண்டும் தோன்றலாம்'

படத்தின் காப்புரிமை Science Photo Library
Image caption மத்திய நூற்றாண்டுகளில் புபானிக் ப்ளேக் என்ற கொள்ளை நோயைத் தோற்றுவித்த பாக்டிரீயா

பழங்காலத்தில் இருந்த ‘பிளாக் டெத்’ எனப்படும் பல லட்ச மக்களை கொன்ற ஒரு வகையான கொள்ளை நோயை போலவே கொடூரமான ஒரு கொள்ளை நோய் எதிர்காலத்தில் உருவாகலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆறாம் நூற்றாண்டில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற ‘ஜஸ்டினியன் பிளேக்’ எனப்படும் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த இரண்டு பேரின் பற்களில் இருந்து தடயங்களை வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியுள்ளனர் .

14ஆம் நூற்றாண்டில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற ‘பிளாக் டெத்’ எனப்படும் கொள்ளை நோயில் காணப்படாத ஒரு மாறுபட்ட பாக்டீரியா கிருமிதான் இந்த ஜஸ்டினியன் பிளேக் மரணங்களுக்குக் காரணம் என்று அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த இரண்டு வகை பாக்டிரீயாக்களுமே ஒரே கிருமியிலிருந்து தான் உருவாகியுள்ளது என்று தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், இன்றைய எலிகள் போன்ற உயிரினங்களிடமிருந்து இவ்வகையான கொடூரமான நோய் உருவாகலாம் என்றும் கூறுகின்றனர்.

எனினும் அந்த நோய் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதை நவீன சிகிச்சைகள் தவிர்க்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.