கணித சூத்திரம் புரியும்போதும் கலாரசனை அழகுணர்ச்சி எழுவது ஏன்?

இதைக் கண்டு ஆஹா என்ன அழகு என்று கணித வல்லுநர்கள் சொல்வதற்கு நரம்பியல் காரணம் உண்டு
Image caption இதைக் கண்டு ஆஹா என்ன அழகு என்று கணித வல்லுநர்கள் சொல்வதற்கு நரம்பியல் காரணம் உண்டு

அற்புதமான கலைப் படைப்புகளையும் இசையையும் நுகரும்போது ஒருவருக்கு மூளையில் ஏற்படும் அழகுணர்ச்சி, கணித சூத்திரங்களில் காணப்படும் வித்தியாசமான எண்களையும் எழுத்துக்களையும் காணும்போதுகூட கணித வல்லுநர்களுக்கு ஏற்படுகிறது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

லண்டனின் யுனிவர்சிட்டி காலேஜ்ஜில் கணித வல்லுநர்களை மூளை ஸ்கேன் செய்த நேரத்தில், அவர்களிடம் விதவிதமான கணித சூத்திரங்கள் காண்பிக்கப்பட்டிருந்தன.

அவற்றில் குறிப்பிட்ட சில சூத்திரங்களை அவர்கள் கண்ட நேரத்தில், அவற்றின் அழகால் ஈர்க்கப்பட்டு அவர்களது மூளையில் கலை ரசனைக்குரிய மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டன.

மனதில் ஏற்படும் அழகுணர்ச்சிக்கு நியூரோ பயாலஜிக்கல் நரம்பியல் அடிப்படை ஒன்று இருக்க வேண்டும் என இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கணித சூத்திரங்களை ஒருவர் புரிதலுடன் பார்க்கும்போது அவருடைய மூளையின் பல்வேறு பாகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சில நல்ல சூத்திரங்களை பர்க்கும்போது அவர்களுடைய மூளையின் உணர்வுரீதியான பாகமான மீடியல் ஒர்பைடோ ஃபிரண்டல் கார்டெக்ஸ் செயலூக்கம் அடைகிறதாம்.

ஒரு நல்ல இசையைக் கேட்கும்போது ஒரு அற்புதமான ஓவியத்தை பார்க்கும்போது எவ்வித மாற்றம் அடையுமோ அவ்விதத்தில் அது மாற்றம் அடைகிறதாம்.