மின்னல்கள் நிலநடுக்கத்தை குறிப்புணர்த்துமா?

இதில் தெரியும் மின்னல் நிலநடுக்கத்தால் ஏற்பட்டதா? படத்தின் காப்புரிமை NHK
Image caption இதில் தெரியும் மின்னல் நிலநடுக்கத்தால் ஏற்பட்டதா?

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் தோன்றும் வெளிச்ச கீற்றுகள், பூமியில் ஏற்படும் அசைவுகளால் இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சமீபத்தில் சீனா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங்களுக்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்பட்டது. பூமியில் இருக்கும் மண் படிமங்கள் நகர்வதால் மாபெரும் மின்சார சக்தி உருவாகி அதனால் இந்த வெளிச்சப் பொறிகள் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் மைதா மாவை எடுத்து கொண்ட விஞ்ஞானிகள், அதனை முன்னும் பின்னுமாக தொடர்ந்து தள்ளியுள்ளனர். அப்போது மாவில் பிளவு ஏற்பட்டு 200 வோல்ட் மின்சார சக்தி உருவாகியுள்ளது.

முதலில் தாங்கள் முட்டாள்தனமாக ஏதோ செய்வதாகவே எண்ணியதாக ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ட்ரார் ஷின்பிராட் கூறினார்.

இந்த விஷயத்தை விளக்கக் கூடிய ஒரு நுட்பம் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்றும், இது ஒரு புதிய வகையான பெளதிகமாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் கண்டதை டென்வரில் நடைபெற்ற அமெரிக்கன் பிசிக்கல் சொசைட்டி கூட்டத்தில் அறிவித்துள்ளனர்.

மைதா மாவு மட்டுமன்றி, வேறு தானிய மாவுகளோடு செய்யப்பட்ட ஆராய்ச்சியிலும் இதே போன்று மின்சார சக்தி உருவாகியுள்ளது.

இதே விஷயம் மண் படிமங்களில் ஏற்படும் போது லட்சக்கணக்கான வோல்ட் திறன் கொண்ட மின்சக்தி உருவாகும். இதுவே வானில் வெளிச்சமாக உருவாகி, நிலநடுக்கம் வரப் போவதற்கான அறிகுறியாக காண்பிக்கிறது என கூறலாம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்படுகிறது என 300 ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வருகிறது, ஆனால் இதெல்லாம் கட்டுக்கதை என்றே விஞ்ஞானிகள் சொல்லி வந்தனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக யூ டியூப் போன்ற இணையத்தளங்கள் வந்த பின்னர், வானில் ஏற்பட்ட வெளிச்சங்கள் தெளிவாக படம்பிடிக்கப்பட்டு அவற்றை உலகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் பார்ப்பதற்கான வசதிகள் ஏற்பட்டு விட்டன.

புகுஷிமா மற்றும் லாகிலாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் ஏற்பட்ட வெளிச்சங்கள் தெளிவாக படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டன.

அதேசமயம் எல்லா வெளிச்சத்திற்கு பின்பாகவும் நிலநடுக்கம் வருவதில்லை. அதுவும் ஒரு சில சமயங்களில் தான் நில நடுக்கம் ஏற்படுகிறது.

இதனை ஆராய்வதற்காக, நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள பகுதிகளில் ஏற்படும் மின்சக்தியை அளவிடுவதற்காக கோபுரங்களை துருக்கி விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர்.

இதில் ரிக்டர் அளவு கோளில் 5 க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கைகள் இருப்பதை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் எல்லா நேரமும் ஒரே அளவு மின்சக்தி உருவாகவில்லை, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான மின்சக்தி உருவாகியது.

இது எதனால் ஏற்படுகிறது என்பதை ஆராய மேலதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்றும், அதில் முதல்படி தான் இது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.