ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இரசாயன உரத்தை தவிர்க்க நவீன 'உயிரிய- உரம்' இலங்கையில்

படத்தின் காப்புரிமை ifs.ac.lk
Image caption தேயிலை செய்கையில் 50 வீதமளவு இரசாயன உரத்தின் பாவனையைக் குறைக்க முடியும் என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது

இலங்கையில் புதிய வகை உயிரிய-உரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பயோஃபில்ம்(biofilm) என்கின்ற கூட்டு நுண்ணுயிரிகளின் படலத்தை ஒரு தொழிநுட்பமாகப் பயன்படுத்தி இந்த விவசாய உரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டி அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுத்துறைப் பேராசிரியர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

'குறிப்பாக பக்டீரியாக்கள், ஃபங்கஸுகள் போன்ற நுண்ணுயிரிகள் அடங்குகின்ற தொழிநுட்பம் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு இதன்மூலம் பெருமளவு உயிரிய இரசாயனம் கிடைக்கிறது' என்றார் பேராசிரியர் காமினி செனவிரட்ன.

கடந்த 10 ஆண்டுகாலம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் பலனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன உயிரிய உரத்தின் மூலம் இரசாயன உரத்தின் பாவனையை 50 வீதத்தால் குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இரசாயன உரத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை வெகுவாக குறைக்க முடிவதுடன் அறுவடைகளையும் அதிகரிக்க முடியும் என்பது தேயிலை விவசாயத்தில் நடந்துள்ள சோதனைகளில் உறுதியாகியுள்ளதாக பேராசிரியர் செனவிரட்ன கூறினார்.

வழமையில், தனித்தனி நுண்ணுயிரி ரகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுவரும் வழமையான உயிரிய உரங்களைவிட, பல்வகை கூட்டு நுண்ணுயிரிக் குடும்பங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பயோஃபில்ம் உயிரிய உரத்தில் பலன்கள் அதிகம் என்பது தான் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், நெல் மற்றும் இறப்பர் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

படத்தின் காப்புரிமை www.ifs.ac.lk
Image caption பேராசிரியர் காமினி செனவிரட்ன

மருத்துவத்துறையில் பல நோய்களுக்கு காரணமாக இருப்பதாக அறியப்பட்ட பயோஃபில்ம் என்ற 'நுண்ணுயிரிகளின் கூட்டு' இயல்பினையே விஞ்ஞானிகள் இங்கு விவசாய உரத் தயாரிப்பிற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

அதிக விவசாய இரசாயன பாவனை

நாட்டில் ஏற்கனவே வணிக மயப்படுத்தப்பட்டுவிட்ட இந்த உரத்தை வெளிநாடுகளுக்கும் கொண்டுசெல்லும் முயற்சிகளும் நடந்துவருகின்றன.

இலங்கையில் இரசாயன உரத்தை வாங்குவதற்கு அரசு மானியம் அளிக்கின்றது. அந்த மானியத்தை உயிரிய உரத்திற்கு வழங்குவதற்கு தொழிநுட்ப ஆய்வுத்துறைக்கான அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பேராசிரியர் செனவிரட்ன கூறினார்.

இரசாயன உர இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அண்மைக் காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

உலகில் ஒரு ஹெக்டேயர் விவசாய நிலத்தில் அதிகளவில் விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்துகின்ற நாடு இலங்கை என்று ஐநா-உலக சுகாதார ஸ்தாபனத்தின் உள்ளக அறிக்கை ஒன்றை உள்நாட்டு சுகாதார நிபுணர்கள் மேற்கோள்காட்டியுள்ளனர்.

நாட்டின் சில பிரதேசங்களில் அதிகரித்துவரும் இனம்புரியாத சிறுநீரக நோய்களுக்கும் விவசாய இரசாயன பாவனைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.