மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா?

மாத்திரைகள்
Image caption மாத்திரைகள்

மருத்து தயாரிப்பு நிறுவங்களுக்கும், அந்த மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கும் இடையிலான உறவில் பெருமளவு முறைகேடுகள் நடப்பதாக அமெரிக்காவில் சர்ச்சை எழுந்திருக்கிறது.

உலக அளவில் கணிசமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்திருக்கும் அமெரிக்காவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையில் ஆரோக்கியமற்ற தொடர்புகள் நிலவுவதாக அமெரிக்காவின் அரச மட்டத்தில் பல ஆண்டுகளாகவே கவலைகள் எழுந்து வந்திருக்கின்றன. ஆரம்ப காலத்தில் இலவச மருந்துகளை மருத்துவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், காலம் செல்லச் செல்ல, மருத்துவர்களுக்கு வேறுபல வகையான பரிசுப்பொருட்களை கொடுக்கத்துவங்கின. இதன் சமீப வடிவமாக, தங்களின் மருந்துகளை அதிகம் பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாகவே பணபரிவர்த்தனை செய்யும் போக்கும் பரவலாக நடைமுறைக்கு வந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த வகையான நிதி உதவி, பரிசுப்பொருட்களை அளிக்கும் மோசமான கலாச்சாரத்தைத் தடுக்கும் நோக்கத்தில் அமெரிக்க அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் புதிய சட்டத்தில், இனிமேல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாமே மருத்துவர்களுக்கு தம்மால் அளிக்கப்படும் அனைத்துவகையான பரிசுப்பொருட்கள், நிதி உதவிகள் மற்றும் மருத்துவ ஆய்வுக்கான நிதியளிப்பு உள்ளிட்ட எல்லாவகையான உதவிகளையும் இனி பகிரங்கமாக பொதுவெளியில் வெளியிடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு கொடுக்கும் உதவிகள் பெருமளவு குறைந்திருப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவிலும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையில் இத்தகைய முறைகேடுகள் நிலவுவதாக கூறும் தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் எஸ் இளங்கோ, இதை கட்டுப்படுத்தவோ அல்லது குறைந்தபட்சம் ஒழுங்குபடுத்தவோ தேவையான தெளிவான சட்டரீதியிலான கட்டமைப்புக்கள் இந்தியாவில் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்தியாவிலும் மருந்து தயாரிப்பு என்பது மிகப்பெரும் தொழிலாக மாறிவரும் நிலையில், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இடையிலான உறவைக் முறைப்படுத்த சட்டரீதியிலான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.