இருப்பிடத்தை உணர்ந்து கொள்வது குறித்த கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்தக் கண்டுபிடிப்புக்காகவே நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது

மருத்துவத்துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, மூன்று நரம்பியல் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜான் ஒ கீஃப், மே-பிரிட் மோசர் மற்றும் எட்வர்ட் மோசர் ஆகியோர், தனிநபர்களின் இருப்பிடத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நகர்வுகளைச் செய்யக் காரணமான மூளைச் செல்களின் கட்டமைப்பைக் கண்டறிந்துள்ளதற்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாகப் பரிசுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தனிநபரும் தமது இருப்பிடத்தை புரிந்துகொண்டு, சிக்கலான ஒரு சூழலில் எவ்வாறு நகர்வுகளை மேற்கொள்கிறார்கள் என்பதை மூளையிலுள்ள அந்த செல்களே முடிவு செய்கின்றன என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜான் ஒ கீஃப் அவர்கள் ஒரு பிரிட்டிஷ்-அமெரிக்க ஆராய்ச்சியாளர். மோசர் தம்பதியினர் நார்வேயைச் சேர்ந்தவர்கள்.

அல்சைமர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூளை அழுகல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் தமது சுற்றுச்சூலை உணர்ந்து கொள்ள முடியவில்லை என்பதை இவர்களது ஆராய்ச்சியின் மூலம் புரிந்து கொள்ள வழி ஏற்படும்.

பல ஆண்டுகளாக தத்துவ அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் சிந்திக்க வைத்த ஒரு கேள்விக்கு இவர்களது இந்தக் கண்டுபிடிப்பு, விடையளித்துள்ளது என்று நோபல் சபை தெரிவித்துள்ளது.