மீண்டும் பயன்படுத்தவல்ல ராக்கெட்டின் சோதனை தள்ளிவைக்கப்பட்டது

  • 6 ஜனவரி 2015

திரும்பத்திரும்ப பயன்படுத்தவல்ல முதல் ராக்கெட் என்று பரவலாக வர்ணிக்கப்படும் ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சி கடைசி நிமிடத்தில் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

அமெரிக்காவின் கேப் கனவரல்லில் உள்ள ஏவுதளத்தில் இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கடைசி கட்டம் வரை சென்ற நிலையில் திடீரென இந்த முயற்சி இடை நிறுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டை ஏவும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஏவப்படும் ராக்கெட்டின் பூஸ்டர் என்றழைக்கப்படும் உந்தகப்பகுதி ராக்கெட்டின் மற்ற பகுதிகளை விண்ணுக்கு அனுப்பியபிறகு மீண்டும் பூமியை நோக்கி வந்து அட்லாண்டிக் கடலில் மிதக்கும் மிதவையில் சரியாக விழச்செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறது.

இப்படியானதொரு முயற்சி செய்யப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும். இந்த ராக்கெட்டின் கேப்ஸ்யூல் எனப்படும் விண்ணில் பாயும் பகுதியில் சர்வதேச விண் ஆய்வு நிலையத்திற்கு தேவையான சரக்குகளைக் கொண்டு செல்கிறது.

சுமார் 14 மாடிக் கட்டிட உயரம் இருக்கும் ராக்கெட் நொடிக்கு ஒரு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது அதை கட்டுப்படுத்துவது என்பது, பயங்கரமான சூறாவளிக்காற்றில் ரப்பரால் செய்யப்பட்ட துடைப்பத்தை நேராக நிமிர்த்திப்பிடிப்பது போல் மிகவும் கடினமான செயல் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

மீண்டும் பயன்படுத்தவல்ல ராக்கெட் வெற்றிகரமாக புழக்கத்தில் வந்தால், செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தொகை வெகுவாகக் குறையும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை