நிறப்புதிருக்கு விடை என்ன ?

  • 27 பிப்ரவரி 2015

சிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை நாம் பார்க்கும் விதம் குறித்த எமக்குள் இருக்கும் முரண்பாடே இதற்கு காரணம்.

படத்தின் காப்புரிமை swiked Tumblr
Image caption சர்ச்சைக்குரிய மூலப் படம் இதுதான். உங்களுக்கு என்ன நிறமாக இது தெரிகிறது?

இந்தப் படத்தில் இருக்கும் உடை வெள்ளையும், பொன்னிறமும் என்று நீங்கள் கூறினால், அது முழுப் பிழை.

‘’அந்த உடை என்ன நிறம். எனக்கு வெள்ளை மற்றும் பொன்னிறமாக அது தெரிகிறது. கன்யீக்கு அது கறுப்பு மற்றும் நீல நிறமாக அது தெரிகிறது. இதில் யாருக்கு நிறக்குருடு?’’ – இப்படி ட்விட்டரில் எழுதியவர் கிம் கர்டஷியான்.

இவர் மாத்திரமல்ல. ட்விட்டர் என்ற சமூக ஊடகத்தில் இருக்கும் ஆட்கள் அனைவருமே இந்த நிறப்பிரச்சினையால், துருவப்பட்டுப் போனார்கள்.

ட்விட்டரில் எழுதியவர்களில், ஆஸ்கார் விருது வென்ற ஜூலியான் மூர், இது வெள்ளை மற்றும் பொன்னிறம் என்றார். ஆனால், டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் ஜஸ்டின் பைபர் ஆகியோர் இது நீலம் மற்றும் வெள்ளை என்றார்கள்.

நிபுணர் கருத்து:

புகைப்படங்களை துலக்கும் கணினி மென்பொருட்களை பயன்படுத்தி இந்த உடை என்ன நிறம் என்று உறுதி செய்யுமாறு, பிபிசி உலக சேவையின் புகைப்பட ஆசிரியர் எம்மா லிஞ்ச் அவர்களைக் கேட்டோம்.

ஆராய்ந்துவிட்டு, அவர் சொன்னார், இது நீலமே ஒழிய வெள்ளை அல்ல என்று. வேறு நிறம் எதனையும் சேர்க்காமல், இருக்கும் நிறத்தின் அடர்த்தியை கூட்டிப் பார்த்தால், அனைவருக்கும் இது நீலமாகவே தெரியும்.

கணினியில் இருக்கும் ‘’ஐடிரொப்பர்’’ செயலியை பயன்படுத்திப் பார்த்தாலும் அதே முடிவுதான். இந்தச் செயலி கணினியில் ஒரு புள்ளியில் இருக்கும் நிறத்தை சரியாக அறிந்து அதை அப்படியே ஒரு பெரிய இடத்தில் பூசும் வல்லமை கொண்டது. அதன் முடிவும் நீல நிறம் என்றே கூறியது.

படத்தின் காப்புரிமை Adobe Twitter
Image caption கணினியை கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது நீலம் மற்றும் கறுப்பு என்று கூறியது

இந்த பிரச்சினை எப்படி ஆரம்பித்தது

எம்மா லிஞ்சின் கண்டுபிடிப்புக்களை, இந்த உடைகளின் படத்தை முதலில் சமூக வலைத்தளங்களில் பிரசுரித்தவரும் ஒப்புக் கொண்டார்.

21 வயதான கைட்டலின் மக்நெய்ல், ஸ்காட்லாந்தை சேர்ந்த நாட்டுப்புற இசைக்குழுவைச் சேர்ந்தவர். இவர்களுடைய குழு இசைவாசித்த ஒரு திருமண வைபவத்தில், மணப்பெண்ணின் தாய் இந்த உடையை உடுத்திருந்தார்.

தான் அணிய திட்டமிட்ட உடையை திருமண தம்பதியுடன் சேர்ந்து ஒரு படம் எடுத்தார் பெண்ணின் தாய். அதுதான் பிரச்சினையின் ஆரம்பம்.

இதன் நிறம் வெள்ளையும் பொன்னிறமுமா அல்லது நீலமும் கறுப்புமா என்பது குறித்து அந்த திருமண தம்பதி மத்தியில் கருத்து மாறுபாடு வந்துவிட்டது. ஆகவே அவர்கள் அதனை முகநூலில் ஏற்றி விட்டார்கள்.

அங்கிருந்துதான் சமூக வலைத்தளங்களில் இது குறித்த விவாதம் சூடு பிடித்தது.

இந்த உடை ரோமன் ஒரிஜினல்ஸ் நிறுவனத்தால், தயாரிக்கப்பட்டதாகவும், அங்கு வேறு நிறங்களிலும் இது இருந்ததாகவும் கூறும் மக்நெய்ல், ஆனால், அங்கு வெள்ளை மற்றும் பொன்னிறத்தில் அது கிடையாது என்றும் உறுதி செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை swiked

ஏன் இது வித்தியாசமான நிறத்தில் தெரிகிறது

வயர்ட்.காம் என்னும் தொழில்நுட்ப ஆய்வு இணய தளத்தின் தகவல்களின்படி, சூரிய ஒளியில் நிறங்களை பிரித்தறிவதில் எமது கண்களும் மூளையும் எவ்வாறு வளர்ச்சியடைந்து (கூர்ப்படைந்து) வந்திருக்கின்றன என்பதே இந்த நிறப் புதிருக்கான விடையாகும்.

சூரிய ஒளியில் ஒரு பொருளைப் பார்க்கும் போது, சூரிய ஒளி நிறங்களை மாறச் செய்கிறது என்ற உண்மையை கணக்கில் எடுத்தே, மூளை, அந்தப் பொருளின் நிறத்தை வகுத்தறிகிறது. சூரிய ஒளியில், அதிகாலையில், ரோஜா நிறச் சிவப்பாக தெரியும் ஒரு பொருள், மதியத்தில், மேலும் நீலம் கலந்த வெள்ளையாக தெரியும். மாலையில் அது சிவப்பாகத் தெரியும்.

உங்கள் மூளையோ, அந்த சூரிய ஒளியின்(அல்லது குறித்த ஒளி மூலத்தின்) தாக்கத்தால் ஏற்படும் மாற்றத்தை கழித்துவிட்டு, உண்மையான நிறத்தை புரிந்துகொள்ள முயலும்.

ஆகவே, சிலர் அந்த உடையை நீல நிறமாக பார்த்தாலும், அவர்களது மூளை, உண்மையான உடையின் நிறத்தை பார்க்காமல், ஒளிமூலத்துக்கு அவற்றை பொருத்திப் பார்த்து, அதற்கேற்ப அவற்றை வெள்ளையாகவும், பொன்னிறமாகவும் பார்க்க முயற்சிக்கிறது.

ஏனையவர்களின் மூளையோ, உடையில் உண்மையாக காணப்படும் நிறத்தை அடிப்படையாக மாத்திரம் கொண்டு, ஒளி மூலத்தை கருத்தில் கொள்ளாமல், நீலம் மற்றும் கறுப்பாக பார்க்கிறது.

இந்த தன்மை பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஒன்றுதான். ஆனால், இந்த உடையில் தெரிந்த நிற மாற்றம், இது குறித்த விவாதத்தை முன்னெப்போதும் இல்லாதவாறு பெரிதாக ஏற்படுத்தியுள்ளது.