பக்டீரியாவை அழிக்கும் வெங்காயம், பூண்டு, மாட்டுப் பித்தநீர்

  • 5 ஏப்ரல் 2015

ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக கண்நோய்க்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து, தற்போதைய சூப்பர்பக் எனப்படும், பெரும்பாலான நுண்ணுயிர் கொல்லி மருந்துக்கு கட்டுப்படாத நோய்கிருமிகளை அழிக்க உதவும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை SPL
Image caption எம் ஆர் எஸ் ஏ பக்றீரியா

வெங்காயம், வெள்ளைப் பூண்டு மற்றும் மாட்டின் பித்தநீர் ஆகியவை உள்ளடங்கிய 9 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயர்களின் நாட்டு மருந்து ஒன்று இந்த சூப்பர்பக்ஸ்களை கொல்லும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

எம்ஆர்எஸ்ஏ எனப்படுகின்ற நோய்க்கிருமிகளை இந்த மருந்து கிட்டத்தட்ட முற்றாக அழித்ததைப் பார்த்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

பிரிட்டிஷ் நூலகத்தில் காணப்பட்ட ஒரு நாட்டு மருந்துக் குறிப்பில் இந்த விபரங்கள் காணப்பட்டுள்ளன. ஆங்கிலோ சாக்ஸன் நிபுணரான, நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த, டாக்டர் கிறிஸ்டினா லீ அவர்கள், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் அல்லது லீக், வைன் மற்றும் மாட்டு பித்தநீர் ஆகியவற்றைக் கொண்ட இந்த மருந்தை மொழிபெயர்த்துள்ளார்.

படத்தின் காப்புரிமை THINKSTOCK

அதனைக் கொண்டு அந்த மருந்தை தயாரித்த அதே பல்கலைக்கழக நுண்ணுயிர் நிபுணர்கள், பெருமளவில் வளர்க்கப்பட்ட எம்ஆர்எஸ்ஏ கிருமியில் அதனை சோதித்துள்ளனர்.

ஆங்கிலோ சாக்ஸன் மருத்துவர்கள், தற்போதைய மருத்துவ முறைக்கு கிட்டத்தட்ட சமனான ஒரு மருத்துவ சிகிச்சை முறையை பின்பற்றியுள்ளது போல தோன்றுகிறது.

நுண்ணுயிர் கொல்லிகள் குறித்த தற்போதைய ஆய்வுகளுக்கு அந்த பண்டைய மருத்துவ குறிப்புகள் ஒரு நல்ல பாடத்தையே தந்துள்ளன.

இந்த குறிப்பிட்ட மருந்து 90 வீதமான எம்ஆர்எஸ்ஏ பக்டீரியாவை கொல்வதாக அறியப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Thinkstock

கண்நோய்க்கான இந்த மருந்து சிறிய அளவில் நுண்ணுயிர் கொல்லியாக பயன்படும் என்றுதான் விஞ்ஞானிகள் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அது இவ்வளவு செயற்பாட்டுத் திறனுடன் இருக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை.

பக்டீரியாக்களால் வரும் பல நோய்களுக்கான மருந்துகள் அந்த குறிப்பில் இருப்பதாக டாக்டர் லீ கூறுகிறார்.

பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

பேர்மிங்ஹாமில் நடக்கவுள்ள பொது நுண்ணுயிரியல் அமைப்பின் வருடாந்த மாநாட்டில் இந்த கண்டுபிடிப்பு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.