“அழகான கணித மூளைக்காரர்” ஜான் நாஷ் விபத்தில் மரணம்

  • 24 மே 2015
நோபெல் பரிசு பெற்ற கணிதமேதை ஜான் நாஷ் படத்தின் காப்புரிமை AFP
Image caption நோபெல் பரிசு பெற்ற கணிதமேதை ஜான் நாஷ்

நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார்.

"A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

எண்பத்தி ஆறு வயதான ஜான் நாஷும் அவரது மனைவி அலிசியாவும் பயணம் செய்துகொண்டிருந்த டாக்ஸி சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருமே இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Paranoid schizophrenia என்கிற தீவிர மன அழுத்தநோயால் தன் வாழ்நாளின் பெரும்பகுதி அவதிப்பட்ட ஜான் நாஷ், 1994ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நேபெல் பரிசை வென்றார்.

Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் கணித சூத்திரத்தில் ஜான் நாஷ் செய்துக்காட்டியிருக்கும் ஆழமான ஆய்வுப்பணியும் அதனால் கிடைத்திருக்கும் விளக்கங்களும் அவருக்குப்பிறகான பல தலைமுறைகளைச் சேர்ந்த கணிதவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக நின்று பயன்படும் என்று அவர் பணிபுரிந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

புத்திசாலித்தனமான, பகுத்தறிந்து முடிவெடுக்கவல்லவர்கள் தமக்கிடையிலான மோதலின்போதும் ஒத்துழைப்பின்போதும் செயற்படும் விதங்கள் மற்றும் எடுக்கும் முடிவுகளுக்குள் பொதிந்திருக்கும் கணித சூத்திர மாதிரிகளின் அடிப்படைகளை புரிந்துகொள்ள உதவும் அல்லது அவற்றை விளக்கும் கணித கணக்கீட்டு சூத்திரமே Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அந்த துறையின் பிதாமகராக ஜான் நாஷ் வர்ணிக்கப்படுகிறார்.