நிறம் மாறும் ஆணுறைகள் நோயைக் கண்டுபிடிக்கும்

  • 31 ஜூலை 2015
எதிர்கால ஆணுறைகள் பால்வினை நோயைத்தடுக்க மட்டுமல்ல, கண்டுபிடிக்கவும் செய்யும் படத்தின் காப்புரிமை n
Image caption எதிர்கால ஆணுறைகள் பால்வினை நோயைத்தடுக்க மட்டுமல்ல, கண்டுபிடிக்கவும் செய்யும்

பிரிட்டனைச் சேர்ந்த மூன்று பள்ளிமாணவர்கள் ஒரு வித்தியாசமானதொரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு பால்வினை நோய் இருந்தால் அதைஉடனடியாகக் கண்டுபிடித்து எச்சரிக்கும் ஆணுறைகளை உருவாக்குவதில் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

இவர்களின் இந்த முயற்சிக்கு ஏகப்பட்ட ஆதரவு குவிந்து வருகிறது. கருத்தடை சாதன நிறுவனம் ஒன்று ஏற்கனவே இவர்களை தொடர்புகொண்டு பேசிவருகிறது. இத்தனைக்கும் இந்த மூன்று பேருமே இன்னமும் பள்ளிக்கூடத்தைக் கூட தாண்டவில்லை.

இந்த மூவரில் தாண்யால் அலி மற்றும் சிராக் ஷா ஆகிய இருவருக்கும் 14 வயது. மூன்றாவது நபரான முவாஸ் நவாஸுக்கு 13 வயது தான். இந்த மூன்றுபேரும் சேர்ந்துதான் இந்த நிறம் மாறும் ஆணுறையை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கிறர்கள்.

தமது வித்தியாசமான இந்த முயற்சிக்காக இவர்கள் மூவரும் தொழில்நுட்பத்துறையில் இளம்தலைமுறையினருக்கான பரிசையும் வென்றிருக்கிறாரகள்.

இவர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்புக்கு S.T.Eye என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக பெயரிட்டுள்ளனர். அதாவது பால்வினை நோய்களை கண்டறியும் கண் என்பது அதன் பொருள்.

உடலுறவில் ஈடுபடும் இருவரில் யாருக்கேனும் பால்வினை நோய்த்தொற்று இருந்தால் இந்த ஆணுறை உடனே நிறம் மாறிவிடும். அதுவும் பால்வினை நோய்க்கேற்ப ஆணுறையின் நிறமாற்றம் நிகழும்படி இந்த ஆணுறைகளை உருவாக்க விரும்புவதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

“வாழ்க்கையை எளிமையாகவும் சுளுவாகவும் மேம்பட்டதாகவும் இருக்கும்படியானதொரு பொருளை நாங்கள் உருவாக்க விரும்பினோம்” என்கிறார் முவாஸ்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption நிறம் மாறும் ஆணுறைகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் மூன்று பள்ளி மாணவர்கள்

இந்த ஆணுறைகள் எப்படி நிறம் மாறுகின்றன?

இவர்களின் திட்டம் இதுதான். ஆணுறையில் நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் பூசப்பட்டிருக்கும். ஆணுறையில் தடவப்பட்டிருக்கும் இந்த நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் உடலுறவின்போது சுரக்கும் உடல் திரவங்களைத் தொடும். அப்படியானத் தொடர்பு ஏற்படும்போது, பாக்டீரியாக்கள் உள்ளிட்ட பால்வினை நோயைத்தோற்றுவிக்கும் கிருமிகளின் புரதங்களைத் தொட்டதும் வேதியியல் ரீதியில் அதற்கு எதிர்வினையாற்றும்.

இந்த எதிர்வினையானது இந்த ஆணுறைகளின் நிறத்தை மாற்றுவதன் மூலம் உடலுறவில் ஈடுபடுபவர்களில் யாரோ ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பால்வினை நோய் இருப்பதை கண்டுபிடித்து எச்சரிக்கும் என்று விளக்கினார் தாண்யால்.

“எச்ஐவி வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க செய்யப்படும் எலிசா பரிசோதனையில் இப்படியான நிறமாற்றம் தான் அடிப்படையாக இருக்கிறது. அதைப்பார்த்ததும் தான் எங்களுக்கு இந்த யோசனை உதித்தது”, என்கிறார் தாண்யால்.

இந்த ஆணுறையின் இரண்டு பக்கமுமே இந்த நிறமாற்றம் நடக்கும் என்கிறார்கள் இந்த மூன்று மாணவர்கள்.

அதிலும் வெவ்வேறு பால்வினை நோய்க்கும் வெவ்வேறு நிறத்தை இவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். கிளமிடியா நோய்க்கு பச்சை நிறம். பிறப்புறுப்பில் தோன்றும் புண்களுக்கு ஊதா நிறம். சிப்லிஸ் நோய்க்கு நீல நிறம் மற்றும் ஹெர்பிஸ் நோய்க்கு மஞ்சள் நிறம் என்பதாக இவர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption இந்த ஆணுறைகள் ஒவ்வொரு பால்வினை நோய்க்கும் ஒவ்வொரு நிறமாக மாறும்

பால்வினை நோய்ப்பரவலுக்கு எதிராக பள்ளிமாணவர்கள்

“இந்த ஆணுறைகள் மூலம், மருத்துவமனைக்குச் செல்வதற்கு கூச்சப்படுபவர்கள் வீட்டில் இருந்தபடி மிகவும் அந்தரங்கமாகவே தமது நோய்த்தொற்றைக் கண்டுபிடித்துக்கொள்ள முடியும்” என்கிறார் சிராக்.

லண்டனில் இருக்கும் இல்ஃபோர்டிலுள்ள தங்கள் பள்ளியில் நடந்த ஒரு போட்டியில் இந்த மூன்று மாணவர்கள் தங்களின் இந்த யோசனையை வெளியிட்டிருக்கிறார்கள்.

சிராக், தாண்யால் மற்றும் முவாஸ் ஆகிய மூன்று மாணவர்களும் 11-வயது முதல் 16 வயது வரையிலான மாணவர்களுக்கு நடந்த பள்ளியின் போட்டியில் கலந்துகொண்டனர்.

TeenTech awards என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்ட இந்த போட்டியில், நிஜ வாழ்வின் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தீர்வு காண்தற்கான யோசனைகளை மாணவர்கள் முன்வைக்க வேண்டும். சுகாதாரப்பிரிவில் இவர்களின் யோசனை பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு இவர்களின் பள்ளிக்கு 1000 பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்ட்கள் பரிசுத்தொகையாக அளிக்கப்பட்டது.

“இந்த போட்டிக்கு நாங்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து இணையத்தில் தேடிக்கொண்டிருந்தோம். அப்போது இணையத்தில் தகவலைப் பரிமாறுவதற்கான ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு தகவலைப்பார்த்தோம். அவசியமாக கண்டுபிடிக்கப்படவேண்டிய 20 விஷயங்கள் என்று ஒரு பட்டியல் இருந்தது. அதில் இந்த நிறம் மாறும் ஆணுறை கண்டுபிடிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த நிறமாற்றம் என்பது பால்வினை நோய்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழியாகவும் இருந்தால் மக்களுக்குப் பயன்படும் என்று நாங்கள் எங்களின் சொந்த யோசனையையும் அதில் சேர்த்துக்கொண்டோம்”, என்கிறார் முவாஸ்.

தயக்கத்துடன் துவங்கிய முயற்சி

"எங்களின் இந்த யோசனை எடுபடும் என்று நாங்கள் முதலில் நம்பவில்லை. சிக்கலில் மாட்டப்போகிறோம் என்று பயந்தோம். இது ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இதை வைத்து நாங்கள் நகைச்சுவை செய்கிறோம் என்று சிலர் சந்தேகிக்கலாம் என்று கவலைப்பட்டோம்”, என்கிறார் அவர்.

பால்வினை நோய்கள் பலரையும் பாதிப்பதால் அதற்கு தங்களால் ஆன ஏதேனும் உதவி செய்யவேண்டும் என்பதற்காகவே தாங்கள் இதை வடிவமைக்க திட்டமிட்டதாகக் கூறுகிறார்கள் இந்த பள்ளி மாணவர்கள்.

படத்தின் காப்புரிமை n
Image caption இங்கிலாந்தில் ஆண்டுக்கு சுமார் நான்கறை லட்சம் பேருக்கு பால்வினை நோய்த்தொற்று ஏற்படுகிறது

“2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மட்டும் நான்கரை லட்சம் பேருக்கு பால்வினை நோய் தொற்றியிருக்கிறது. எனவே இங்கே ஆணுறைக்கு மிகப்பெரிய சந்தை இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்”, என்கிறார் தாண்யால்.

இதற்காக இந்த பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியின் அறிவியல் ஆசிரியரை ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். அவர் தான் இவர்களுக்கு நோயைத் தோற்றுவிக்கும் கிருமிகள் மற்றும் நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் பற்றியும் அவை இரண்டும் மோதும்போது எப்படி ஒன்றுக்கொன்று எதிர்வினையாற்றும் என்பது பற்றியும் விளக்கியிருக்கிறார்.

தங்களின் இந்த யோசனையின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் நடைமுறைச் சாத்தியங்கள் குறித்து மேலதிக சோதனைகளை நடத்தவேண்டும் என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிறம் மாறும் ஆணுறைகளை உருவாக்குவதற்கான விஞ்ஞானம் தொடர்பாக தாங்கள் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படவிருப்பதாகவும் ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இவர்களுடன் இணைந்து செயற்பட முன்வந்திருப்பதாகவும் இவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இவர்களின் திறமையை அங்கீகரிக்கும்விதமாக இவர்களை தமது அரண்மனைக்கு அழைத்து பாராட்டவிருக்கிறார் பிரிட்டனின் இளவரசர் ஆண்ட்ரூ.

நிறம் மாறும் ஆணுறைகள்: சாத்தியமா?

இந்த மாணவர்கள் உருவாக்க நினைக்கும் நோய்க்கேற்ப நிறம் மாறும் ஆணுறைகள் என்பவை உண்மையில் சாத்தியமா என்று பாலியல் சுகாதாரம் மற்றும் எச்ஐவி தொடர்பான பிரிட்டிஷ் அசோஷியேஷனைச் சேர்ந்தவரும் பாலியல் சுகாதார நிபுணருமான மருத்துவர் மார்க் லாவ்டனிடம் பிபிசி கேட்டது.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption இந்த மாணவர்களின் முயற்சி சாத்தியம் என்கிறார் பாலியல் சுகாதார மருத்துவர் மார்க் லாவ்டன்

“நோய் எதிர்ப்பு மூலக்கூறுகளுடன் தொடர்பு ஏற்படும்போது நிறம் மாறச் செய்வதற்கான தொழில்நுட்பம் என்பது சாத்தியமான ஒன்று தான். அதன் அடிப்படையில் தான் வீடுகளிலேயே செய்யக்கூடிய எச்ஐவி வைரஸ் தொற்றுக்கான எலைசா பரிசோதனையே வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் அவர்.

ஆனால் இதற்காக ஆணுறைகளில் கூடுதல் வேதிப்பொருட்களை நாம் தடவ வேண்டும். அப்படி செய்யும்போது அந்த வேதிப்பொருட்கள் தீங்கிழைப்பவையாகவோ, நச்சுத்தன்மை கொண்டதாகவோ அல்லது பிறப்புறுப்புகளில் எரிச்சல் ஏற்படுத்துபவையாகவோ அந்த வேதிப்பொருட்கள் இருக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டும் மார்க் லாவ்டன், இது கண்டிப்பாக சாத்தியமுள்ள ஒன்று தான் என்றாலும், இன்றைய நிலையில் இதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் நம்மிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.

அதேசமயம், இதைப் பயன்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் எழக்கூடும் என்கிறார் அவர். “ஒருவேளை தன்னுடைய நோய் தன்னுடைய துணைக்கு தெரிந்துவிடுமோ என்று பயப்படுபவர்கள் இந்த ஆணுறையை பயன்படுத்த விரும்ப மாட்டார்கள்”, என்கிறார் அவர்.

அதேசமயம், இந்த பள்ளி மாணவர்கள் பாலியல் நோய்த்தடுப்பில் காட்டும் அக்கறையும் அதற்காக அவர்கள் கண்டுபிடித்திருக்கும் எளிய வழிமுறையும் பாராட்டப்படவேண்டியது என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.