எச்ஐவி வைரஸை வெளியேற்றும் புற்றுநோய் மருந்து

  • 31 ஜூலை 2015
புற்றுநோய் மருந்தே எச்ஐவி வைரஸை "வெளியேற்றவும்" பயன்படும் என்பதால் புது நம்பிக்கை
Image caption புற்றுநோய் மருந்தே எச்ஐவி வைரஸை "வெளியேற்றவும்" பயன்படும் என்பதால் புது நம்பிக்கை

புற்று நோய்க்கான மருந்து ஒன்று மனிதர்களின் உடலில் மறைந்திருக்கும் எச்ஐவி தொற்றை அவற்றின் மறைவிடங்களில் இருந்து வெளியேற்றவல்லது என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலையில் எச்ஐவி தொற்றுக்கு எதிராக கொடுக்கப்படும் மிகவும் சக்திவாய்ந்த மருந்தான ஆண்டி ரெட்ரோ வைரல் கூட்டுமருந்து, மனிதர்களின் இரத்தத்தில் இருக்கும் எச்ஐவி வைரஸ்களை கொல்கிறது.

ஆனால் இந்த எச் ஐ வி வைரஸ்கள் மனித உடலின் வேறு இடங்களில் ஒளிந்திருக்கும் "பாதுகாப்பான பதுங்கிடங்களை" இந்த கூட்டு மருந்தால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. எனவே மனிதர்களின் இரத்த ஓட்டத்தில் எச்ஐவி வைரஸ் இல்லாவிட்டாலும் உடலின் வேறு இடங்களில் இந்த வைரஸ் தொடர்ந்து மறைந்து உறங்கிக்கொண்டிருக்கிறது.

இப்படி ஒளிந்து உறக்க நிலையில் இருக்கும் எச்ஐவி வைரஸ்களை வெளியே கொண்டுவருவதில் புற்றுநோய்க்கான இந்த குறிப்பிட்ட மருந்து வீரியத்துடன் செயற்படுவதாக தற்போது PLoS Pathogens என்கிற சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கண்டுபிடிப்பு "ஆர்வத்தைத்தூண்டுவதாக" இருப்பதாக தெரிவிக்கும் நிபுணர்கள், இந்த மருந்து எச்ஐவி நோயாளிகளுக்கு கொடுக்க முடியுமா என்பதை விரிவாக ஆராயவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எச்ஐவி வைரஸ் பல்லாண்டுகாலம் பதுங்கியிருக்கவல்லது

எச்ஐவி வைரஸானது மனித உடலில் நீண்ட காலம் மறைந்து வாழத்தக்க வல்லமை வாய்ந்தது என்பதை எச்ஐவி தொற்றுக்குள்ளான மிசிஸிப்பி குழந்தையின் சிகிச்சையின்போது மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

படத்தின் காப்புரிமை SPL
Image caption எச்ஐவி வைரஸ் நீண்டநாட்கள் மறைந்திருக்கும் வல்லமை மிக்கது

இந்த பெண்குழந்தை பிறந்தபோது ஆண்டி ரெட்ரோ வைரல் கூட்டு மருந்து கொடுக்கப்பட்டது. பிறகு ஒரு கட்டத்தில் அவருக்கு இரத்த பரிசோதனைகள் செய்ததில் அவரது இரத்தத்தில் எச்ஐவி வைரஸ் தொற்று இல்லை என்று காட்டியது. அதன் பின்னர் அவருக்கு சிகிச்சை நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு அவர் உடலில் எச்ஐவி வைரஸ் தொடர்ந்தும் இருந்தது கண்டறியப்பட்டது.

அசைத்து எழுப்பி அழி

மருத்துவர்களின் வார்த்தைகளில் "Kick and kill" என்று அங்கிலத்தில் கூறப்படும் வழிமுறை;அதாவது உறக்கத்தில் இருந்தும் மறைவிடத்தில் இருந்தும் எச்ஐவி வைரஸை அசைத்து எழுப்பி அழிப்பது என்கிற சிகிச்சை முறையே எச்ஐவி தொற்றை முற்றாக குணப்படுத்த சரியான வழி என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

மறைவிடத்தில் பதுங்கி, உறை நிலையில் இருக்கும் எச்ஐவி வைரஸை உறக்க நிலையிலிருந்து எழுப்பி மறைவிடத்தில் இருந்து வெளியே கொண்டுவருவது இதன் முதல் கட்டம். அடுத்தகட்டம் என்பது இந்த எச்ஐவி வைரஸ்களை மருந்துகள் மூலம் கொன்று அழிப்பது.

படத்தின் காப்புரிமை SPL
Image caption உறைநிலையிலிருக்கும் எச்ஐவி வைரஸை வெளியில் கொண்டுவருவதில் இந்த புற்றுநோய் மருந்து வீரியமிக்கதாக இருக்கிறது

சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்ட தோலில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்தின் ஒரு அங்கமான PEP005 என்கிற மருந்தை கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் இருக்கும் டேவிஸ் மருத்துவப்பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வுசெய்தனர்.

எச்ஐவி தொற்றுக்குள்ளான 13 பேரிடமிருந்து நோய் எதிர்ப்புக்கலங்களை எடுத்து அவற்றை ஆய்வகத்தில் வளர்த்து அதற்கு இந்த மருந்தைக் கொடுத்து இவர்கள் தமது இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த செல்களில் மறைந்திருந்த எச்ஐவி வைரஸ்களை மீண்டும் செயற்படத்தூண்டுவதில் இந்த "PEP005” மருந்து மிகவும் வீரியத்துடன் செயற்பட்டதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த மருந்தில் இருக்கும் வேதிப்பொருளானது எச்ஐவி தொற்றுக்கு எதிரான புதிய மருந்தாக பயன்படலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

"அனுமதிக்கப்பட்ட மருந்து என்பதால் இதன் பயன்பாடு குறித்து கூடுதல் நம்பிக்கை"

"ஏற்கனவே அரசுகள் மற்றும் மருத்துவர்களால் அனுமதிக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஒரு வேதிப்பொருள்/மருந்து, எச்ஐவி வைரஸை மறைவிடத்தில் இருந்து வெளியில் கொண்டுவந்து அவற்றை அழிப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்கிற சாத்தியத்தைக் கண்டறிந்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி”, என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான மருத்துவர் சத்ய தண்டேகர்.

“இந்த குறிப்பிட்ட மூலக்கூறானது மருத்துவ சிகிச்சை மற்றும் மனிதர்களிடம் நடத்தப்படும் பரிசோதனைகளுக்கு முன்னேறக்கூடிய சாத்தியம் அதிகம் இருக்கிறது” என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

படத்தின் காப்புரிமை SPL
Image caption இரத்த ஓட்டத்தில் எச்ஐவி வைரஸை ஒழிக்க முடிந்தாலும் உடலில் வேறு இடத்தில் அவை மறைந்திருக்கும்

அதேசமயம், இந்த மருந்தானது எச்ஐவி தொற்றுக்குள்ளான மனிதர்கள் மத்தியில் இன்னமும் நேரடியாக பரிசோதனை செய்து பார்க்கப்படவில்லை.

இந்த பரிசோதனை முடிவுகள் “உற்சாகமளிப்பதாக” தெரிவித்திருக்கும் மெல்போர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஷரோன் லுவின், மறைந்திருக்கும் எச்ஐவி வைரஸை வெளியில் கொண்டுவருவதற்கான புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் இது ஒரு முக்கிய முன்னேற்றம் என்றும் கூறினார்.

“நீண்டநாட்களாக மனித உடலில் மறைந்திருக்கும் எச்ஐவி வைரஸை அழிக்கவல்ல கூடுதல் மருந்தை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. அதேசமயம் இது எச்ஐவி தொற்றுக்குள்ளான நோயாளிகளின் உடலில் இதே வேலையைச் செய்கிறதா என்பதை உறுதி செய்யக்கூடிய மேலதிக ஆய்வுகள் செய்யவேண்டியிருக்கிறது”, என்றும் அவர் கூறினார்.

“PEP005 என்கிற இந்த வேதிப்பொருளானது, அமெரிக்க மருந்து ஆணையம் அங்கீகரித்திருக்கும் மருந்தின் ஒரு பகுதி தான் என்றாலும், எச்ஐவி தொற்றுக்குள்ளான ஒருவருக்கு இதைக் கொடுப்பது பாதுகாப்பானதா என்பதை முடிவு செய்ய இன்னும் சில காலம் தேவைப்படும்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.