கணையப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க புதிய சிறுநீர்ப் பரிசோதனை

கணையப் புற்றுநோய் உயிரணு படத்தின் காப்புரிமை
Image caption கணையப் புற்றுநோய் உயிரணு

கணையத்தில் வரக்கூடிய புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிப்பதற்கு உதவும் விலை குறைவான பரிசோதனை ஒன்றை தாம் கண்டறிந்துள்ளதாக இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்நோய் வந்தவர்களில் உயிர் பிழைப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவு எனும் நிலையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு பெரிய முன்னேற்றம் என்று பார்க்கப்படுகிறது.

ஸ்கேன்கள், இரத்தப் பரிசோதனைகள் செய்து இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சிறுநீரில் மூன்று விதமான புரதங்கள் தென்படுகிறதா என்பதை வைத்தே இந்த நோய் இருக்கிறதா இல்லையா என்பதை சொல்லிவிட முடியுமாம்.

இந்தப் பரிசோதனை தொண்ணூறு சதவீதத்துக்கும் அதிகமானோரில் சரியான முடிவை அளித்துள்ளது.

மரபணு அடிப்படையில் இந்தப் புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து உள்ளவர்களை தேர்ந்தெடுத்து பெரிய அளவில் இந்த புதிய பரிசோதனை முயன்றுபார்க்கப்படவுள்ளது.