தமிழ்நாட்டின் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைவரானார்

கூகுள் நிறுவனத்தலைமை அதிகாரியாகியிருக்கும் தமிழ்நாட்டின் சுந்தர் பிச்சை படத்தின் காப்புரிமை AP
Image caption கூகுள் நிறுவனத்தலைமை அதிகாரியாகியிருக்கும் தமிழ்நாட்டின் சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட அவர், கரக்பூரிலுள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காகச் சென்றார்.

அங்கு எம்.எஸ் பட்டம் பெற்ற பின்னர், உலகப் புகழ்பெற்ற வார்ட்டன் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப்பள்ளியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption கூகுள் குரோம் உருவாக்கத்தில் சுந்தர் பிச்சை முக்கிய பங்காற்றியதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது

இதையடுத்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார்.

இணையத் தேடல் செயலியான கூகுள் குரோம், கூகுள் டிரை ஆகியவற்றை உருவாக்கியதில் அவருக்கு முக்கியப் பங்கு இருந்தது என கூகுள் நிறுவனம் கூறுகிறது.

தமது நிறுவனத்தில் அவரது செயலாற்றலைக் கண்டு தான் மிகவும் வியந்துள்ளதாகவும், அவரைத் தலைமை செயல் அதிகாரியாக நியமிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூகுள் நிறுவனத்தை இணைந்து உருவாக்கிய லாரி பேஜ் தெரிவித்துள்ளார்.