கணினிப் பயன்பாட்டால் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படவில்லை: புதிய ஆய்வு

படத்தின் காப்புரிமை Getty

பள்ளிக்கூடங்களில் கணினிப் பயன்பாட்டை அதிகரிப்பதால் அப்பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கவில்லை என சர்வதேச ஆய்வு ஒன்று காட்டியுள்ளது.

மாணவர்கள் அடிக்கடி கணினிகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பது, அவர்கள் தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற வழிவகுக்கலாம் என்றே ஆய்வு முடிவுகள் காட்டுவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஓ.ஈ.சி.டி அமைப்பு கூறுகிறது.

பள்ளிக்கூடங்களில் நவீன தொழில்நுட்பங்களை நிறுவதற்கு நூறு கோடி டாலர்கள் கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது, காரணம் நவீன தொழில்நுட்பங்களால் மாணவர்களின் கற்கைத் திறன் மேம்படும் என்ற ஒரு பொய்யான நம்பிக்கை இருந்துவருகிறது என ஓ.ஈ.சி.டி. அமைப்பின் கல்வி இயக்குநர் கூறுகிறார்.

வகுப்பறையிலோ வீட்டுப்பாடத்திலோ டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டை ஒப்பீட்டளவில் குறைவாகப் பயன்படுத்தும் ஆசிய கல்வி முறையில் பயிலும் மாணவர்கள்தான் சர்வதேச அளவில் தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் என இந்த ஆய்வு காட்டியுள்ளது.