கலபகோஸ் தீவில் புதிய வகை ராட்சத ஆமை

பசுபிக் கடலில் இருக்கும் கலபகோஸ் தீவில் புதிய வகை ராட்சத ஆமை ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கலபகோஸ் தீவில் வசிக்கும் ராட்சத ஆமைகள் முன்பு ஒரே வகை என கருதப்பட்டிருந்தன.

250 ஆமைகளின் மரபணுக்களைச் சோதித்ததில் அவை அங்குள்ள சாண்டா க்ரூஸ் தீவில் இருக்கும் இதேபோன்ற அமைகளிடமிருந்து மாறுபட்டவை எனத் தெரியவந்திருக்கிறது.

அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆமை வகைகளில் இதுவும் ஒன்று. இவற்றில் 4 வகைகள் ஏற்கனவே அழிந்துவிட்டன.

கலபகோஸ் பூங்காவில் பணியாற்றி ஓய்வுபெற்ற "செலோன்வாதி டொன்பாஸ்ட்வா" என்ற ரேஞ்சரின் பெயர் இந்த ஆமை இனத்திற்குச் சூட்டப்பட்டிருக்கிறது.

கலபகோஸில் இருக்கும் ராட்சத ஆமைகள் சுமார் 250 கிலோ எடை வரை வளரும். இவரை 100 ஆண்டுகளையும் தாண்டி வாழும்.

முன்னதாக, சாண்டா க்ரூஸ் தீவில் இருந்த ராட்ச ஆமைகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என கருதப்பட்டுவந்தன. ஆனால், இவற்றின் மரபணுவைச் சோதித்ததில் இந்தக் கூற்று தவறு என நிரூபிக்கப்பட்டது என ஈக்வெடார் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புதிய ஆமையை கிழக்கு சாண்டா க்ரூஸ் ஆமை என்றும் குறிப்பிடுகின்றனர். இவை அந்தத் தீவின் கிழக்குப் பகுதியில் வசிக்கின்றன.

இந்த புதிய கண்டுபிடிப்பானது, அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த ஆமைகளைப் பாதுகாக்க உதவும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப்போது வெறும் 250 ராட்சத ஆமைகளே அங்கு இருக்கின்றன.

மற்ற வகைகளைச் சேர்ந்த மேலும் 2000 ஆமைகள் அந்தத் தீவின் பிற பகுதிகளில் வசிப்பதாகக் கருதப்படுகிறது.

1830களில் பிரிட்டிஷ் ஆய்வாளரான சார்லஸ் டார்வின் கலபகோஸ் தீவுகளில் மிக நெருக்கமாக ஆராய்ந்த உயிரினங்களில் இந்த ராட்சத ஆமை வகையும் ஒன்று.