இருந்ததே நான்கு,அதிலும் ஒன்று போய்விட்டது

உலகளவில் கடைசியாக எஞ்சியிருந்த வடபகுதி வெள்ளையின காண்டாமிருங்கள் நான்கில் ஒன்று உயிரிழந்துள்ளது.

Image caption நோலா 'கொலை செய்யப்பட்டாள்'. அறுவை சிகிச்சை பலனளிக்காததால் கருணைக் கொலை.

அமெரிக்காவிலுள்ள வனவிலங்கு பூங்காவில் இருந்த 41 வயதான நோலா எனும் பெண் காண்டாமிருகத்தின் உடல்நிலை, அறுவை சிகிக்சை ஒன்றின் பின்னர் மோசமடைந்தது.

இடுப்புப் பகுதியில் ஏற்பட்டிருந்த புண் ஒன்றுக்காக நவம்பர் மாதம் 13ஆம் தேதி நோலாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அதன் உடல்நிலை பின்னரும் மோசமடைந்ததால் மருத்துவரீதியில் அதை கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்களால் அது கொல்லப்பட்டது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நோலாவைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடும் முயற்சிகளை எடுத்தனர்

சான் டியாகோ வனவிலங்கு பூங்காவில் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் இருந்த நோலா, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்திருந்தது.

உலகளவில் எஞ்சியிருக்கும் இதர மூன்று வடபுல வெள்ளைக் காண்டாமிருகங்களும் கென்யாவிலுள்ள ஒரு காப்பகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அந்த மூன்றுமே மிகவும் வயதானவை.

வடபுல வெள்ளையின காண்டாமிருகங்களின் கொம்புகள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், சட்டவிரோத வேட்டைக்காரர்களால் அவை வகைதொகையின்றி கொல்லப்பட்டன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கொம்புகளுக்காக இவை வகைதொகையின்றி கொல்லப்பட்டன

இதன் காரணமாக அவற்றின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்து வனப்பகுதியில் முற்றாக அழிந்துவிட்டது என 2008ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

சான் டியாகோவிலுள்ள மிருகக்காட்சிசாலை அண்மையில் ஆறு தென்புல வெள்ளையின காண்டாமிருகங்களை வாங்கியது.

அவற்றை வாடகைத் தாயாகப் பயன்படுத்தி, வடபுல வெள்ளையின காண்டாமிருகங்களை இனவிருத்தி செய்யால என நம்பினர்.

உலகளவில் சுமார் 20,000 தென்புல வெள்ளையின காண்டாமிருகங்கள் உள்ளன.

எனினும் மரபுரீதியாக இந்த இரு இனங்களுக்கும் ஒற்றுமை உள்ளதா, என்பது குறித்த ஆய்வுகள் இன்னும் நடைபெறுகின்றன.

பின்னரே இந்த வாடகைத் தாய் விஷயம் குறித்து முடிவெடுக்கப்படும்.

Image caption ஆய்வு வெற்றி பெற்றால் புதிய வடபுல வெள்ளையின காண்டாமிருகக் குட்டி ஒன்று பிறக்கலாம்

ஆய்வின் முடிவுகள் சாதகமாக இருக்குமாயின், அதன் அடிப்படையில் இனவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுத்து அது வெற்றி பெற்றால், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் ஒரு வடபுல வெள்ளையின காண்டாமிருகக் குட்டி பிறக்காலாம்.