ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகிலுள்ள 4 லட்சம் தாவர இனங்களில் 10% அழிவின் விளிம்பில்

உலக தாவரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இன்றைய நிலைமைகள் குறித்த முதலாவது விரிவான கணக்கெடுப்பின் முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

தற்போதுள்ள தாவரங்களில் ஐந்தில் ஒருபகுதி தாவரங்கள் பலவகையான ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் இவற்றில் சில தாவர இனங்கள் இல்லாமலே அழிந்துபோகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

லண்டனில் உள்ள ராயல் பொடானிக் கார்டன்ஸ் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் உலகத் தாவரங்கள் குறித்த நம் புரிதலின் போதாமையை எடுத்துக்காட்டுவதாக தாவரவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"உலகில் மொத்தம் எத்தனை தாவரங்கள் இருக்கின்றன என்பதை கணக்கெடுத்தோம். சுவாரஸ்யமான முடிவு கிடைத்தது. நான்கு வெவ்வேறு தரவுகளைத் தொகுத்ததில் மூன்று லட்சத்து தொண்ணுத்தி ஓராயிரம் தாவரங்கள் இருப்பதைக் கண்டறிந்த்தோம். இது வெறும் மேலோட்டமான கணக்கு. நமக்குத் தெரியாத தாவரங்கள் பல்லாயிரக்கணக்கானவை இருக்கின்றன”, என்கிறார் கீவ் பூங்காவின் விஞ்ஞான இயக்குநர் பேராசிரியர் கேதே வில்லிஸ்.

புதிதாக அடையாளம் காணப்படும் தாவரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 2000 தாவரங்களில் கபோனில் இருக்கும் 15 மீட்டர் மரமும், பிரேசிலில் வளரும் பூச்சிகளைத் தின்னும் தாவரமும் அடங்குகின்றன.

ஆனால் தாவரங்கள் சந்திக்கும் ஆபத்துக்களும் அதிகரிக்கின்றன. ஜாபனீஸ் க்நாட்வீட் போன்ற அந்நிய நிலத்தில் வேகமாக பரவி உள்ளூர் தாவரங்களை அழிக்கும் களைச்செடிகள் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்த அதிக செலவும் பிடிக்கிறது. இத்தகைய மோசமான களைச்செடிகள் உலகில் சுமார் ஐயாயிரம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

"தற்போது இந்த பட்டியலும் எண்ணிக்கையும் கிடைத்திருப்பதால் தாவரங்களின் எதிரி யார் என்பது தெரிந்துகொண்டோம். இவை எப்படி மோசமான களைகளாக இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டிருப்பதால் இவற்றை கையாள்வது எப்படி என்பதற்கான பரிந்துரைகளை செய்ய முடியுமென நம்புகிறோம்", கீவ் பூங்காவின் வனவளப் பாதுகாப்புத் தலைவர் டாக்டர் கோலின் கிளப்.

உலக தாவரங்களில் ஐந்தில் ஒன்று ஆபத்தை எதிர்கொள்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதேசமயம் இந்தப் புதிய அறிக்கை தாவர உலகின் மாற்றங்களை அளக்க உதவுவதோடு தாவரங்களின் எதிர்காலத்தை கண்காணிக்கவும் பெரிதும் உதவும்.