ஜூபிடரை சுற்றிவர நாசாவின் விண்கலன் தயாராகிறது

அமெரிக்க விண்வெளி நிறுவனமான, நாசா, ஜுபிடர் ( வியாழன்) கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு செய்கோளை நாளை செவ்வாய்க்கிழமை நிலை நிறுத்த ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை nasa
Image caption ஜூபிடரைச் சுற்றிவரவுள்ள ஜூனோ கலன்

நாளை இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இந்த ஜூனோ என்ற இந்த கலன் சுற்றுப்பாதையில் வைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், வெகு வேகமாகச் சென்று கொண்டிருக்கும் இந்த ஜூனோ கலன், ஜூபிடரின் ஈர்ப்பு விசை மண்டலத்துக்குள் பிடிபட ஒரு மிகத் துல்லியமான ப்ரேக் போடும் நடவடிக்கையை செய்ய வேண்டும்.

அதன் பிறகு அது 18 மாதங்கள் இந்த வாயுவிலானா கோளை ஆய்வு செய்யும்; ஒரு கட்டத்தில் அது ஜூபிடரின் மேகங்களுக்குள் சுமார் 5,000 கிமீ உயரத்திற்குள் மிதந்து கொண்டிருக்கும். பின்னர் அது ஜூபிடரின் சூழலுக்குள் குதித்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்.

ஆனால் இந்தக் கலன் ஜூபிடரின் சுற்றுப்பாதைக்குள் சரியாகச் செல்வதற்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அதில் தோல்வியடைந்தால், சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த கலன் தொடர்ந்து பறந்து ஆழ் விண்வெளிக்குள் சென்று மறைந்து விடும்.

சுமார் 3 பிலியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜூபிடருக்குப் பயணிக்க ஜூனோவுக்கு ஐந்து ஆண்டுகள் பிடித்துள்ளன.