கிரிக்கெட்: இன்று தனது 500-வது டெஸ்டில் களமிறங்கிய இந்தியா

கடந்த 1932-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, கான்பூரில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில், 500-வது டெஸ்ட் போட்டி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption விராட் கோலி

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று கான்பூரில் தொடங்கியது.

ஆரம்பத்தில் மட்டை பிடிப்புக்கு ( பேட்டிங்) எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வெடிப்புகள் நிரம்பிய கான்பூர் க்ரீன் பார்க் பிட்ச், பின்னர் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிகமாக கை கொடுக்கும்.

படத்தின் காப்புரிமை AP
Image caption இந்திய சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின்

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, இன்றைய போட்டியில் டாஸ் வென்றவுடன் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தீர்மானித்தார்.

இன்றைய போட்டியில், இந்தியா ஆறு மட்டை பிடிப்பாளர்கள், ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் நான்கு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.

இன்றைய போட்டிக்கு முன்பு 499 டெஸ்ட் போட்டிகள் விளையாடிவுள்ள இந்தியா, அதில் 129 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளது. மேலும், 157 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தும், 212 போட்டிகளை சமன் செய்துள்ளது. ஒரு போட்டி 'டை' ஆனது.

டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவின் வெற்றி சதவீதம் 25.85 ஆகும்.

தனது 500-வது டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணில் விளையாடும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.