டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின்: இந்தியா வெற்றி பெறுமா?

இந்தியாவின் 500-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தனது 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடைந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP
Image caption டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் (கோப்புப் படம்)

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

தற்போது கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இது இந்திய அணி பங்கேற்கும் 500-வது டெஸ்ட் போட்டியாகும்.

தங்களின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 318 ரன்களும், நியூஸிலாந்து அணி, 262 ரன்கள் எடுத்தன.

பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் துவங்கிய இந்திய அணி, நான்காவது நாளான இன்று (ஞாயிற்றுக் கிழமை) உணவு இடைவேளைக்கு பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்கு 377 ரன்கள் எடுத்து தனது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

434 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணிக்கு, துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

நியூஸிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 4வது ஓவரை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின், நியூஸிலாந்து வீரர்கள் கப்டில் மற்றும் லதாமை ஆகியோரை ஆட்டமிழக்க செய்து , தனது 200-வது டெஸ்ட் விக்கெட்டை பெற்றார்.

இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக 200 விக்கெட்கள் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

நாளை ஒரு நாள் மட்டுமே இருப்பதால், எஞ்சிய ஆறு விக்கெட்டுகளையும் பெற்று இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்