500-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

  • 26 செப்டம்பர் 2016

கான்பூரில் தனது 500-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியை 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கான்பூரில் வென்ற இந்திய அணி

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

கடந்த 22-ஆம் தேதியன்று, கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

தங்களின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 318 ரன்களும், நியூஸிலாந்து அணி, 262 ரன்கள் எடுத்தன.

பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் துவங்கிய இந்திய அணி, நான்காவது நாளான நேற்று (ஞாயிற்றுக் கிழமை) உணவு இடைவேளைக்கு பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்கு 377 ரன்கள் எடுத்து தனது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

படத்தின் காப்புரிமை Kirtish Bhatt
Image caption கான்பூர் டெஸ்ட் போட்டியின் ஸ்கோர் கார்ட்

434 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது.

இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆறு விக்கெட்டுகள் எடுத்து நியூஸிலாந்து அணியை தடுமாறச் செய்தார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ரவிச்சந்திரன் அஸ்வின்

இறுதியில், 87.3 ஓவர்களில், 236 ரன்கள் மட்டும் எடுத்து தனது அனைத்து விக்கெட்டுகளையும் நியூஸிலாந்து அணி இழந்தது.

இதனால், 197 ரன்களில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டியில், இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா

தொடர்புடைய தலைப்புகள்