நியூஸி., அணிக்கு எதிராக வெற்றி: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இந்தியா

  • 3 அக்டோபர் 2016

கொல்கத்தாவில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய அணித்தலைவர் கோலியுடன் அஸ்வின்

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

கான்பூரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட்டில், 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து முதல் இன்னிங்சில் 316 ரன்களும், நியூஸிலாந்து அணி 204 ரன்களும் எடுத்திருந்தன.

தனது இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்தார்.

376 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும், இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தனர்.

இதனால், இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய அணித் தலைவர் விராட் கோலி

இதன் மூலம், மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில், முதல் இரண்டு டெஸ்ட்களை வென்ற இந்தியா, டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை இந்தியா மீண்டும் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்