போதை மருந்து பயன்பாடு பரிசோதனை - சர்வதேச ஒலிம்பிக்குழு ஆய்வு

  • 8 அக்டோபர் 2016

விளையாட்டு போட்டிக்களின் போது செய்யப்படுகின்ற போதை மருந்து பயன்பாடு பற்றிய முழுமையான சோதனையை மேற்கொள்வது பற்றிய கலந்தாய்வை சர்வதேச ஒலிம்பிக் குழு சுவிட்சர்லாந்திலுள்ள லேஸாண் நகரில் நடத்துகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரியோ ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு முழுமையாக தடைவிதிப்பது தொடர்பாக உலக போதை மருந்து தடுப்பு அமைப்பிற்கும், சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது

ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை போட்டியிட அனுமதிப்பது தொடர்பாக உலக போதை மருந்து தடுப்பு அமைப்பிற்கும், சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சையையொட்டி இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு முன்னால், ரஷ்ய அரசின் ஆதரவோடு போதை மருந்து பரிசோதனையில் பெரிய மோசடி நடைபெற்றிருப்பதை உலக போதை மருந்து தடுப்பு அமைப்பு அமைத்திருந்த ஆணையத்தின் அறிக்கை கண்டறிந்தது.

ஆனால், ரஷ்யா மீது ஒட்டுமொத்த தடை விதிக்க வழங்கப்பட்ட முன்மொழிவை சர்வதேச ஒலிமிபிக் குழு ஏற்கவில்லை.

இருதரப்பும் கோபமாக பரிமாறிய கருத்துக்களாலும், உலக போதை மருந்து தடுப்பு அமைப்பை குறைத்து மதிப்பிட சர்வதேச ஒலிம்பிக்குழு முயலுகிறது என்ற குற்றச்சாட்டாலும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

மோசமானவைகள் முடிந்துவிட்டன. தற்போதைய அமைப்பை வலுப்படுத்தவதற்கான நோக்கில் கலந்துரையாடல் இடம்பெறுவதாக உலக போதை மருந்து தடுப்பு அமைப்பின் தலைவர் கிரேக் ரீடைய் கூறியிருக்கிறார்.