3 - 0: நியூஸிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

  • 11 அக்டோபர் 2016

இந்தூரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றியுள்ளது.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/AFP
Image caption அஸ்வின் (கோப்புப் படம்)

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. கான்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய முதல் இரண்டு டெஸ்ட்களில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இந்தூரில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி , முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய கேப்டன் விராட் கோலி

முதலில் பேட் செய்த இந்திய முதல் இரண்டு விக்கெட்டுகளை விரைவில் இழந்து விட்டாலும், பின்பு நிதானமாக விளையாடியது. பின்னர் களமிறங்கிய புஜாரா 41 ரன்கள் எடுத்தார்.

புஜாரா அட்டமிழந்த பின்னர், களமிறங்கிய ரஹானே, அணித்தலைவர் விராட் கோலியுடன் நிலைத்து நின்று விளையாட, இவர்களைப் பிரிக்க நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

விராட் கோலி 211 ரன்களும், ரஹானே 188 ரங்களும் எடுத்தனர். இதனால் வலுவான நிலையை அடைந்த இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

பின்னர், களமிறங்கிய நியூஸிலாந்து அணியால் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியவில்லை.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அபாரமாக பந்துவீசிய அஸ்வின்

தனது முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 299 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடர்ந்து , தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா, 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 216 ரன்கள் எடுத்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்க்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

மீண்டும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களை நியூஸிலாந்து அணி இழக்க, 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரை 3-0 என்று இந்தியா கைப்பற்றியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை பெற்ற இந்திய சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்