தீபாவளி பரிசாக ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா

விசாகப்பட்டினத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஒரு நாள் தொடரை வென்ற இந்திய அணி

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்று 2-2 என்று சமநிலையில் இருந்தன.

இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணித்தலைவர் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 70 ரன்கள் எடுத்து அணிக்கு நாள் துவக்கத்தை தந்தார். பின்னர், களமிறங்கிய கேப்டன் தோனி 41 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவூட்டினார்.

எதிர்முனையில் சிறப்பாக விளையாடி வந்த கோலி 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய ஆட்டக்காரர்களில் ஜாதவ் மட்டும் 39 ரன்கள் எடுத்தார்.

படத்தின் காப்புரிமை AP

நிர்ணயிக்கப்பட்ட50 ஓவர்களில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது.

270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

இன்றைய போட்டியில் மூன்று நியூஸிலாந்து வீரர்களை தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இறுதியில், 23.1 ஓவர்களில் 79 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி ஆட்டமிழந்தது. அமித் மிஸ்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அமித் மிஸ்ரா அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து 190 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஒரு நாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.

தொடர்புடைய தலைப்புகள்