இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிக்கான சிக்கல் தீர்ந்தது: நிதி ஒதுக்க பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

நிதி சர்ச்சை காரணமாக நாளை புதன்கிழமை துவங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை ரத்து செய்யப் போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள சூழலில், தேவையான நிதியினை சௌராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்க பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

படத்தின் காப்புரிமை AP
Image caption நிதி ஒதுக்கீடு செய்ய பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

மேலும், இந்த கணக்கு விவரங்களை லோதா குழுவுக்கு பிசிசிஐ அனுப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக, ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்ற மோசடிகளை அடுத்து அது தொடர்பாக விசாரணை நடத்த லோதா குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழுவின் சில பரிந்துரைகளையும், சீர்திருத்தங்களையும் பிசிசிஐ அமைப்பு ஏற்கவில்லை.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் இடையிலான பணப் பரிமாற்றத்தை முற்றிலுமாக முடக்க உத்தரவிட்டது.

லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த பிசிசிஐ மறுத்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் எடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், ராஜ்காட்டில் நாளை துவங்கவுள்ள இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ மனு தாக்கல் செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் ( கோப்புப் படம்)

பிசிசிஐ தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த உத்தரவை வழங்கியது.

தொடர்புடைய தலைப்புகள்