மொகாலி கிரிக்கெட் டெஸ்ட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

  • 29 நவம்பர் 2016

இங்கிலாந்து அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

ராஜ்காட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. விசாகப்பட்டனத்தில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதியன்று மொகாலியில் இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தனது விக்கெட்டுக்களை தொடர்ந்து பறிகொடுத்தது. இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ 89 ரன்கள் எடுத்தார். பட்லர் 43 ரன்களை எடுத்தார்.

கோலி மற்றும் புஜாரா அரைச்சதம்

இரண்டாம் நாளின் தொடக்கத்தில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இங்கிலாந்து அணி 283 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இருவரும் அரைசதம் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ரஹானே மற்றும் கருண் நாயர் ஆகியோரும் விரைவாக ஆட்டமிழக்க 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்களை மட்டுமே பெற்று இந்திய அணி தடுமாறியது.

படத்தின் காப்புரிமை Reuters

அஸ்வின், ஜடேஜா அபாரம்

இந்திய ஆல்ரவுண்டர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தித்னர். அஸ்வின் 72 ரன்கள் எடுக்க, ஜடேஜா 90 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 417 ரன்களை குவித்தது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 90 ரன்கள் எடுத்த ஜடேஜா

தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 236 ரன்களை மட்டுமே எடுத்ததால், இந்திய அணிக்கு 103 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் ரன் குவிக்காமலே ஆட்டமிழந்தாலும், பார்த்தீவ் பட்டேல் ஆட்டமிழக்காமல் 67 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற உதவினார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆட்டநாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்வு

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என்று இந்தியா டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய தலைப்புகள்