ரூபா தேவி: விளையாட்டை வேடிக்கை பார்த்த சிறுமி வீராங்கனையாகவும், சர்வதேச நடுவராகவும் உருவெடுத்த கதை

  • 10 டிசம்பர் 2016

திரைப்பட கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், பாராட்டுகளில் பாதியளவு கூட இந்தியாவில்,கிரிக்கெட் தவிர, பிற துறைவிளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. வீராங்கனைகள் நிலை இன்னமும் பரிதாபம். எந்த பின்புலமும் இல்லாமல், எல்லாத் தடைகளையும் தாண்டி சர்வதேச அளவில் சாதித்த ரூபா தேவியின் சாதனைகள் அசாத்தியமானவை.

Image caption ஃபிஃபா நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழக பெண் ரூபா தேவி

தமிழகத்தின் தென் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தில், கால்பந்து வீராங்கனையாக தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கிய ரூபா தேவி, 2016-ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவின் நடுவராக நியமிக்கப்பட்டது ஒரு வியப்பளிக்கும் அம்சமாகும். அவர் தனது அனுபவங்களை பிபிசி தமிழோசையிடம் எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் இருந்து, ஃபிஃபா நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை ரூபா தேவி பெற்றுள்ளார். இது வரை, ஃ பிஃ பா அமைப்பின் பெண் நடுவர்களாக இந்திய பெண்கள் ஐவர் மட்டுமே தேந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த ரூபா தேவி, சிறுமியாக இருந்த போது, தன் வீட்டின் அருகேயிருந்த கால்பந்து மைதானத்துக்கு வேடிக்கை பார்க்க சென்ற போது, அங்கு விளையாடுபவர்களை பார்த்து தானும் கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளார்.

ஆரம்ப கால போராட்டங்கள்

ஆரம்பத்தில், கால்பந்து வீராங்கனைக்கு தேவையான உடல் வலு, பயிற்சி, வசதிகள் என்று எதுவுமில்லாத ரூபாவுக்கு, பெரும் உதவியாக இருந்தது திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சம்மேளனம் தான்.

''கால்பந்து விளையாட்டில் நான் வீராங்கனையாகவும், தற்போது ஃபிஃ பா நடுவராகவும் ஆக முடிந்ததற்கு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சம்மேளனம் பெரும் உதவியாக இருந்தது ஒரு முக்கிய காரணம்'' என்று ரூபா தேவி தெரிவித்தார்.

வீராங்கனை நடுவராக மாறியது ஏன்?

விளையாட்டு வீராங்கனை கனவு நடுவராக திசை மாறியது ஏன் என்று கேட்டதற்கு, ''கால்பந்து விளையாட்டு எனக்கு மிகவும் விருப்பமானது. கால்பந்து வீராங்கனையாக தொடர்ந்து தாக்குப் பிடிப்பது இயலாத காரியம் போல ஒரு கட்டத்தில் தோன்றியது. போட்டிகள் நடக்காமல் நான் எவ்வாறு கால்பந்து விளையாட்டில் நிலைத்திருக்க முடியும்?'' என்று வினவிய ரூபா தேவி, '' அது தான், என்னை கால்பந்து நடுவராக மாற தூண்டியது'' என்று விளக்கமளித்தார்.

Image caption சக நடுவர்களுடன் ரூபா தேவி (வலப்புறம் இரண்டாவது)

ஆரம்பத்தில் சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றிய போது, தனக்கு பதற்றமாக இருந்ததாக தெரிவித்த ரூபா தேவி, நாளடைவில் தனது திறமை மற்றும் பங்களிப்புக்கு கிடைத்த பாராட்டுக்கள் தனக்கு பெரும் நம்பிக்கையளித்தாக குறிப்பிட்டார்.

தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டிகள், தாய்லந்தில் நடந்த சர்வதேச கால்பந்து போட்டிகள் என பல போட்டிகளில் நடுவராக செயலாற்றியுள்ள ரூபா, '' இன்னமும் நான் அதிக சர்வதேச போட்டிகளில் நடுவராக இருந்தாலேதான் மேலும் பிரகாசிக்க முடியும் '' என்று தெரிவித்தார்.

பிஎஸ்சி மற்றும் பி.எட். கல்வியை பூர்த்தி செய்துள்ள ரூபா தேவி, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'சக்தி விருது' , ரெயின் டிராப்ஸ் நிறுவன விருது உள்பட பல விருதுகளை, தனது விளையாட்டு சாதனைகளுக்காக பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்ட மகளிர் கால்பந்து அணி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மகளிர் கால்பந்து அணி, அண்ணாமலை பல்கலைக்கழக அணி, தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி என தான் விளையாடிய அனைத்து அணிகளின் வெற்றிக்கும் கடுமையாக போராடியுள்ளார் ரூபா.

Image caption 100 பெண்கள் தொடர்

குடும்பத்தினர் அளித்த உற்சாகம்

பெண்கள் விளையாட்டு துறையில் சந்திக்கும் சவால்கள் குறித்து ரூபா, ''நமக்கு ஒரு துறையில் முயற்சி , கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால், அதனை யாரெல்லாம் தடுக்க முடியாது'' என்று தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

Image caption தனது கடும் முயற்சியால் கால்பந்து வீராங்கனையாகவும், நடுவராகவும் உருவெடுத்த ரூபா தேவி

''கால்பந்து விளையாட்டில் நான் ஜொலிக்க, என் குடும்பம் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. நான் வீட்டில் ஓய்வாக இருந்தால், ஏன் விளையாட போகவில்லை? என்று கேட்குமளவுக்கு என் வீட்டில் உள்ளோர் என்னை ஊக்குவித்தது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. சில உறவினர்கள் நான் கால்பந்து விளையாடுவதை பரிகாசம் செய்தாலும், என் பெற்றோர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்'' என்று தன் சிறு வயது போராட்டங்களை ரூபா நினைவு கூர்ந்தார்.

சர்வதேச கால்பந்து நடுவரின் சவால்கள்

மற்ற விளையாட்டுகளில் நடுவராக இருப்பதை விட கால்பந்து விளையாயத்தில் நடுவராக இருப்பது மிகவும் சவால் மிக்கது என்று தெரிவித்த ரூபா தேவி, '' மற்ற விளையாட்டுகளில் நடுவராக இருப்பதை விட கால்பந்து விளையாட்டில் நடுவர்களின் பணி சிரமமானது. விளையாட்டு வீராங்கனைகளுக்கு இணையாக நடுவர்கள் களத்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ஓவ்வொரு போட்டி மற்றும் தொடருக்கு முன்பும், கால்பந்து நடுவர்கள் வீரர்களை போல தங்கள் உடல் தகுதியை கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும்'' என்று கூறினார்.

Image caption சவால் மிக்கது கால்பந்து நடுவர் பணி

ஃபிஃபா நடுவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தனக்கு முதலில் அறிவிக்கப்பட்ட நெகிழ்வான தருணம் குறித்து ரூபா தேவி நினைவு கூறுகையில்,'' ஜனவரி 1, 2016-யன்று நான் ரெயிலில் ஒரு கால்பந்து போட்டிக்காக ஜபல்பூருக்கு சென்ற போது, என் நண்பர்கள் தொடர்ந்து என் மொபைலில் அழைப்பு விடுத்தனர். ஆனால், என் மொபைலில் 'சார்ஜ்' குறைவாக இருந்ததால் நான் அந்த அழைப்புகளை எடுக்கவில்லை.'' என்று ரூபா தேவி தெரிவித்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், '' பிறகு ஜபல்பூரில் நாங்கள் தங்கும் விடுதிக்குள் நான் சென்றடைந்தவுடன், அனைவரும் உற்சாக கரகோஷம் எழுப்பினர். அப்போதும் எனக்குப் புரியவில்லை. பிறகு தான், நான் ஃபிஃபா நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து கொண்டேன். அது எனக்கு புத்தாண்டு பரிசாக உணர்ந்தேன்'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன்.

கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா?

கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை ஊடகங்கள் கால்பந்து விளையாட்டுக்கு தருவதில்லை என்று குறிப்பிட்ட ஃ பிஃபாவின் முதல் தமிழக பெண் நடுவரான ரூபா, ''போதுமான விளையாட்டு போட்டிகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் கால்பந்து விளையாட்டை எவ்வாறு மேம்படுத்த முடியும்?'' என்று வினவினார்.

Image caption கால்பந்து விளையாட்டு தனக்கு எல்லாம் என தெரிவித்த ரூபா தேவி

''என் குடும்பத்தினரின் வருமானம் மிகவும் குறைவு. பொருளாதார சிக்கல்கள் மற்றும் எண்ணற்ற சிரமங்களை மறக்கவே நான் ஆரம்பத்தில் விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். விளையாட்டில் ஏதாவது சாதித்தால், அது என் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் உற்சாகம் தரும் என்பது என் சிறு வயதில் ஆழமாக என் மனதில் பதிந்தது. அதனை நோக்கியே நான் பயணித்தேன். அதையும் பொருட்படுத்தாமல் என் இலக்கை நோக்கி சென்றேன்'' என்று கூறிய ரூபா '' ஏரளாமான இடையூறுகளை நான் சந்தித்துள்ளேன். இனியும் என் பாதையில் தடைகள் வரும். ஆனால், நான் அவற்றை தாண்டி செல்லும் திடமுண்டு'' என்று உறுதியாக ரூபா தேவி தெரிவித்தார்.

''இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கள் ஒழுக்கம் மற்றும் பயிற்சியில் சிறந்து விளங்க வேண்டும். தனக்கு விருப்பமானதை செய்யும் போது மற்றவர்களை, மூத்தவர்களை மதிப்பதும் மிக அவசியம்'' என்று வருங்கால விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனது ஆலோசனைகளாக ரூபா தேவி குறிப்பிட்டார்.

தொடர்புடைய தலைப்புகள்