4 - 0: சென்னை டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த ஐந்தாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 4 -0 என்று கைப்பற்றியுள்ளது.

ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

ராஜ்காட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. விசாகப்பட்டனத்தில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

மொகாலியில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. பின்னர், மும்பையில் நடைபெற்ற நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்களில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

விசாகப்பட்டினம் டெஸ்ட் வெற்றி குறித்து படிக்க: கிரிக்கெட்: 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ( டிசம்பர் 16), இவ்விரு அணிகளுக்கும் இடையே ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னையில் தொடங்கியது

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இங்கிலாந்து அணியின் மொயீன் அலி அற்புதமாக விளையாடி சதமடித்தார். இறுதியில், அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் எடுத்தது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

1 ரன்னில் இரட்டை சதத்தை இழந்த லோகேஷ் ராகுல்

தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 759 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இந்திய தொடக்க ஆட்டகக்காரர் லோகேஷ் ராகுல் 199 ரன்கள் எடுத்தார்.

தனது அறிமுக தொடரிலேயே, இளம் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் எடுத்து சாதனை படைத்தார். பின்னர், இங்கிலாந்து அணி தனது இராண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது.

கருண் நாயர் எடுத்த முச்சதம் குறித்து மேலும் படிக்க: 3-ஆவது டெஸ்ட் போட்டியிலேயே முச்சதம் எடுத்த கருண் நாயர்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

முச்சதம் எடுத்த கருண் நாயர்

இன்று (திங்கள்கிழமை) சென்னையில் நடந்த ஐந்தாம் நாள் ஆட்டத்தில், ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பாதுகாத்து இங்கிலாந்து அணி பொறுமையாக விளையாடியது.

ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் , குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தந்த அழுத்தத்தால் இங்கிலாந்து அணியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி 207 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஏழு விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, சென்னை டெஸ்ட் போட்டியை வென்றது. மேலும் டெஸ்ட் தொடரை 4 -0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

டெஸ்ட் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்ட விராட் கோலி

303 ரன்கள் எடுத்த கருண் நாயர் ஆட்ட நாயகனாகவும், இந்திய அணித்தலைவர் விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.