டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து குக் விலகல்

  • 6 பிப்ரவரி 2017

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து அலிஸ்டெர் குக் விலகியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 32 வயதான அலிஸ்டெர் குக், 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தை வெற்றி பாதையில் அழைத்து சென்றிருக்கிறார்.

இருப்பினும், இந்தியாவில் 4-0 என்ற நிலையில் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியபோது, தன்னுடைய அணித்தலைவர் பதவி தொடர்பாக கேள்விகள் எழுந்திருப்பதாகக் கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

2012 ஆண்டு முதல் கிரிக்கெட் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற அலிஸ்டெர் குக் தற்போது அதில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

"அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவு மிகவும் கடுமையானதாக இருந்தாலும், இங்கிலாந்து கிரிகெட்டு அணியின் நன்மைக்காக உகந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று குக் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது பெரும் பாக்கியம் என்றும், டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடுவதை தொடர்ந்து, முழு பங்களிப்பை வழங்கி, என்னால் முடிந்தவரை அடுத்த இங்கிலாந்து அணித்தலைவருக்கு உதவ தயாராக இருப்பதாக குக் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பதும், 30 சதங்களை விளாசியிருப்பதும் இங்கிலாந்தின் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வேளையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 11,057 ஓட்டங்கள் எடுத்திருக்கும் அலிஸ்டெர் குக், அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

குக்கிற்கு இங்கிலாந்து அதிக நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்று அலிஸ்டெர் குக் அணித்தலைவராக ஆவதற்கு முன்னர் இந்த பொறுப்பில் இருந்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆன்ட்ரூ ஸ்ட்ரோஸ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியை உறுதியுடனும், நம்பிக்கையுடனும், மாபெரும் பெருமையுடனும் குக் வழிநடத்தியதாக ஸ்ட்ரோஸ் புகழ்ந்திருக்கிறார்.

நாட்டின் சிறந்த கிரிக்கெட் அணித்தலைவர்களில் ஒருவராக அவர் பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்